Monday, June 3, 2024
Home » நீட் விலக்கு கோரி பெறப்பட்ட 85 லட்சம் கையெழுத்துகள் விரைவில் குடியரசுத் தலைவரிடம் வழங்கப்பட உள்ளன: உதயநிதி ஸ்டாலின்

நீட் விலக்கு கோரி பெறப்பட்ட 85 லட்சம் கையெழுத்துகள் விரைவில் குடியரசுத் தலைவரிடம் வழங்கப்பட உள்ளன: உதயநிதி ஸ்டாலின்

by Lavanya
Published: Last Updated on

சென்னை: நீட் விலக்கு கோரி பெறப்பட்ட 85 லட்சம் கையெழுத்துகள் விரைவில் குடியரசுத் தலைவரிடம் வழங்கப்பட உள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, இந்திய ஒன்றியத்தில் இப்படி ஒரு மாநாடு நடந்திடவேயில்லை என்கிற வகையில், நம் திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டை மாபெரும் வெற்றி மாநாடாக நடத்தி முடித்துள்ளோம். மாநில உரிமை மீட்பு முழக்கத்தை முன் வைத்து நடைபெற்ற நம் மாநாட்டின் வெற்றிக்காக உழைத்த கழக நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள் வருகை தந்து சிறப்பித்த லட்சோப லட்சம் இளைஞரணி தம்பிமார்கள் அனைவருக்கும் எனது உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வழக்கமாக தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் மாநாட்டினை நடத்துவார்கள். ஆனால், இந்த முறை நம் தி.மு.கழக இளைஞர் அணிக்கு மாநாடு நடத்துகிற வாய்ப்பை நம் கழகத் தலைவர் முதலமைச்சர் அளித்தார்கள்.2007ம் ஆண்டு இளைஞரணியின் முதல் மாநில மாநாட்டை நடத்திக் காட்டிய நம் முதலமைச்சர், 2024ல் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்திட பணித்ததோடு, அதற்கான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தந்தார்கள். கழகத் தலைவர் நம் முதலமைச்சருக்கு என் அன்பும், நன்றியும். நம்முடைய சேலத்துச்சிங்கம் வீரபாண்டியாரின் சேலம் மண்ணில் இந்த மாநாட்டை நடத்துவது என்று முடிவான போதே, இந்த மாநாட்டின் வெற்றியும் தீர்மானிக்கப்பட்டுவிட்டது.
மாநாடு நடக்கும் இடம் சேலம் என்று நமது தலைவர் அறிவித்த அடுத்த நொடியில் இருந்து வில்லிலிருந்து புறப்படும் அம்பு போல கழக முதன்மை செயலாளர் அமைச்சர் அண்ணன் கே.என்.நேரு களத்தில் இறங்கி செயலாற்றத் தொடங்கினார்கள்.

நமது தலைவர், அவர்களது உரையில் “மாநாடு நடக்கும் இடத்தில் நேரு இருப்பார், அல்லது, நேரு இருக்கும் இடத்தில் மாநாடு நடக்கும்” என்று பாராட்டியதைப் போல; தான் ஒரு செயல் புயல் என்று மாநாட்டின் ஏற்பாட்டின் மூலம் நிரூபித்தார். மாநாட்டுக்கான இடத்தைத் தேர்வு செய்வதில் தொடங்கி அனைவருக்கும். உணவு பரிமாறுதல் வரை அனைத்தையும் திட்டமிட்டு ‘Zero Food Waste’ என்று சொல்லக்கூடிய அளவுக்கு நேர்த்தியாக மாநாட்டின் ஏற்பாட்டுகளை அண்ணன் செய்திருந்தார்கள். இந்த ஏற்பாடுகள், மாநாடு என்றால் அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இலக்கணமே வகுத்திருக்கின்றன. இந்த மாநாட்டினை தங்கள் வீட்டு நிகழ்ச்சி என்ற உணர்வோடு ஒட்டுமொத்த சேலம் மாவட்டக் கழகத்தினரும் களத்தில் இறங்கி மாநாட்டின் வெற்றிக்காக உழைத்தார்கள்.

