போபால்: மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறும் நிலையில், அடுத்த சில மாதங்களில் மாநில சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா நேற்று, ‘ஜன் ஆசிர்வாத்’ என்ற யாத்திரையை கொடியசைத்து ெதாடங்கி வைத்தார். ஆனால் இந்த நிகழ்ச்சியில் மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான உமாபாரதிக்கு அழைப்பு விடுக்கவில்லை. அதனால் அவர் கடுங் கோபத்தில் உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஒருவேளை அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டிருந்தால், ஒட்டுமொத்த மக்களின் கவனமும் என் மீது விழுந்திருக்கும். அதனால் அவர்கள் (பாஜக தலைவர்கள்) எனக்கு அழைப்பு விடுக்காமல் இருந்திருக்கலாம். கடந்த 2020ல் அவருக்கு (சிவராஜ் சிங் சவுகான்) ஜோதிராதித்ய சிந்தியா உதவியிருந்தால், நான் 2003ல் அவருக்கு ஆட்சி அமைக்க உதவினேன். ஜோதிராதித்ய சிந்தியாவை எனது மருமகனாக நேசிக்கிறேன். யாத்திரையின் தொடக்க விழாவிற்கு என்னை அழைக்கவில்லை.
ஆனால் அதற்கு நான் தகுதியானவள். அங்கு நான் செல்லாவிட்டாலும் கூட, பாஜகவுக்காக தொடர்ந்து பிரசாரம் செய்து வருவேன். வரும் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்’ என்றார். ஏற்கனவே சிவராஜ் சிங் சவுகானுக்கும், உமா பாரதிக்கும் மோதல் நீடித்து வரும் நிலையில், தற்போது அழைப்பு விடுக்காத விவகாரம் மாநில பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.