இஸ்லாமாபாத்: இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்தியாவின் வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை என்று பாகிஸ்தான் நடிகை பதிவிட்டதால் அவர் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி போட்டி மும்பையில் நடந்த போது, இந்திய – நியூசிலாந்து அணிகள் மோதின. விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் சதம், முகமது ஷமியின் பந்துவீச்சு ஆகியவை இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தந்தன. அதனால் இந்திய அணி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. இந்திய அணியை பலரும் பாராட்டி வரும் நிலையில், இந்த விஷயத்தை பாகிஸ்தான் நடிகை சாஹர் ஷின்வானி ஏற்கவில்லை.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘இந்திய அணி அரையிறுதி போட்டியில் வென்று இறுதி போட்டிக்குள் நுழைந்ததை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இந்தியா ஏன் நம்மை விட எல்லாவற்றிலும் முன்னோக்கி செல்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தார். இவரது இந்த பதிவு, சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய நெட்டிசன்கள் நடிகைக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
அவர்களில் சிலர் நடிகையை ட்ரோல் செய்து வருகின்றனர். அவற்றில் சிலர், ‘இந்தியாவின் வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை என்றால் விஷம் குடியுங்கள்; அது நன்றாக ஜீரணமாகிவிடும்’ என்றும், ‘அழுது கொண்டே இருங்கள்’ என்றும், ‘நீங்கள் மேம்பட இன்னும் அதிக காலம் தேவை’ என்றும் பலவாறாக கருத்து தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியைப் பற்றி, சாஹர் ஷின்னானி இவ்வாறு விமர்சிப்பது ஒன்றும் புதிதல்ல; ஏற்கனவே பலமுறை விமர்சித்து கடும் கண்டனங்களையும் எதிர் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதி போட்டியை நேரில் காணும் மோடி?
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள நரேந்திர மோடி மைதானத்தில், நாளை மறுநாள் (நவ. 19) உலக கோப்பை இறுதி போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியைக் காண்பதற்காக உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள். இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், நேற்று நடந்த 2-வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.
அதில் ெதன்னாப்பிரிக்காவை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வீழ்த்தியதால், அந்த அணி இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது. எனவே நாளை மறுநாள் நடக்கும் இறுதிப் போட்டியில் இந்திய – ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இந்த விளையாட்டை நேரில் காண்பதற்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அகமதாபாத் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.