சேலம் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் ஆர்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சேலம் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் எஸ்.ஆர்.சிவலிங்கம், சேலம் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் டி.எம்.செல்வகணபதி என மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆற்றலுடன் செயல்பட்டு மாநாட்டினை தூக்கி உயர்த்தினார்கள். சேலத்தில் நடைபெற்ற இளைஞரணி மாநாடு, நம் இயக்கத்துக்கான மாநாடு மட்டுமல்ல. இந்தியாவுக்கான மாநாடு என்பதை உணர்ந்து, மாநாட்டின் வெற்றிக்காக தமிழ்நாடெங்கும் பயணித்தோம். இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டங்களின் வாயிலாக மாநாட்டுக்கு வருமாறு அனைவரையும் நேரடியாக அழைத்தோம். அந்தக் கூட்டங்களே ஒரு மினி மாநாடு போல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

செயல்வீரர்கள் கூட்டங்களில் பார்த்த அத்தனை முகங்களையும் மாநாட்டுத் திடலில் பார்த்தது பெரும் மகிழ்ச்சியை தந்தது. இந்தப் பணிகளை எல்லாம் ஒருங்கிணைத்த கழகத்தின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் மாவட்ட ஒன்றிய நகர, பகுதி, பேரூர் ஊர்க்கிளை நிர்வாகிகள் அனைவருக்கும் எனது நன்றி. குறிப்பாக மாநாட்டுக்கான நிதியை வாரி வழங்கிய மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கு இளைஞரணி சார்பில் என் அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சொல்லை செயலாக்க எட்டுத்திக்கும் களப்பணியாற்றிய இளைஞரணியின் தளபதிகளான நம் மாநிலத்துணைச் செயலாளர்கள் மாவட்ட மாநகர,மாநில,ஒன்றிய நகர, பகுதி, வட்ட, பேரூர் ஊர்க்கிளை அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடெங்கிலிருந்தும் பணிகள் செய்யப்பட்டாலும், அவை ஒருங்கிணைக்கப்பட்ட இடம் சேலம் மாவட்டம். அந்த வகையில், சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் சகோதரர்கள் வீரபாண்டி ஆ.பிரபு. அருண் பிரசன்னா மற்றும் மணிகண்டன் ஆற்றிய பணிகள் போற்றுதலுக்குரியவை மேலும், பணிகளை ஒருங்கிணைக்க நிதிக்குழு, மேடை நிர்வாகக் குழு, வரவேற்புக்குழு, சமூக வலைத்தளக்குழு, என 23 குழுவினரும், தேனீக்களைப் போல ஓய்வறியாது உழைத்து நம் மாநாட்டை முழுமையடையச் செய்தார்கள். பெரியார் நுழைவு வாயில் அண்ணா திடல் கலைஞர் அரங்கம் பேராசிரியர் மேடை வீரபாண்டியார் கொடிமேடை கழக முன்னோடிகள் வீரபாண்டி, ஆ.ராஜா வீரபாண்டி, ஆ.செழியன் சந்திரசேகரன், நீட் ஒழிப்பு போராளிகளான தங்கை அனிதா தம்பி தனுஷ் பெயரில் நுழைவு வாயில்கள் அமைத்து, மாநாட்டு பந்தலை 9 லட்சம் சதுர அடி பரப்பளவில் உருவாக்கித் தந்த அண்ணன் பந்தல் சிவா அவர்களுக்கும், அன்பகம் வடிவிலான நுழைவு வாயில் அமைத்து நம் முரசொலி மாறன் அவர்களுடைய பெயரில் இளைஞரணி புகைப்படக் காட்சியை ஏற்பாடு செய்த சுப்பு அவர்களுக்கும் என் அன்பும், நன்றியும்.

பொதுவாகவே, அரசியல் கட்சிகளின் மாநாடு என்றால் சிலர் திட்டமிட்டு மக்கள் மத்தியில் ஒரு விதமான எதிர்மறை எண்ணத்தை கிளப்பி விடுவார்கள். ஆனால், இந்த மாநாடு அந்த எதிர்மறை எண்ணங்களை நேர்மறையாக மாற்றி இருக்கிறது. அந்த அளவுக்கு கட்டுப்பாடு காத்து மாநாட்டின் வெற்றிக்கு ஒத்துழைத்த இளைஞர் அணியின் தோழர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மாநாட்டுக்கு முந்தைய நாள் நிகழ்ச்சிகளே, மாநாட்டின் வெற்றியை முன்னறிவிப்பு செய்கின்ற வகையில் நடைபெற்றன. சென்னை அண்ணா சாலையில் நாம் தொடங்கி வைத்த மாநாட்டுச் சுடர், செங்கல்பட்டு விழுப்புரம் – கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் தாண்டி மாநாட்டுத்திடலுக்கு வந்து சேர்ந்தது. 3 இளைஞரணி துனை செயலாளர்கள் நம் கைகளில் வழங்க, அதனை முதலமைச்சர் திருக்கரங்களில் ஒப்படைத்தோம். பின்பு அந்த சுடரை, மாநாட்டில் அமைக்கப்பட்டிருந்த மாநாட்டு ஒளிச்சுடர் மேடையில் ஏற்றி வைத்து மகிழ்ந்தோம்.

நமது மாநாடு இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதற்கு நமது கழக நிர்வாகிகளும் இளைஞரணி நிர்வாகிகளும் மாநாடு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்த்தது தான் முக்கிய காரணம். குறிப்பாக, கழக ஐ.டி.விங் தோழர்கள், சமூக வலைத்தள நன்னார்வலர்கள், மாநாட்டின் நோக்கம் குறித்து சமூக ஊடங்களில் தொடர்ச்சியாக கருத்துக்களை பதிவிட்டு மாநாட்டின் முக்கியத்துவத்தை எட்டுத்திக்கும் தெரியச்செய்தனர். சுவரெழுத்து விளம்பரங்கள், சமூக ஊடகங்களில் பரப்புரை, என்று கடந்த சில மாதங்களாகவே எங்கு திரும்பினாலும் நமது மாநாட்டைப் பற்றிய பேச்சாக இருந்தது. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போல் DMK Ridersன் தமிழ்நாடு தழுவிய பிரச்சார பயணம் இளைஞர்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் DMK Riders இருசக்கர வாகன அணி வகுப்பு நடந்து “மாநில உரிமைகள் மீட்பு” என்னும் நமது நோக்கத்தை தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தது.100 இருசக்கர வாகனங்களில் குமரி முனையில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே இருந்து புறப்பட்டு தமிழ்நாடு முழுவதும் சுற்றி இறுதியில் மாநாட்டின் திடலுக்கு வந்து சேரும் போது பல்கிப்பெருகி 1000 வாகனங்களாக நம் கழகத்தலைவர் முதலமைச்சர் முன்பாக அணிவகுத்துச் சென்ற காட்சி நம் கண்களில் அப்படியே நிற்கிறது. அதில் பங்கேற்ற அத்தனை DMK Riders-க்கும் எமது நன்றி.
முக்கியமாக வானத்தை திரையாக்கி, ட்ரோன்களை தூரிகையாகக் கொண்டு நடத்தப்பட்ட ட்ரோன் ஷோ, இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஒரு புதிய நவீன நிகழ்ச்சியாக நம் மாநாட்டிற்கும் முந்தைய நாள் நடைபெற்றது.

தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் கழகத் தலைவர் நம் தாய்த்தமிழ்நாடு உயிருக்கு நிகரான உதயசூரியன் கலைஞர் தமிழ் வெல்லும் வாசகம் இளைஞரணியின் இலட்சினை ஒற்றைச் செங்கலைத் தாங்கிய எனது உருவம் என வானில் நட்சத்திரங்களுக்குப் போட்டியாக ட்ரோன்கள் மின்னின. அந்தக் கண்கொள்ளாக் காட்சி எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் நம் நெஞ்சத்திலிருந்து அகலாது. அதை சிறப்பாகவும் நேர்த்தியாகவும் ஏற்பாடு செய்த குழுவினருக்கு என் நன்றி.கழக மேடைகளில் இசை முழக்கம் செய்கின்ற அண்ணன் இறையன்பன் குத்தூஸ் அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி முந்தைய நாளே மாநாட்டுத்திடலில் குவிந்த இளைஞர் படையின் செவிக்கு விருந்தாக அமைந்தது. அவருக்கும் என் நன்றி. மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் நிகழ்த்தப்பட்ட உரைகள் அனைத்தும் கருத்துக் கருவூலங்களாக இருந்தன. நேரத்தின் நெருக்கடி காரணமாக ஒவ்வொரு பேச்சாளருக்கும் 10 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்க முடிந்த இக்கட்டான நிலை.

எனினும், ஒதுக்கப்பட்ட நேரத்திலும் அடைமழை போல கருத்துக்களை பொழிந்த அமைச்சர்கள் – சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் திராவிட இயக்கப் பேச்சாளர்களுக்கு இளைஞரணியின் நன்றிகள். நமது தலைவர் அறிவுறுத்தலின்படி, உரையாற்றிய பேச்சாளர்களிடமிருந்து முழு உரைகளை எழுத்து வடிவில் கேட்டுப் பெற்று முரசொலியில் வெளியிட ஏற்பாடு செய்யவுள்ளோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். கழகத்தின் கம்பீரக் கொடியினை சேலத்துச் சிங்கம் வீரபாண்டியார் நினைவு கொடி மேடையில் ஏற்றி வைத்த கழகத் துணைப் பொதுச் செயலாளர் அத்தை கனிமொழி அவர்களுக்கும். மாநாட்டு வெற்றியைப் பார்த்து பூரித்து உரை நிகழ்த்திய கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன் மாமா அவர்களுக்கும். பொருளாளர் டி.ஆர். பாலு மாமா அவர்களுக்கும் என் நன்றிகள்.

திராவிட இயக்க மாநாடுகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் தான் நாட்டின் எதிர்காலச் சட்டங்கள் என்பார்கள். அந்த வகையில் நமது மாநாட்டுத் தீர்மானங்கள் அத்தனையும் ஆதிக்கத்தையும் பாசிஸ்ட்டுகளையும் குறிவைத்து தாக்கும் கொள்கை ஏவுகணைகள். அத்தகைய வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்கள் அத்தனையும் கரவொலி எழுப்பி நிறைவேற்றி தந்த எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய இளைஞர் அணியின் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 25 தீர்மானங்களையும், மாநிலம் முழுக்க பொதுக்கூட்டங்களின் வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்க்கவுள்ளோம். நீட் ஒழிப்பு என்பது கழகத்தின் உரிமை முழக்கமாக மாறியுள்ள சூழலில், களத்திலும் இணையத்திலும் நீட் விலக்கு, நம் இலக்கு என 85 லட்சம் கையெழுத்துகளை பெற்றிருந்தோம். அவற்றில் அஞ்சல் அட்டைகளில் நாம் பெற்ற கையெழுத்துகளை மாநாட்டு மேடையில் நம் தலைவர் கரங்களில் ஒப்படைத்தோம். அவை, இந்திய குடியரசுத்தலைவர் அவர்களிடம் விரைவில் வழங்கப்படவுள்ளன. இந்த கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று உழைத்த கழக நிர்வாகிகள் இளைஞர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, மாணவரணி, மருத்துவ அணி உள்ளிட்ட அனைத்து அணிகளுக்கும், பேரலையாக திரண்டு வந்து கையெழுத்திட்ட தமிழ்நாட்டு மக்களுக்கும் என் அன்பும். நன்றியும்.

மேலும், மாநாட்டுத்திடல் மட்டுமன்றி சேலம் மாவட்டம் முழுவதுமே பாதுகாப்பு பணிகளை ஒருங்கிணைத்த காவல்துறை அதிகாரிகள், அலுவலர்கள் மாநாட்டிற்கான தன்னார்வலர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். மாநாட்டுத்திடலில் சமையற்கூடத்தில் பணியாற்றியவர்கள், உணவு பரிமாறியவர்கள், ஒளி ஒலி அமைத்தவர்கள் அனைவருக்கும் என் நன்றி நேற்று வரை நமது மாநாடு தான் தமிழ்நாட்டின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் மாநாடு பெற்ற பிரம்மாண்ட வெற்றியின் விளைவு, நாடாளுமன்ற தேர்தலில் நமது கழகம் பெறப்போகிற மாபெரும் வெற்றி எல்லோரின் எதிர்பார்ப்பாக மாறியிருக்கிறது. எனவே, மாநாடு முடிந்து விட்டது சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என்று இளைஞர் அணி தோழர்கள் எண்ணிவிட வேண்டாம். நாடாளுமன்ற தேர்தல் மிக அருகில் வந்துவிட்டது இதுவரை உழைத்துவிட்டு இனி ஓய்வெடுத்தால் அது முயல் – ஆமை கதையாய் முடிந்து விடும். உங்களின் சுறுசுறுப்பை நீங்கள் மேலும் கூட்ட வேண்டும். நமது மாநாட்டின் நோக்கம் “மாநில உரிமை மீட்பு”.

