Thursday, February 22, 2024
Home » ரிஷப ராசி கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

ரிஷப ராசி கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

by Kalaivani Saravanan

முனைவர் செ.ராஜேஸ்வரி

ரிஷப ராசிக்காரர் அலுவலகத்திலும் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் மிகவும் மிடுக்காக தோரணையாக இருப்பர். ஆண்கள் பொதுவாக மீசை, தாடி வைக்க விரும்புவதில்லை. கிளின் ஷேவ் செய்வதில் விருப்பம் உடையவர். கொஞ்சம் பெண்மை கலந்த நளினம் இருக்கும் புன்சிரிப்பு தான் சிரிப்பார். சத்தம் போட்டு சிரிக்கவோ பேசவோ மாட்டார். லைட் கலரில் உடை உடுத்துவார். நிதானமாக அசையாமல் நடப்பார். சுத்தமாகவும் மென்மையான சென்ட் அல்லது பெர்ஃப்யும் வாசனையுடன் இருப்பார். சிலர் ஜவ்வாது, சந்தனம் பயன்ப்படுத்துவர்.

சொகுசுப் பேர்வழிகள்

ரிஷப ராசிக்காரர் எதற்கும் உடம்பை அலட்டிக்கொள்வதில்லை. எந்த வேலை செய்தாலும் நாசுக்காக செய்து சொகுசாக வாழ வேண்டும் என்று நினைப்பார். வியர்வை, அழுக்கு, தூசி ஆகியவை இவருக்கு ஆகவே ஆகாது. கிரவுட் (crowd) இவர் கிட்ட நெருங்கவே கூடாது. ரிஷப ராசி மாணவர் மிகவும் அக்கறையோடு படிப்பை நேசித்து படிக்கின்றவர். அறிவியல் பாடங்களில் அழகாகப் படம் வரைந்து பல வண்ணங்களை பயன்படுத்துவர். ஓவியம் தீட்டுவதில், காவியம் எழுதுவதில் கெட்டிக்காரர். கவிதை எழுதுவார். கட்டுரை எழுதுவார்.

ஆனால் இதில் பெரிய ஆர்வம் இருக்காது. தங்களுக்குப் பிடித்த பாடத்தில் 90க்கு மேல் மதிப்பு மதிப்பெண் வாங்கும் இவர்கள் படிக்க பிடிக்காத பாடத்தில் ‘கோட்டை’ விடமாட்டார்கள் பாஸ்மார்க் வாங்கி விடுவார்கள். இவர்களுக்கு நினைவாற்றல் மிகுதி. எனவே மேஷ ராசிக்காரர்கள் போல ‘கேர்லஸ் மிஸ்டேக்’ விடமாட்டார். கவனக்குறைவு இருக்காது. எந்த பாடத்தைப் படித்தாலும் ஒரு ஒழுங்கு முறையைப் பின்பற்றுவார். மிகவும் நுணுக்கமாக படிப்பார். மேலோட்டமாக வாசித்துச் செல்வதில் இவருக்கு விருப்பம் கிடையாது.

நிதானமே பிரதானம்

வகுப்பில் ஆசிரியர் ஏதேனும் ப்ராஜெக்ட், அசைன்மென்ட், போன்றவை கொடுத்தால் இவர் முந்திக்கொண்டு கை உயர்த்த மாட்டார். அமைதியாக உட்கார்ந்து இருப்பார். ஆசிரியர் இவர் பெயரை அழைத்து நீ இதனைச் செய்கிறாயா என்று கேட்டால் சரி என்று சொல்லி அழகாகச் செய்து முடிப்பார். ரிஷபராசிக்காரருக்கு நிதானமே பிரதானம். உட்கார்ந்த இடத்தை விட்டு அசைய மாட்டார். விளையாட்டுகள் பார்ப்பதில் ஆர்வம் இருக்கும். ஆனால் விளையாடச் செல்வதில் ஆர்வம் இருக்காது. செஸ், காரம்போர்டு போன்றவற்றில் நிபுணராக இருப்பார். மூளை வேலையில் நிபுணர். ரிஷப ராசிக்காரர் பிடித்த வேலையைப், பிடித்த விதத்தில் செய்து, பிடித்த இடத்தில், பிடித்தவர்களோடு பிடித்தபடி வாழ வேண்டும் என்று நினைப்பார்.

அழகியல் ஆர்வம்

சுக்கிரன் ராசிக்காரர் என்பதால் அழகியல் நிபுணராக வரலாம். ஆனால் முடி வெட்ட மாட்டார். உடை அலங்காரம் செய்வார். பூ அலங்காரம் செய்வதில் திறமைசாலி.

சிறந்த நிர்வாகி

மேலாண்மைப் படிப்பு இவருக்கு ஏற்றது. ஈவன்ட் மேனேஜ்மென்ட் சபா செக்ரட்டரி போன்ற பொறுப்புகளை அழகாக நிர்வகிப்பார். ஃபேஷன் டிசைனர், மாடலிங் போன்றவையும் இவருக்கு ஏற்றவை. நகை வியாபாரம், ரத்ன வியாபாரம், ஜவுளி வியாபாரம் (பெரிய அளவில் தொழிற்சாலைகள் வைத்து நிர்வகித்தல்) போன்ற தொழில்கள் பொருத்தமானவை. கோயில் நிர்வாகம் செய்வதில் கெட்டிக்காரர்.

பழம்பெருமையில் ஈடுபாடு

ரிஷப ராசிக்காரர் பழமை விரும்பி என்பதால் நினைவகம் மற்றும் அருங்காட்சியகத்தின் பொறுப்பாளராக இருப்பார். இத்தகைய பணிகளில் திறமையுடன் செயல்படுவார். வரலாறு, கல்வெட்டியல், தொல்லியல், அகழ்வாய்வியல் போன்றவற்றில் ஈடுபாடு இருக்கும். ஆனால் இவர் களத்திற்குப் போய் வெயிலில் மணலில் நிற்க மாட்டார். ஆவணங்கள் கைக்கு வந்த பிறகு அதை வைத்து ஆராய்ச்சி செய்வதில் ஆர்வமும் ஈடுபாடும் உடையவர்.

அரச கட்டளைதான்

ரிஷப ராசிக்காரர் வேலை செய்யும் இடங்களில் யாரையும் கோபமாகவோ எடுத்தெறிந்தோ பேச மாட்டார். மிக மெல்லிய குரலில் பேசுகின்ற இவர் எவ்வளவு மெல்லிய குரலில் பேசினாலும் அதுதான் ஆணை, கட்டளை, உத்தரவு. டாப் மேனேஜ்மென்ட் போஸ்டில் இருந்து நிறுவனத்தை லாபகரமாக நடத்துவதில் வல்லவர். ஏதேனும் பிடிக்கவில்லை என்றால் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறி விடுவார். மேஷ ராசிக்காரர் போல நியாயம்கேட்டு சண்டையிட மாட்டார். வாய்த்தகராறு கூட இல்லாமல் விலகிவிடுவார்.

ரிஷப ராசிக்காரர் கிராமங்களில் மிகப்பெரிய அளவில் நிலஉடைமையாளர்களாக இருப்பார். கட்டுமானத் தொழிலில் (ஆர்க்கிடெக்ட்) வீடு மற்றும் அறைகளின் வடிவமைப்பாளர்களாக, அலங்காரம் செய்பவராக இருப்பார். ஆர்க்கிடெக்சர் இவர்களுக்கு பிடித்த பாடமாக இருக்கும். ஹோட்டல் மேனேஜ்மென்ட் ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் படித்து அந்த பொறுப்பில் இருப்பார்.

நெகட்டிவ் பாயின்ட்

ரிஷப ராசிக்காரரிடம் உள்ள விரும்பத் தகாத ஒரு குணம் என்னவென்றால் சற்று சோம்பேறித்தனம் இருக்கும். எதையும் உடனடியாக படபடவென்று செய்யாமல் நிறைய யோசித்து நிதானமாக செய்ய செய்வார். இதனால் காலதாமதமாக செய்யும் பழக்கம் சிலரிடம் இருக்கும். ஆறு மணிக்கு கிளம்ப வேண்டும் என்றால் 8 மணி வரை நிதானமாக உட்கார்ந்து டிவி பார்த்துவிட்டு அதன் பிறகு குளிக்கச் சென்று 9 மணிக்கு கிளம்புவார். ஆனால் அவருடைய காலதாமதத்தை அவரால் சமாளிக்க முடியும். பொதுவாக இவர்கள் உட்கார்ந்த இடத்தில் வேலை செய்வதை விரும்புவார்களே தவிர பயணங்களில் அல்லது புதியவர்களை கண்டு பார்ப்பதில் பழகுவதில் ஆர்வம் இருக்காது.

ரிஷப ராசிப் பெண்கள்

இவர்கள் பெரும்பாலும் ஓடிஓடி உழைக்க விரும்புவதில்லை. வீட்டில் இருந்தபடி பகுதி நேர வேலை அல்லது சொந்தத் தொழில் செய்ய விரும்புவர். இவர்களுக்கு நேரம் சற்று தாராளமாக தேவை. நேர நெருக்கடி இவர்களுக்குப் பிடிக்காது. எனவே தங்களுடைய சொந்த வேலைகளுக்கும் வீட்டு வேலைகளுக்கும் வெளி வேலைக்கும் தேவையான அளவு நேரம் இருப்பதைப் போல் தங்களுடைய பணிகளைத் தேர்ந்தெடுத்து நேர மேலாண்மை செய்வர்.

படித்த பெண்கள் சிலர் மிகப்பெரிய அதிகாரிகளுக்கு தொழிலதிபர்களுக்கு உதவியாளராக இருப்பார்கள். கிட்டத்தட்ட இவர்களிடமே முழு அதிகாரமும் இருக்கின்ற வகையில் பார்த்துக் கொள்வார்கள். தக்க நேரத்தில் தங்கள் முதலாளிக்கு நல்ல ஆலோசனைகள் வழங்குவார்கள். அலட்டிக்கொள்ள மாட்டார்கள். விருந்தினரை உபசரிப்பதில் விருந்தினர் நிர்வாகம் செய்வதில் வல்லவர்கள். இவர்கள் அடுப்படியில் இருந்து வெந்து போகமாட்டார்கள். ஆனால் ஆட்களை வைத்து வேலை வாங்குவதில் கெட்டிக்காரர்கள்.

படிப்பும் வேலையும்

சட்டம், கணிதம், அழகியல், அணிமணி, கலை மற்றும் கலாச்சாரம், வரலாறு போன்ற படிப்பு களைத் தெரிவு செய்வர். ரிஷப ராசிக்காரர் சட்ட வல்லுனராக வர வாய்ப்பு உண்டு. கணக்கு, கணக்கியல் போன்றவை படித்து ஆடிட்டர் அக்கவுண்டன்ட் போன்ற பொறுப்புகளுக்கு வருவார்கள். வங்கிப் பணிகளுக்குச் செல்வர். ஷேர் மார்க்கெட் இன்வெஸ்டார் போன்றவை இவருக்கு ஏற்றவை.

You may also like

Leave a Comment

3 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi