திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா பெங்களூருவில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், எர்ணாகுளத்தை சேர்ந்த தாது மணல் நிறுவனம் வீணாவின் சாப்ட்வேர் நிறுவனத்திற்கு ரூ1.72 கோடி பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த விவரம் தாது மணல் நிறுவனத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் தெரியவந்தது. வீணாவின் நிறுவனத்திடம் இருந்து பெற்ற சேவைக்காக ரூ1.72 கோடி பணம் கொடுத்ததாக அந்த நிறுவனம் கூறியது. ஆனால் வீணாவின் நிறுவனத்திடமிருந்து எந்த சேவையும் பெறவில்லை என்று வருமானவரித்துறை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வருமானவரித்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே தாது மணல் நிறுவனத்திற்கு வீணாவின் நிறுவனம் அளித்த சேவைக்காகத் தான் பணம் கொடுக்கப்பட்டது என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் கூறினர். ஆனால் தாது மணல் நிறுவனத்திடம் இருந்து சேவைக்காக ரூ1.72 கோடி பணம் பெற்றிருந்தால் அதற்கான ஜிஎஸ்டி தொகை ரூ31 லட்சத்தை வீணா கட்டினாரா என்பது குறித்த தகவலை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ மேத்யூ குழல்நாடன் கேள்வி எழுப்பினார். இது குறித்து கேரள நிதியமைச்சர் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்கிடையே வீணாவின் நிறுவனம் ஜிஎஸ்டி கட்டியதற்கான ஆவணங்களை விரைவில் வெளியிடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் கூறினர். ஆனால் இதுவரை அதற்கான ஆவணங்கள் எதுவும் வெளியிடப்பட வில்லை. இந்த விவகாரம் கேரள அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் வீணாவின் நிறுவனம் ஜிஎஸ்டி தொகையை கட்டியுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த வரித்துறை ஆணையருக்கு கேரள நிதியமைச்சர் பாலகோபால் உத்தரவிட்டுள்ளார்.