சென்னை: ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடர், 16 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் நடைபெற உள்ளது. 6 நாடுகள் பங்கேற்கும் இந்த தொடரை தமிழக அரசு, ஹாக்கி இந்தியா இணைந்து நடத்த உள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது குறித்து சென்னையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: தமிழகத்தில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆர்வமும், ஆதரவும் தெரிவித்து வருகிறார். அதனடிப்படையில் பல்வேறு சர்வதே போட்டிகள் சென்னையில் நடந்துள்ளன.
அதன் தொடர்ச்சியாக ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கிப் போட்டி சென்னையில் நடைபெற உள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒடிஷாவில் உலக கோப்பை ஹாக்கி நடைபெற்றபோது அங்கு சென்றிருந்தோம். அப்போது தமிழ்நாட்டில் சர்வதேச அளவில் ஹாக்கி போட்டிகளை நடத்த வாய்ப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதற்கு பலன் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் ஆக.3ம் தேதி முதல் ஆக.12ம் தேதி வரை சென்னை, எழும்பூர் ஹாக்கி அரங்கில் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற உள்ளது. இதற்காக ஹாக்கி இந்தியா, ஆசிய ஹாக்கி கூட்டமைப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச அளவிலான ஹாக்கி போட்டி நடக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, சீனா, ஜப்பான், தென் கொரியா என 6 நாடுகள் பங்கேற்கும். பாகிஸ்தான் மட்டுமின்றி அனைத்து நாட்டு வீரர்களுக்கும், அலுவலர்களுக்கும், போட்டிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்குவது குறித்து காவல்துறையுடன் ஆலோசனை நடத்தப்படும்.
செஸ் ஒலிம்பியாட் போன்றே ஹாக்கி போட்டியையும் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கு தமிழ்நாடு அரசின் நிதியுதவி மட்டுமன்றி, தனியார் நிறுவனங்களின் உதவியையும் கேட்டுள்ளோம். இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். ஹாக்கி இந்தியா பொதுச் செயலர் போலாநாத் சிங், ‘பங்கேற்க உள்ள 6 நாடுகளும் 25ம் தேதிக்குள் தங்கள் விருப்பத்தை தெரிவிப்பார்கள். பாகிஸ்தான் பங்கேற்குமா என்ற கேள்வியே எழுவில்லை. ஏனென்றால் இது ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு நடத்தும் அதிகாரப்பூர்வ போட்டி. அதனால் இப்போட்டியை பாகிஸ்தான் தவிர்ப்பதற்கான வாய்ப்பு இல்லை’ என்றார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் கூடுதல் செயலர் அதுல்ய மிஸ்ரா, எஸ்டிஏடி உறுப்பினர் செயலர் மேகநாத் ரெட்டி, ஹாக்கி இந்தியா பொருளாளர் சேகர் மனோகரன், முன்னாள் நட்சத்திர வீரர் முகமது ரியாஸ் பங்கேற்றனர்.