அந்த நோக்கத்தை நாம் வென்றாக வேண்டுமென்றும். இன்னார்க்கு இன்னது என்று சொல்லும் பாசிஸ்ட்டுகளையும் அவர்களுக்கு ஆமாம் சாமி போடும் அடிமைகளையும் தேர்தல் களத்தில் வீழ்த்திடுவோம். எல்லாருக்கும் எல்லாம் எனும் திராவிட மாடல் தத்துவம் இந்திய ஒன்றியம் முழுவதும் பரவுகின்ற வகையில் அயராது உழைக்க இளைஞரணி மாநாடு எல்லோருக்கும் உத்வேகம் தந்திருக்கிறது. மத அரசியலா – மனித அரசியலா? மனு நீதியா – சமூக நீதியா? மாநில உரிமையா? பாசிச அடக்குமுறையா? என ஒரு கைபார்த்துவிடுவோம். வெல்லப்போவது சமூக நீதியும் – சமத்துவமுமே என்பதை இளைஞர் அணி மாநில மாநாடு நமக்கு கோடிட்டு காட்டியிருக்கிறது. இந்த நேரத்தில் மாநாட்டில், தலைவரின் உரையிலிருந்து இந்த தேர்தல் நேரத்தில் நான் அடிக்கோடிட்டு காட்ட விரும்பும் கருத்துக்களை கூற விரும்புகிறேன்.நாடும் நமதே. நாற்பதும் நமதே. இந்தியாக் கூட்டணி வென்றால் கலைஞரின் முழக்கமான “மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி” என்பது இந்தியாவின் முழக்கமாகும்.

• நரேந்திர மோடி 2 முறை பிரதமராகி இருக்கிறார். அந்த இரண்டு தேர்தல்களிலும் தமிழ்நாட்டு மக்கள் அவரை ஏற்கவில்லை. இப்போது 3-ஆவது முறையும் தமிழ்நாடு அவரை ஏற்கப் போவதில்லை. இந்த வார்த்தைகள் மூலம், நமக்கு வழிகாட்டுதலையும் உற்சாகத்தையும் நமது கழகத் தலைவர் முதலமைச்சர் தந்துள்ளார்கள். முக்கியமாக கழகத்தலைவர் கூறிய இன்னொரு கருத்தையும் நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்த மாநாட்டில் கூடியிருக்கும் உங்களையெல்லாம் பார்க்கும் போது நான் லட்சம் இளைஞர்களின் சக்தியை பெறுகிறேன். இங்கே உதயநிதி மட்டுமல்ல. இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவரும் என்னுடைய மகன் தான். திராவிட இயக்கத்தின் கொள்கை வாரிசு தான்,” என்று சொன்னார்களே,அதுதான் என்னை பொருத்தவரை நமது மாநாட்டு வெற்றியின் அளவீடு. லட்சம் இளைஞர்களின் சக்தியை நமது தலைவர் பெற்றுவிட்டார்கள். அவரின் சக்தியை நாம் ஒவ்வொருவரும் பெறுவோம். தேர்தல் களத்தில் உழைப்போம்! மாநாட்டின் வெற்றி, 2024 மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கட்டும். பாசிஸ்டுகளுக்கு முடிவுகட்டி அடிமைகளை புறந்தள்ளி இந்தியா கூட்டணியின் வெற்றியை நமது தலைவர் கரங்களில் சேர்ப்போம்! நன்றி! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

20 − 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi