சென்னை: இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது 57வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு பலரும் ஏஆர் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் ரஹ்மானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், “இசையால் உலகையும் உள்ளங்களையும் வென்று, என்றும் அன்பின் பாதையில் பயணிக்கும் தமிழ்ப்புயல் ரஹ்மானுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்.” என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , துள்ளல் இசையாலும் – தூய்மையான தமிழுணர்வாலும் நம்மை ஆட்கொண்டிருக்கும் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் சாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்ல உடல்நலத்தோடு இன்னும் பற்பல ஆண்டுகள் அவரது இசைப்பயணம் தொடரட்டும் என்று தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “உங்களுடன் மீண்டும் பணியாற்ற காத்திருக்கிறேன்; இன்னும் சிறப்பான இசையை எதிர்பார்க்கிறோம்,” எனத் தெரிவித்துள்ளார்.