Monday, March 4, 2024
Home » மகள் ஆசைப்பட்ட கல்வி எல்லோருக்கும் கிடைக்கணும்… ‘இட மதிப்பு பெரிய விஷயமில்லை… பிள்ளைக நல்லா படிச்சு உயரணும்…’ ரூ.7 கோடி இட தானம் செய்த ஆயி பூரணம் நெகிழ்ச்சி; குடியரசு தின சிறப்பு விருது அறிவித்த முதல்வருக்கு நன்றி

மகள் ஆசைப்பட்ட கல்வி எல்லோருக்கும் கிடைக்கணும்… ‘இட மதிப்பு பெரிய விஷயமில்லை… பிள்ளைக நல்லா படிச்சு உயரணும்…’ ரூ.7 கோடி இட தானம் செய்த ஆயி பூரணம் நெகிழ்ச்சி; குடியரசு தின சிறப்பு விருது அறிவித்த முதல்வருக்கு நன்றி

by Karthik Yash

* சிறப்பு செய்தி
‘கல்வி யாராலும் அழிக்கவும் முடியாது, பறிக்கவும் முடியாத சொத்து’. கல்வி சமூகத்தில் நல்ல அந்தஸ்தை வழங்குகிறது.கல்வி என்ற ஆற்றலும், ஆளுமையும் இருந்தால் இன்று உலகையே ஆளலாம். இந்த கல்வியை குக்கிராமங்களில் உள்ள ஏழை, எளிய பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்பது அனைவரின் ஆசை. இதற்காக அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்தின் கீழ் கிராமம் கிராமமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி குழந்தை தொழிலாளர்களை ஒழித்து கல்வியை வழங்கி வருகிறது அரசு. அதே நேரத்தில் கல்விக்காக பல்வேறு தரப்பினரின் பங்களிப்பும் அளப்பரியது. இந்த வரிசையில் இன்று உலகையே திரும்பி பார்க்க வைத்து உள்ளார் மதுரை ஆயி பூரணம். ‘தன் மகள் ஆசைப்பட்ட படிப்பை அனைவருக்கும் கிடைக்க வேண்டும்’ என்று ரூ.7 கோடி நிலத்தை அரசு பள்ளியை தர உயர்த்த தானமாக வழங்கி உள்ளார் ஆயி பூரணம். இவரின் இந்த கொடை வள்ளல் செயலுக்கு ஏழேழு தலைமுறையின் கல்விக்கு அரணாக அமைந்து உள்ளது என்பதே நிதர்சன உண்மை.

மதுரை, சூர்யா நகரில் வசிப்பவர் ஆயி பூரணம் (52). தனது 8 வயதில் அப்பா, அடுத்து அம்மாவை இழந்த ஆயி பூரணத்திற்கு 18 வயதில் திருமணம் நடந்தது. ஒரே பெண் குழந்தை ஜனனி. திருமணமான இரண்டரை ஆண்டுகளில் கணவர் உக்கிரபாண்டியையும் ஒரு விபத்தில் பறிகொடுத்தார். தன் உலகமே மகள்தான் என்றிருந்தவர், மகளை படிக்க வைத்து, மணமுடித்து வைத்ததில் குடும்ப பிரச்னையில் மகளையும் பறி கொடுத்திருக்கிறார். ஆயி பூரணத்தின் கணவர் உக்கிரபாண்டி உயிரிழந்ததால், அவர் பணியாற்றிய கனரா வங்கியில் வாரிசு அடிப்படையில் மதுரை தல்லாகுளம் கிளையில் கிளார்க்காக வேலை பார்த்து வருகிறார்.

மகள் உயிருடன் இருக்கும்போது நம்ம நிலத்தை கல்விக்காக கொடுக்க வேண்டும் என்ற சொன்ன வார்த்தைக்காக, மதுரை யா.கொடிக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்திட, தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார். சுமார் ரூ.7 கோடி சந்தை மதிப்பிற்குரிய இந்த இடத்தை தன் மகள் ஜனனி நினைவில் ‘நம்ம ஊரு நம்ம பள்ளி திட்டத்தின்’ கீழ் அரசு பள்ளிக்கென தான பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். 8ம் வகுப்பு வரை உள்ள இந்த நடுநிலைப்பள்ளியில் 142 மாணவர்கள், 9 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதன்மூலம் சுற்றுவட்டார மாணவ, மாணவிகள் உயர்கல்வி கற்க பேருதவி புரிந்துள்ளார். பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பள்ளிக்கு எழுதி வைத்து விட்டு, எவருக்குமே தெரியாமல் தன் வங்கிப் பணிக்கு போய் ஆயி பூரணம் வேலை பார்க்க ஆரம்பித்து விட்டார்.

ஆயி பூரணத்தின் இச்செயலைப் பாராட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசு தினத்தில் சிறப்பு விருது அறிவித்திருக்கிறார். ஜன.29ம் தேதி மதுரையில் நடக்கும் பெற்றோர் – ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் பூரணம் அம்மாள் கவுரவிக்கப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இதுதவிர மதுரை எம்பி வெங்கடேஷன் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்பினரும் ஆயி பூரணத்திற்கு ‘கல்வி செம்மல்’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அறிவித்து கவுரவப்படுத்தி வருகின்றனர். மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டிலும் ஆயி பூரணத்திற்கு மதுரை மக்கள் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ஆயி பூரணத்துடன் தினகரன் நிருபர் சிறப்பு பேட்டி எடுத்தார். அப்போது அவர் கூறியதாவது: நான் யா.கொடிக்குளம் பள்ளியில்தான் 5ம் வகுப்பு வரை படித்தேன். மகளின் நினைவில் கல்விக்காக இந்த இடத்தை இப்பள்ளிக்கு கொடுத்திருக்கிறேன். இந்த இடத்திற்கான மதிப்பெல்லாம் பெரிய விஷயமில்லை. என் மகள் படிக்காத படிப்பெல்லாம் இங்கிருந்து போறவங்க படிச்சு உயரணும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர், எம்பி, அதிகாரிகள், பொதுமக்கள்னு எல்லோருடைய பாராட்டும், முதலமைச்சர் குடியரசு தினத்தில் அறிவிச்சிருக்கிற விருதும் ரொம்பவும் மனசுக்கு நிறைவைத் தருகிறது. முதலமைச்சருக்கு மிக்க நன்றி. பிகாம் வரை படித்த என் மகள் ஜனனிக்கு, ஆடிட்டருக்கு படிக்கனும்னு ஆசை. ஆனா, அவசரப்பட்டு திருமணம் முடிச்சுக் கொடுத்து, 2 வருடம் முன்னால மகளையும் பறிகொடுத்துட்டேன். என் மகள் ஆசைப்பட்ட கல்வி எல்லோருக்கும் கிடைக்கணும். உயிரோடிருந்தப்ப என் மகள் ஜனனியும் நம்ம நிலத்தை கல்விக்காக கொடுக்கணும்மான்னு சொல்லிக்கிட்டு இருக்கும். மகளோட ஆசையும் நிறைவேறி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

* இடம் தந்து உயர்ந்தார்: தலைமையாசிரியர் பாராட்டு
ஒரு ஏக்கர் 52 சென்ட் இடத்தை பள்ளிக்குத்தர முடிவெடுத்த ஆயி பூரணம், இதுகுறித்து பள்ளித் தலைமையாசிரியை சம்பூர்ணத்திடம் மட்டும் தெரிவித்துள்ளார். கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் ஆயி பூரணத்திடம் பேசினர். இதைத்தொடர்ந்து, ஜன.5ம் தேதி வெள்ளிக்கிழமை ஒத்தக்கடை பத்திரப்பதிவு அலுவலகத்தில், பள்ளிக்காக முதன்மைக் கல்வி அலுவலர் பதவிப்பெயரில் தானம் பத்திரப்பதிவு செய்து கொடுத்தார். தனது ஒரே கோரிக்கையாக ‘ஜனனி நினைவு வளாகம்’ எனச் சூட்டும்படியும் இந்த பத்திரத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆயி பூரணத்தின் இடம் தானம் யாருக்குமே தெரியாமல் போய் விட்டது. எப்படியோ வாட்சப்களில் தகவல் பரவியது. ஆனாலும் ஆயி பூரணம், தானம் கொடுத்தது பற்றி விளம்பரம் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். ஆனாலும் சமூக வலைத்தளங்களில் இத்தகவல் வைரலானது.

மதுரை யா.கொடிக்குளம் பள்ளி தலைமை ஆசிரியை சம்பூர்ணம் கூறுகையில், ‘‘கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு என்னை அணுகிய ஆயி பூரணம், ஏழைக்குழந்தைகளுக்கு நோட்டு, எழுதுபொருட்கள், பள்ளிக்கு கழிப்பறை, குடிநீர் வசதிகள்னு அடுத்தடுத்து ரூ.9 லட்சம் வரை செலவழித்து, வசதிகள் செய்து கொடுத்தார். இதற்கெல்லாம் உச்சமாக தற்போது பல கோடி மதிப்புள்ள இடத்தை பள்ளிக்காக தந்து மேலும் உயர்ந்திருக்கிறார்’’ என்றார்.

* ஆயி பூரணத்தின் 93 சென்ட் நிலத்தை மோசடியாக பதிவு செய்த அமைப்பு
ஆயி பூரணம் கூறுகையில், ‘‘ஒரு அமைப்பு என்னை அணுகி, சேவைக்காக நிலம் தரும்படி கேட்டனர். நானும் தற்போது பள்ளிக்கு தானம் கொடுத்துள்ள 1 ஏக்கர் 52 சென்ட் இடத்திற்கும் அருகே முக்கிய பகுதியில் 5 சென்ட் இடம் தருவதாகத் தெரிவித்தேன். அவர்கள் 10 சென்ட் இடமாக இருந்தால் வசதி என்றதால் ஒத்துக் கொண்டு, இடத்தை பதிவு செய்து தருவதாகக் கூறி விட்டேன். பதிவு செய்து தருவதற்கான செலவுத்தொகையாக ரூ.3.50 லட்சத்தையும் என்னிடமே கேட்டு வாங்கிக் கொண்டனர். கையெழுத்திட்டு கொடுத்து பத்திரப்பதிவு செய்ததற்கு பிறகு நான் அதிர்ச்சியடைந்தேன். காரணம் என்னிடம் ஏமாற்றி 93 சென்ட் இடத்தை பதிவு செய்திருப்பது தெரிந்தது.

இதுகுறித்து கேட்டபோது, எழுதித்தந்தது தந்ததுதான் எனக்கூறி அனுப்பி விட்டனர். மோசடியாக இடத்தை வாங்குபவர்கள் எப்படி நல்ல காரியத்திற்கு அந்த இடத்தை பயன்படுத்த முடியும்? எனக்கு பெரும் மன உளைச்சலாகி விட்டது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறேன். இந்த இடம் மீட்டெடுக்கப்பட்டால், இந்த 93 சென்ட் இடத்தையும் இந்த பள்ளிக்கு தேவை இருந்தாலோ அல்லது வேறொரு கல்வி சார்ந்த நல்ல காரியத்திற்கோ வழங்க தயாராக இருக்கிறேன். ஏமாற்றுக்காரர்களிடம் இந்த இடம் இருந்து விடக்கூடாது’’ என்றார்.

* சகோதரருக்கு சிறுநீரக தானம்
ஐந்து அக்காக்கள், அண்ணன்களோடு பிறந்தவர் ஆயி பூரணம். தானம் வழங்குவதில் எப்போதுமே இவர் பின்வாங்கியதில்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பு, இவரது அண்ணன் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக கொடுத்திருக்கிறார். தற்போது ரூ.7 கோடி மதிப்புள்ள இடத்தை பள்ளிக்கு கொடுத்திருக்கும் ஆயி பூரணம் ஏற்கனவே ரூ.9 லட்சம் வரை இதே பள்ளிக்கு உதவியும் இருக்கிறார்.

* 300 குடும்பங்களுக்காக நிலத்தை தானம் செய்த தந்தை
இந்த தான எண்ணம் எப்படி தோன்றியது ஆயி பூரணத்திடம் தினகரன் நிருபர் கேட்டபோது, ‘‘எனது தந்தை கண்ணன் சின்னான். பல ஆண்டுகளுக்கு முன்பு மதுரை ஒத்தக்கடையில் அரசு வேளாண்மைக் கல்லூரிக்கு பலரது நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இம்மக்கள் மாற்று இடமின்றி தவிப்பதை அறிந்த எனது தந்தை, அக்காலத்திலேயே யானைமலை பகுதியில் இருந்த தனது 2 ஏக்கர் நிலத்தை மக்களுக்கு எழுதித் தந்தார். இதன்மூலம் 300 குடும்பங்கள் வரை இங்கு குடியேற உதவியுள்ளார். ஏழைகள் படிக்க பள்ளிக்கூடம் கட்டித்தருவதாகவும் கூறி வந்தார். ஆனால் அந்த ஆசை அப்போது நிறைவேறவில்லை. தற்போது அவரது பேத்தியும், எனது மகளுமான ஜனனி பெயரில், இடத்தை எழுதி கொடுத்ததன்மூலம் இருவரது ஆசையையும் நிறைவேற்றி உள்ளேன்’’ என்று கூறினார்.

You may also like

Leave a Comment

four + nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi