சித்தூர் : ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியினர் நேற்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். சந்திரபாபு கைது கண்டித்து சாலை மறியல், சாலையில் டயர்கள் எரிப்பு உட்பட போராட்டங்களில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தெலுங்கு தேசம் கட்சி தலைவர், ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு தனது ஆட்சி காலத்தில் திறன் மேம்பாட்டு திட்டத்தில் ₹371 கோடி ஊழல் செய்ததாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிஐடி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, சந்திரபாபு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் நேற்று முன்தினம் ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.
இதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சி மாநில தலைவர் அச்சம் நாயுடு நேற்று ஒருநாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இந்த போராட்டத்திற்கு ஜனசேனா கட்சியும் ஆதரவு தெரிவித்தது.தொடர்ந்து, நேற்று மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் சாலை மறியல் உட்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன்படி, சித்தூர் மாநகரத்தில் நேற்று காலை புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம், திருத்தணி பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் பஸ்களை தெலுங்கு தேசம் கட்சியினர் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் அவர்களை கைது செய்தனர்.
மேலும், தெலுங்கு தேசம் கட்சி மாவட்ட துணைத்தலைவர் காஜூர் பாலாஜி தலைமையில் சர்ச் தெரு, பஜார் தெரு, காந்தி சாலை, எம்ஜிஆர் சாலை, ஹைரோடு உள்ளிட்ட பகுதிகளில் கடைகளை அடைக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை முதலாவது காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெலுங்கு தேசம் கட்சி முக்கிய பிரமுகர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்ட நிலையில் மாவட்டம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்ட அக்கட்சி தொண்டர்களை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
காளஹஸ்தி: முன்னாள் முதல்வர் சந்திரபாபுவை சிறையில் அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காளஹஸ்தி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ எஸ்சிவி தலைமையில் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் நாராயணன், பாஸ்கர், பத்தையா, சேகர், செஞ்சி ராமன், ஹரி, அரவிந்த் உள்ளிட்டோர் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு போராட்டம் நடத்தினர். முன்னதாக எஸ்சிவியை 3வது நாளாக போலீசார் வீட்டுக்காவலில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
காளஹஸ்தியில் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஜனசேனா கட்சி நிர்வாகிகள் பலரது வீட்டில் நேற்று அதிகாலையிலேயே போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்களை போலீசார் வீட்டுக்காவலில் வைத்ததால் போராட்டம் தடுக்கப்பட்டது. அதன்படி, முன்னாள் எம்எல்ஏ சிவி, நகர தலைவர் விஜய்குமார், திருப்பதி பாராளுமன்ற மகளிர் அணி தலைவி சக்ரால. உஷா, தொட்டம்பேடு மண்டல தலைவர் முரளி மற்றும் பலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். மேலும், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
144 தடை உத்தரவு: அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சித்தூர் மாநகரத்தில் முக்கிய சந்திப்புகளான காந்தி சர்க்கிள், எம்எஸ்ஆர்.சர்க்கிள், தர்கா சர்க்கிள், கிரீம்ஸ்பேட்டை சர்க்கிள், காந்தி சாலை, ஹைரோடு, சர்ச் தெரு, பஜார் தெரு, எம்ஜிஆர் சாலை, கொங்காரெட்டிப்பள்ளி, கட்டமஞ்சி, சந்தைப்பேட்டை முருக்கம்பட்டு உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சாலையில் டயர்கள் எரிப்பு
சித்தூர் மாவட்டத்தில் குப்பம், வி.கோட்டா, பைரெட்டிப்பள்ளி, பலமநேர், பங்காரு பாளையம், யாதமரி, குடிபாலா, தவனம்பள்ளி, ஐராலா, பூதலப்பட்டு, பெனுமூர், கங்காதர நெல்லூர், சித்தூர் ரூரல் மண்டலம், எஸ்.ஆர்.புரம், கார்வேட்டி நகரம், நகரி புத்தூர் ஆகிய மண்டலங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் சாலையில் டயர்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், சித்தூர் மாநகரத்தில் கொங்காரெட்டிப்பள்ளி பகுதியில் சாலையில் டயர்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
பஸ் போக்குவரத்து நிறுத்தம்
நேற்று காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை சித்தூர் மாவட்டத்தில் பஸ்கள், ஆட்டோக்கள், கார்கள் என எதுவுமே இயங்காத நிலை ஏற்பட்டது. மதியம் 2 மணிக்கு மேல் வழக்கம் போல் இயல்புநிலை திரும்பி பஸ்கள், கார்கள், ஆட்டோக்கள் உள்ளிட்டவை செயல்பட தொடங்கின. முன்னதாக, போராட்டம் காரணமாக அண்டை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு செல்ல பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டு வந்தார்கள். எனவே, இருசக்கர வாகனத்தில் மாநில எல்லை வரை சென்று அங்கிருந்து பஸ்கள் மூலம் சென்றார்கள்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தெலுங்கு தேசம் கட்சியினர் முழு அடைப்பு போராட்டம் காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால், அரசு மற்றும் தனியார் வங்கிகள் வழக்கம்போல் செயல்பட்டது. இதையறிந்த தெலுங்கு தேசம் கட்சியினர் மற்றும் ஜனசேனா கட்சியினர் வங்கிகள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் வங்கிகள் உடனே மூடப்பட்டன. இதனால் வாடிக்கையாளர்கள் சிரமப்பட்டார்கள். மதியம் 2 மணிக்கு மேல் வழக்கம்போல் அனைத்து அலுவலகங்களும் செயல்பட்டன.
பஸ் கண்ணாடிகள் உடைப்பு
தெலுங்கு தேசம் கட்சியினர் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் சித்தூர் அரசு பஸ் டிப்போவில் இருந்து பஸ்கள் வெளியே வந்ததையடுத்து ஆத்திரமடைந்த தெலுங்கு தேசம் கட்சியினர் பஸ் கண்ணாடிகளை உடைத்தனர். இதேபோல், மாநிலத்தில் பல இடங்களில் அரசு பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
சாலையில் படுத்து எம்எல்சி போராட்டம்
சந்திரபாபுவின் சொந்த தொகுதியான குப்பம் தொகுதியில் பரபரப்பான சூழல் நிலவிய நிலையில் டெப்போவில் இருந்து வெளியே வந்த அரசு பஸ் கண்ணாடிகளை தெலுங்கு தேசம் கட்சியினர் உடைத்தனர். அப்போது, போலீசாருக்கும், தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்ய வந்தபோது, தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்சி கஞ்சர்லா காந்த் திடீரென சாலையில் படுத்து ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் பதவி விலகுவது நிச்சயம் என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.