*போலீசார் பேச்சுவார்த்தை
நெய்வேலி : நெய்வேலியில் வாலிபர் மர்ம சாவு விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த கீழக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராஜ்குமார் (36). இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர்.
இவர் நேற்று முன்தினம் இரவு என்எல்சி ஆர்ச் கேட் அருகில் தில்லைநகர் பகுதியில் பைக்கில் வந்தார். அப்போது அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த நெய்வேலி நகர போலீசார் ராஜ்குமார் பைக்கை நிறுத்தி உரிய ஆவணங்களை கேட்டனர். ராஜ்குமார் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் உரிய ஆவணங்கள் இல்லாததால் போலீசார், ராஜ்குமாரின் ைபக்கை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். இதையடுத்து போலீசார் உரிய ஆவணங்களை சமர்பித்து பைக்கை பெற்றுக் கொள்ளுமாறு கூறி ராஜ்குமாரை வீட்டிற்கு செல்லுமாறு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் கும்பகோணம்-விக்கிரவாண்டி நெடுஞ்சாலை வழியாக நடந்து சென்றார்.
இதற்கிடையே காவல் நிலையம் எதிரில் உள்ள பழக்கடை முன்பு நள்ளிரவு 1 மணி அளவில் ராஜ்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அடையாளம் தெரியாத வாகனம் மோதி அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜ்குமாரின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 8 மணி அளவில் நெய்வேலி நகர காவல்நிலையம் எதிரே திரண்டனர். ராஜ்குமார் உயிரிழப்புக்கு போலீசார்தான் காரணம் எனக்கூறி, சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கடலூர் எஸ்பி ராஜாராம் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையடுத்து போலீசார், ராஜ்குமாரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை மறியலால் சென்னை-கும்பகோணம் சாலையில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து
பாதிக்கப்பட்டது.
கார் மோதும் வீடியோ காட்சி
உயிரிழந்த ராஜ்குமார் உறவினர்கள், நெய்வேலி காவல்துறையை கண்டித்து சாலை மறியல் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அவர்களிடம் நெய்வேலி போலீசார், காவல் நிலையத்தில் இருந்து ராஜ்குமார் பத்திரமாக வெளியே சென்ற வீடியோ பதிவை காட்டினர்.
மேலும் ராஜ்குமார் சாலையில் நடந்த செல்லும்போது நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் அதிவேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இதற்கான வீடியோ ஆதாரத்தை போலீசார் கைப்பற்றி வேகமாக காரை ஒட்டி உயிரிழப்பை ஏற்படுத்திய கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.