Thursday, May 9, 2024
Home » சம்பா, தாளடி பருவத்தில் 2,53,766 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

சம்பா, தாளடி பருவத்தில் 2,53,766 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

by Lakshmipathi

*உடனடி பண பட்டுவாடாவால் விவசாயிகள் மகிழ்ச்சி

தஞ்சை : தஞ்சை மாவட்டத்தில் நடப்பு சம்பா, தாளடி பருவத்தில் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளது. இதுவரை 513 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 2,53,766 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி பருவத்தில் தற்போது வரை 1,18,623 எக்டர் பரப்பில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு 60 சதவீதம் பரப்பில் அறுவடை பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் சன்ன ரகம் ஒரு கிலோ ரூ.23.10க்கும், மோட்டா ரகம் ரூ.22.65க்கும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் தற்போது வரை 513 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 2,53,766 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

விற்பனை செய்யப்படும் நெல்லிற்கு உண்டான தொகை உடனடியாக விவசாயிகளுக்கு ரூ.2 கோடி மின்னணு வங்கிப்பண பரிவர்த்தனை மூலமாக வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட முழுவதும் தற்போது நெல் அறுவடை முழு வீச்சில் நடந்து வருகிறது.

இதனால் நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசின் இந்த நடவடிக்கைக்கு விவசாயிகள் பாராட்டு தெரிவிக்கின்றனர். நெல் தேக்கமடையாமல் தினமும் குறைந்தபட்சம் ஆயிரம் மெ.டன். ஒவ்வொரு நேரடி கொள்முதல் நிலையங்களிலும் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்ற ஆண்டை காட்டிலும் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்டம் முழுவதும் விவசாயிகள் மற்றும் தனியார் நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்ததன் அடிப்படையில் பெல்ட் டைப் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு மணிக்கு வாடகையாக ரூ.2,500/-,ம் டயர் டைப்க்கு ரூ.1,750/-வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிர்ணயம் செய்யப்பட்ட இந்த வாடகைத் தொகைக்கு மிகாமல் விவசாயிகளிடமிருந்து வசூல் செய்து கொண்டு அறுவடை இயந்திர உரிமையாளர்கள் இயந்திரங்களை பணியில் ஈடுபடுத்தி ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கலெக்டர் கேட்டு கொண்டுள்ளார். நடப்பு கோடை பருவத்தில் 1200 எக்டர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 1,14,601 எக்டர் சம்பா பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

வாடகை விதி மீறல் புகார் தர அழைப்பு

நிர்ணயிக்கப்பட்ட வாடகையை விட கூடுதலாக விவசாயிகளிடமிருந்து வாடகை வசூல் செய்தால், புகார் தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் வருவாய் கோட்ட அலுவலர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம். மேலும் மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கிவரும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண், தஞ்சாவூர், செயற்பொறியாளர்(வே.பொ) எண். 90035 23343, தஞ்சாவூர், உதவி செயற்பொறியாளர் (வே.பொ) எண். 94431 17138, கும்பகோணம், உதவி செயற்பொறியாளர்(வே.பொ) எண். 94436 78621, பட்டுக்கோட்டை, உதவி செயற்பொறியாளர் (வே.பொ) எண். 99761 93110 மற்றும் தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலர் எண். 94420 93161, தஞ்சாவூர், மோட்டார் வாகன ஆய்வாளர் எண். 93848 08537, கும்பகோணம், மோட்டார் வாகன ஆய்வாளர் எண். 99947 72510, பட்டுக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் எண். 93848 08366 என்ற எண்களில் புகார் தெரிவித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

* நெல் தேக்கமடையாமல் தினமும் குறைந்தபட்சம் ஆயிரம் மெ.டன். ஒவ்வொரு நேரடி கொள்முதல் நிலையங்களிலும் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்ற ஆண்டை காட்டிலும் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

one × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi