Sunday, October 6, 2024
Home » பகவான் நாமத்தை எப்போது சொல்ல வேண்டும்?

பகவான் நாமத்தை எப்போது சொல்ல வேண்டும்?

by Kalaivani Saravanan

வைணவத்தில் பெரிய பெருமாள் என்றால் அது திருவரங்கத்தில் கோயில் கொண்டிருக்கும் திருவரங்கநாதனாகிய ஸ்ரீரங்கநாதரைக் குறிக்கும். அவர் பெரிய பெருமாள் என்றால் பெருமாள் யார்? என்கிற கேள்வி வரும் அல்லவா! பெருமாள் என்பது ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி. இதற்குக் காரணம் என்ன என்று சொன்னால், அயோத்தியில் ஸ்ரீராமன் அவதாரம் செய்வதற்கு முன்னாலேயே, ஸ்ரீரங்கநாதப் பெருமாள் அயோத்திக்கு வந்துவிட்டார். அவர் ராமர் அவதரித்த இஷ்வாகு குலத்தின் குலதெய்வம். அதனால், ராமரே வணங்கிய பெருமாள் என்பதால் அவரை, “பெரிய பெருமாள்” என்று அழைக்கிறார்கள்.

இராவண வதம் முடிந்து அயோத்தியில் வந்து பட்டாபிஷேகம் செய்து கொண்ட ஸ்ரீராமபிரான், எல்லோருக்கும் பரிசுப் பொருட்களை தந்து அவரவர் ஊருக்கு அனுப்புகின்ற பொழுது, அதுவரை பூஜித்து வந்த குலதனமான ஸ்ரீரங்கநாதரை பிரணவகார விமானத்தோடு விபீஷணனுக்குக் கொடுத்து அனுப்புகின்றார். அவன் அதை எடுத்துக் கொண்டு இலங்கைக்கு செல்வதற்கு முன்னால், காவேரி கரையில் இறக்கி வைக்க பெருமாள் காவேரி கரையிலேயே தங்கிவிடுகிறார். எனவே, திருவரங்கத்தில் திருக்கோயில் கொண்டிருக்கக் கூடிய ரங்கநாதர் பெருமாள், ராமர் வணங்கிய பெரிய பெருமாள்.

`ஆராத அருளமுதம் பொதிந்த கோயில்
அம்புயத்தோன் அயோத்தி மன்னற் களித்த கோயில்
தோலாத தனிவீரன் தொழுத கோயில்
துணையான வீடணற்குத் துணையாங் கோயில்
சேராத பயனல்லாஞ் சேர்க்குங் கோயில்
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்த கோயில்
தீராத வினையனைத்தும் தீர்க்கும் கோயில்
திருவரங்க மெனத் திகழுங் கோயில் தானே!’

என்று இந்த வரலாற்றை வேதாந்த தேசிகன் அதிகார சங்க்ரஹத்தில் பாடியிருக்கிறார். அடுத்து இன்னொரு சுவாரஸ்யம், பகவான் ஸ்ரீமன் நாராயணனின் பரமபதத்தை அதாவது, ஸ்ரீவைகுண்டத்தை அயோத்தியாபட்டினம் என்று சொல்லுவார்கள். அயோத்தி என்றால், நிலை பெற்றது அழியாதது; யுத்தங்களால் ஜெயிக்கப்பட முடியாதது என்று பொருள். அது அண்டாதி அண்டங்களை கடந்து, ஏழு ஆவரணங்களைக் கடந்து அப்பால் உள்ள திருநாடு என்பார்கள்.

கோசலை நாட்டின் தலைநகரான அயோத்தியும் அது போல்தான். அதனால்தான், பகவானே அயோத்தியில் அவதரித்தான். அயோத்தி யுத்தங்களால் ஜெயிக்கப்படாதது. அடுத்து அவனுடைய அவதார காரணம், நல்லவர்களைக் காப்பாற்ற வேண்டும்; தீயவர்களை அழிக்க வேண்டும். பகவானின் எல்லா அவதாரங்களுக்கும் காரணம் இதுதான்.

“பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய
ச துஷ்க்ருதாம்
தர்ம-ஸம்ஸ்தாபனார்தாய சம்பவாமி யுகே யுகே!’’

(எங்கெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அங்கெல்லாம் தர்மத்தை நிலை நாட்ட நான் அவதரிப்பேன்)

இந்த காரணத்தைத்தான் ‘‘அலைநீர் கடலுள் அழுந்தும் நாவாய் போல் ஆவார் யார் துணை என்று துளங்க நல்ல அமரர் துயர் தீர’’ என்று ஆழ்வார்கள் பாடியிருக்கிறார்கள். குறிப்பாக இந்த தொடரை நம்மாழ்வாரின் பாடலிலிருந்து பெரியவாச்சான் பிள்ளை எடுத்துக் கோர்த்திருக்கிறார்.

`ஆவாரார் துணை என்று அலைநீர்
கடலுள் அழுந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்க
தேவார் கோலத்தொடும் திருச்சக்கரம் சங்கினொடும்
ஆவா! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே’

இந்தத் தொடரில் நாம் நினைத்து நினைத்து வியக்கத்தக்க ஒரு நுட்பம் அமைந்திருக்கிறது. தேவர்களின் குறைதீர்க்க எம்பெருமான் ராமனாக அவதரித்தான் என்று சொன்னால் போதாதா? அதற்கு ஒரு அடைமொழியாக, அலைகள் அடிக்கக்கூடிய கடலிலே, படகு கவிழ்ந்து, தண்ணீரில் மூழ்குகின்றவர்கள் ‘‘என்னை காப்பாற்றுவதற்கு யாருமே இல்லையா?’’ என்று கூக்குரலிட்டு இறைவனை பிரார்த்திக்க, அவர்கள் குறை தீர்ப்பதற்காக, ராமன் அவதரித்தான் என்று ஏன் சொல்ல வேண்டும்?

பொதுவாக, வாழ்க்கைப் பயணம் என்பது கடலில் பயணம் செய்வது போல. (சம்சாரக் கடல் – பிறவிப் பெரும் கடல்) இதில் பயணம் செய்யும் நம்மைப் போன்ற சம்சாரிகளும், நம்மைவிட உயர்ந்த தேவர்களும் (அமரர்கள்) பதவி பட்டம், உதவி என்று ஏதோ ஒரு துணையைப் பற்றிக் கொண்டு வாழ்க்கை பயணத்தை செய்கிறோம். இந்த பதவி பட்டம், தேவர்களாக இருந்தால் வாங்கிய வரங்கள் போன்றவை எல்லாம் படகு போல. அந்த படகில் அமர்ந்து கடலில் பயணம் செய்வது சுகமாகத்தான் இருக்கிறது.

அப்பொழுது எதைப் பற்றியும் கவலைப் படுவதில்லை, இறைவனையும் நினைப்பதில்லை. ஆனால், அந்தப் படகு ஓட்டையாகி தண்ணீரில் மூழ்கும் நிலை வரும் பொழுது நாம் கதறுகின்றோம். அப்பொழுதுதான் பட்டமோ, பதவியோ, பணமோ, செல்வாக்கோ, வரமோ, வீரமோ எதுவுமே நமக்குப் பயன்படாது. நம்மோடு நம்மைப் போலவே இருக்கக் கூடிய உறவுகளும் நம்மை கைவிட்டுவிடும் என்று உணர்கிறோம்.

அப்படி உணரும்போதுதான் நமக்கு இறைவனின் நினைவு வருகிறது. அவன் காலடியில் சென்று விழுகின்றோம். நம் அபயக் குரலைக் கேட்டு, ‘‘இப்பொழுதுதாவது நம்மை நினைத்தானே’’ என்று இறைவன் காப்பாற்ற வருகின்றான். இதை உணர்த்துவதற்காகதான் திருமங்கையாழ்வார் அறிவுறுத்துகிறார்.

`துஞ்சும் போது அழைமின்
துயர் வரில் நினைமின்
துயரிலீர் சொல்லலிலும் நன்றாம்
நஞ்சுதான் கண்டீர் நம் உடை வினைக்கு
நாராயாணா எனும் நாமம்’

ஒவ்வொரு நாளும் இறைவனுடைய நாமாவைச் சொல்லுங்கள். இறப்பு (துஞ்சுதல்) அல்லது தினம் படுக்கைக்கு போகும்போது அழையுங்கள். அவன் நினைவு உங்களுக்கு இருக்கட்டும். துயரம் வந்தாலும் கூப்பிடுங்கள். ஆனால், துயரம் வந்தால்தான் கூப்பிட வேண்டும் என்றெல்லாம் கணக்கு பார்க்காதீர்கள். துயரமே இல்லை என்றாலும் அந்த திருநாமத்தைச் சொல்வது உங்களுக்கு இனிமையைத் தரும் என்கிறார்.

சரி, இந்த பாசுரப்படி ராமாயணத்தில் ‘‘நல்ல அமரர் துயர் தீர’’ என்று வருகிறதே, தேவர்களின் குறையைத் தீர்க்க மட்டும் ராமன் அவதரித்தானா? அப்படியானால், அவன் தேவலோகத்தில் இல்லை வேறு வான் உலகங்களில் அவதரித்திருக்கலாமே? மண்ணுலகத்தில் ஏன் அவதரிக்க வேண்டும்?

இங்கேதான் இன்னும் ஒரு அதிநுட்பம் இருக்கிறது. தேவர்கள் வாழ்வு என்பது வானுலகத்தில் இல்லை. மண்ணுலகத்தில்தான் இருக்கிறது. மண்ணுலகத்தில் உள்ள மக்கள் நன்றாக வாழ்ந்தால்தான் தேவர்கள் விண்ணுலகத்தில் நன்றாக வாழ முடியும் என்பதுதான் விதி. இதற்கு விளக்கம் சொல்லும் குறள் கீழே உள்ளது.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

மழை முறையாகப் பெய்யாவிட்டால், உலகத்தில் வானோர்க்காக நடத்தப்படும் திருவிழாக்களும், பூசனைகளும் நடைபெறாது என்பது இதன் பொருள். இதிலிருந்து என்ன தெரிகிறது? மண்ணுலகத்தூர் நன்றாக வாழ்ந்து யாகங்களையும் செய்தால்தான் அமரர்கள் வாழ முடியும். இங்கு அதாவது மண்ணுலகில்; நடத்தப்படும் யாகங்களில், அந்தந்த தேவதைகளை அழைத்துத் தரப்படும் ஆகுதிகள்தான் (ஹவிஸ்) அந்தந்த தேவர்களைத் திருப்திப்படுத்தி, அவர்களது சக்தியை வளர்த்து, அவர்களை தேவர்களாக வைத்திருக்கின்றன.

அதற்கு பிரதியுபகாரமாகத்தான், நாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக மழையையும் காற்றையும் மற்ற மற்ற உபகாரங்களையும் அந்த தேவர்கள் செய்கிறார்கள். இது ஒரு பரஸ்பர ஒப்பந்தம். எனவேதான், பகவான் தேவர்கள் குறையைத் தீர்ப்பதற்கு, வானுலகத்தில் அவதரிக்காமல், மண்ணுலகத்தில் அவதரித்தான். சரி, அது மட்டும்தான் காரணமா என்றால், இன்னொரு காரணமும் இருக்கிறது. அதை அடுத்த வார்த்தையில் அற்புதமாக தெரிவிக்கின்றார் ஆழ்வார்.

தொகுப்பு: தேஜஸ்வி

You may also like

Leave a Comment

2 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi