Thursday, February 22, 2024
Home » அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

by Kalaivani Saravanan

நன்றி குங்குமம் ஆன்மிகம்

தைப்பூசம் : 25 – 1 – 2024

தைப்பூசம் என்றாலே நமது நினைவுக்கு வருவது, வடலூர் வள்ளல் பெருமான்தான். “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய” அந்த மகானின் மகத்தான வாழ்க்கையிலிருந்து இங்கே உங்களுக்காக:

*அவதாரம் நிகழ்ந்தது

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகாமையில் உள்ள சிறிய ஊர் மருதூர். அங்கே இராமையா பிள்ளைசின்னம்மையார் தம்பதிகளுக்கு மகனாக அவதரித்தவர். தான் திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார். 5.10.1823 ஆம் ஆண்டு, புரட்டாசி மாதம், 21ஆம் நாள், சித்திரை நட்சத்திரம், ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.54 மணி அளவில் ஐந்தாவது மகனாக அவதரித்தார்.

* பன்முக ஆற்றல் உடையவர்

இராமலிங்க அடிகளார், வெறும் ஆன்மிக வாதி மட்டுமல்ல. பன்முக ஆற்றல் உடையவர். சிறந்தசொற்பொழிவாளர். போதகாசிரியர், உரையாசிரியர், சித்தமருத்துவர், பசிப்பிணி போக்கிய அருளாளர், பதிப்பாசிரியர், நூலாசிரியர், இதழாசிரியர், ஞானாசிரியர், சமூக சீர்திருத்தவாதி, தீர்க்கதரிசி.

*விளையும் பயிர் முளையிலே

‘‘விளையும் பயிர் முளையிலே” என்பதுபோல குழந்தை பிறந்து ஐந்தாவது மாதம் குடும்பத்தோடு ராமையா பிள்ளை சிதம்பர நடராஜர் தரிசனத்துக்கு சென்றார். சிற்சபையில் நடராஜப் பெருமானின் அற்புத வடிவத்தை தரிசனம் செய்த பிறகு, ரகசிய தரிசனத்திற்காக அனைவரும் நின்றனர். பால் குடிக்கும் குழந்தையாக, வடலூர் சுவாமிகள் தாயின் கையிலிருந்தார். தீட்சிதர்கள் திரையை விலக்க, சிதம்பர ரகசியம் தரிசனம் ஆயிற்று. கைக் குழந்தையாக இருந்த வள்ளலார் அதைப்பார்த்து சிரித்தார். அப்பொழுது தான் பார்த்த வித்தியாசமான வெட்டவெளி தரிசனத்தை நினைவு கொண்டு பின்னால் ஆறாம் திருமுறையில் பதிவுசெய்கிறார். குழந்தையாக இருந்தபோது தான் பார்த்த தத்துவத்தை நினைவு வைத்துக் கொண்டு பாடும் ஆற்றல் வள்ளல் பெருமானுக்கு இருந்தது என்பதை உணர முடிகிறது அல்லவா?

‘தாய் முதலோ ரொடு சிறிய பருவமதில் தில்லைத்
தலத்திடையே திரை தூக்கத் தரிசித்த போது
வேய் வகை மேல் காட்டாதே என் தனக்கே எல்லாம்
வெளியாகக் காட்டிய என்மெய் உறவாம் பொருளே’
– என்று பாடுகின்றார்.

* இறைவன் தாங்கினார்

மூன்று வயதில் ஒருநாள் இரவில் தூங்கிக்கொண்டிருந்தார். அதுபெரிய ஒட்டுத் திண்ணை. அப்பொழுது, தூக்கக்கலக்கத்தில் திண்ணையிலிருந்து கீழே விழுந்துவிட்டார். ஆனால் தரையில் விழவில்லை. அதற்குள் யாரோ, தெருவோடு போகும் ஒருவர் குழந்தையைத் தாங்கி கீழே கிடத்திச் சென்றார். வந்தவர் யார்? இந்த சம்பவத்தை நினைவில்கொண்டு தன்னுடைய வாழ்க்கை அனுபவமாக வள்ளல் பெருமான்பாடுகின்றார்.

ஓங்கிய ஓர் துணையின்றிப் பாதி இரவில்
உயர்ந்த ஒட்டுத் திண்ணையில் படுத்த கடை சிறியேன்
தூக்கம் மிகப் புரண்டு விழ தரையில் விழாது எனையே
தூக்கி எடுத்து அணைத்துக் கீழ்க் கிடத்திய மெய்த்துணையே

இந்த இடத்தில் இரண்டு விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்று இறைவன் யார் என்பதை சூசகமாக இச்சம்பவத்தின் மூலமாக தெரிவிக்கின்றார். யாரொருவர் ஆபத்து நேரும் என்ற பொழுது தாங்கி காப்பாற்றுகிறாரோ, அவர்கள் யாராக இருந்தாலும் இறைவன் என்பதை உணர வேண்டும் என்று குறிப்பிடுகின்றார்.

* மூன்று தீக்கைகள்

வள்ளல் பெருமானுக்கு மூன்று வகையான தீக்கைகளை இறைவனே அருளிச் செய்தார் என்பதை ஒரு வாக்குமூலமாக வள்ளலார் தருகின்றார். ஒன்று பரிசதீக்கை, இரண்டு வாசகதீக்கை, மூன்று திருவடி தீக்கை இதை இரண்டாம் திருமுறையில் பாடுகின்றார்.

அழகுற புன்னகை காட்டி,
தெருளுற அருமை திருக்கையால் தடவி
திருமணி வாய் மலர்ந்து அருகில்
பொருளுற இருந்தோர் வாக்களித்து
என்னுள்
புகுந்தனன் புனித ஈ தந்தோ

* படிப்பில் நாட்டமில்லை

வள்ளலாருடைய இறை அனுபவங்கள் அற்புதமானவை. எந்தவிதமான பாசாங்கும் இல்லாமல் தான் கண்ட காட்சிகளை மெய்ப்பட தம் பாடல்களில் பதிவு செய்ததால் அந்த அனுபவங்களை நம்மால்இன்றும் உணர முடிகின்றது. இளம் வயதில் அவர் முறையாகப் பள்ளிக்கூடத்துக்குச் சென்றதில்லை. தந்தையார் இறந்து விட்டதால் தமையனார் சபாபதிப் பிள்ளை இவரை வளர்க்கும் பொறுப்பை ஏற்றார். இவரை பள்ளிக்கூடத்தில் சேர்த்தபோது இவர் அந்தப் படிப்பில் நாட்டம் இல்லாமல் இருந்தார். இவரின் தமையனார் சிதம்பரம் சபாபதி பிள்ளை, தன் தம்பி இராமலிங்க சுவாமிகளை பெரிய அளவில் படிக்க வைத்து அவரை முன்னேற வைக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால், இராமலிங்க சுவாமிகள் ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டினார்.

* முருகப் பெருமானின் அருட்காட்சி

தினம் அவர் தன் வீட்டு மாடிக்குச் செல்வார். பாடம் படிக்கவே செல்வதாக எல்லோரும் நினைத்தனர். அங்கு அவர் வேறு ஒரு செயலில் ஈடுபடுவார். ஒரு கண்ணாடி முன் அமர்ந்து முருகனை உபாசனை செய்வார்.உண்ணும் நேரம் தவிர, மற்ற நேரத்தில் அவர் கீழே இறங்குவதே இல்லை. கண்ணாடியின் முன்னால் இவர் முருகனைக் காண வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தியானத்தில் இருந்தார். ஒருநாள் அந்தக் காட்சியையும் கண்டார். முருகப் பெருமான் எப்படி இவருக்குக் காட்சி தந்தார் என்பதை ஐந்தாம் திருமுறையில் பதிவு செய்கின்றார்.

சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ் கடப்பந்
தார் கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும்
கூர்கொண்ட வேலும் மயிலும் கோழிக் கொடியும் அருட்
கார் கொண்ட வண்மை தணிகாசலமும் என்கண்ணுற்றதே
ஆறுமுகமும், பன்னிரு தோள்களும், வேலும், மயிலும்,
கோழிக் கொடியும் கொண்டு தணிகை முருகன் தோன்றினான்.

* வள்ளலார் என்கின்ற பெயர் ஏன் வந்தது?

இராமலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு “திருவருட் பிரகாச வள்ளலார்” என்கின்ற பெயர் ஏன் வந்தது என்றால், பிரதியுபகாரம் எதையும் கருதாமல் உலகியல் பொருட்களை வாரி வழங்கக் கூடியவர்களை வள்ளல்கள் என்று சொல்லலாம். ஆனால் அருளை அள்ளித் தந்தவர் என்பதால் இவரை “வள்ளலார்” என்று அழைக்கிறோம்.

* வடலூரில் சிதம்பர தரிசனம்

ஆண்டுதோறும் ஆனித் திருமஞ்சனம் மற்றும் மார்கழி திருவாதிரைத் திருவிழாவிற்கு வெளியூர் அன்பர்கள் பலர் வடலூரில் கூடுவர். வள்ளலாரை அழைத்துக்கொண்டு சிதம்பரம் சென்று தரிசிப்பது வழக்கம். அப்படி ஒருமுறை தில்லை தரிசனம் காண வடலூரில் ஒன்றுகூடினர். வள்ளலாரோடு இருந்தனர். ஆனால் வள்ளல் பெருமான் சிதம்பரம் செல்வதாகத் தெரியவில்லை. வந்தவர்களில் பலர் சிதம்பர தரிசனத்துக்குச் சென்று விட்டனர்.

வள்ளலாரோடு இருந்த ஒருசிலருக்கு தரிசனம் பார்க்க முடிய வில்லையே என்கிற ஏக்கம் இருந்தது. அவர்கள் வருத்தத்தோடு வள்ளலாரைப் பார்த்தனர். அவர்கள் உணர்வை புரிந்து கொண்ட வள்ளலார் ‘‘சிதம்பர தரிசனம் தானே பார்க்க வேண்டும். இதோ உள்ளே நீங்கள் சென்று பாருங்கள்” என்று, தரும சாலையின் ஒரு பகுதியில் திரையிடச் செய்து அதில் சென்று பார்க்கக் கூறினார். அவர்கள் அங்கே சிதம்பரத்தில் நடக்கக்கூடிய அத்தனைக் காட்சிகளையும் கண்டனர். வள்ளல் பெருமான் சிதம்பரம் செல்லவில்லை. தான் இருந்த இடத்தையே சிதம்பர தரிசனம் ஆக்கினார்.அதனால் வடலூர் திருச்சபையை உத்தர ஞான சிதம்பரம் என்று அழைப்பர்.

* பசியின் கொடுமை

உலகில் உள்ள எல்லாத் தீமைகளுக்கும் காரணம் பசிப்பிணிதான் என்பதை உணர்ந்தவர் வள்ளலார். பசியின் கொடுமையை உலகுக்குச் சொன்னவர். ஒருவன் பசியோடு இருக்கும் பொழுது அவனுக்கு எந்தவித கருத்தும் தேவைப்படாது. அவன் பசியைப் போக்கி விட்டு தான் மற்ற ஆன்மிக விஷயத்தை அவனோடு பேச முடியும். பசியின் கொடுமையை பழம் பாடல் ஒன்று சொல்லும்.

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்

வயிற்றுப் பசியை விட கொடுமையான நெருப்பு எதுவும் இல்லை. பசியோடு ஒரு மனிதன் முகத்தை பார்க்க முடிவதில்லை. எனவே பசி இல்லாத ஒரு உலகத்தை உண்டாக்க வேண்டும். எல்லோருக்கும் சோறிட வேண்டும் என்கின்ற உயர்ந்த லட்சியத்தோடு இருந்தவர் வள்ளலார். பசியின் கொடுமையை தீர்க்க தானே வழி கண்டார். அதுதான் சத்திய ஞானசபை.

* அவதார புருஷன்

வள்ளலாரைப் பற்றி திருமுருக கிருபானந்த வாரியார் சொல்லுகின்ற பொழுது ஜீவன் முக்தர்களுக்கும் அவதார புருஷர்களுக்கும் உள்ள வேறுபாட்டைச் சொல்வார். ஜீவன் முக்தர்கள் தங்களுக்காகவும், தங்கள் ஆத்மாவுக்கும் முயற்சி செய்து பிறப்பில்லாத நிலையை அடைவார்கள். ஆனால் அவதார புருஷர்கள் அப்படியல்ல. இந்த உலகத்தில் உள்ள ஜீவன்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே பிறப்பு எடுப்பார்கள். உலகத்தை காப்பதற்காக பிறப்பு எடுத்தவர் தான் வள்ளல் பெருமான். எனவே அவர் அவதார புருஷன் என்பார்.

* பத்து பேர் உணவு 100 பேருக்கு

ஒன்று வளர்வதற்கும் தளர்வதற்கும் மனம்தான் காரணம். மனம்போல் தான் அனைத்தும் வளரும்.உயர் எண்ணங்களால் எந்த விஷயத்தையும் சாதித்துவிட முடியும். நேர்மறை வார்த்தைகளும் நிஜமான நம்பிக் கையும் நாம் நினைப்பதை எப்படியும் நடத்தும். ஒரு நாள் தருமச் சாலையில் இரவு உணவு நேரம். திடீரென்று பலரும் வந்து விட்டனர். ஆனால் உணவு ஒரு சிலருக்கே போதுமானதாக இருந்தது. இத்தனை பேருக்கும் எப்படி இந்த உணவை வைத்துக்கொண்டு சமாளிப்பது?

இனி சமைப்பதற்கு பொருள் இல்லையே? என்று சென்று கேட்டபோது, ‘‘இதோ வருகிறேன்” என்று சொன்ன வள்ளல்பெருமான், ‘‘எல்லோருக்கும் இலை யைப் போடுங்கள். பார்த்துக்கொள்ளலாம்” என்றார். அவர்தம் கையால் அன்னத்தை எடுத்துக்கொண்டு வந்து ஒவ்வொரு இலையாக வைத்துக் கொண்டே சென்றார். பத்து இலைகளுக்கு மேல் இந்த அன்னம் போதாது என்று நினைத்தவர்களுக்கு, வந்திருந்த அத்தனை பேருக்கும் அன்னம் போதுமானதாக இருந்தது கண்டு வியந்தனர். காரணம் வள்ளல் பெருமானார் திருக்கரம். அருட் கருணை கரத்தால் உணவைப் பரிமாறியதால், அந்த பாத்திரமே அட்சயபாத்திரமாக மாறியது.

* ஒரே நேரத்தில் எல்லா இடத்திலும் இருக்கும் ஆற்றல்

வடலூர் வள்ளல் பெருமான் ஞான புருஷர் மட்டுமல்ல. சித்த புருஷரும் கூட. சித்த புருஷர்கள் ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் காட்சி அளிக்கக் கூடியவர்கள். வடலூரில் ஞானசபை கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த காலம் அது. அதற்கு தேவையான மரங்கள் சென்னையில் வாங்க வேண்டும். மரம் வாங்கப் பொறுப்பேற்றிருந்த ஆறுமுக முதலியார் வள்ளல் பெருமான் தன்னோடு சென்னை வந்து மரம் வாங்குவதற்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

“சரி, நீ போ, நான் வருகிறேன்” என்று சொன்ன வள்ளல்பெருமான், வடலூரிலேயே தங்கி விட்டார். ஆறுமுக முதலியார் மகிழ்ச்சியோடு மரங்களை வாங்கிக் கொண்டு வந்தபோது, ‘‘சொன்ன படியே வடலூர் வள்ளல் பெருமான் சென் னையில் வந்து எனக்கு மரம் வாங்குவதற்கு உதவினார்” என்று சொன்னார். மற்றவர்கள் வியந்தனர். “இவர் சென்னைக்கு போகவில்லையே. இரண்டு மூன்று நாட்கள் இங்கே தானே இருந்தார். ஆனால் இவர் சென் னையில் உதவியதாகச் சொல்லுகிறாரே” என்று அவர்கள் சிந்தித்த போது தான், சித்த புருஷர்கள் ஒரே நேரத்தில் எல்லா இடத்திலும் இருக்கும் ஆற்றல் பெற்றவர்கள் என்று தெரிந்தது.

* ஆஹா, மனிதன் போகின்றான்

திருவொற்றியூர் தேரடித் தெருவில் ஒரு வீட்டுத் திண்ணையில் துறவி ஒருவர் இருந்தார். அவர் திகம்பரர். (ஆடை எதுவும் அவர் உடுப்பதில்லை) யார் தெருவில் போனாலும், மாடு போகிறது, கழுதை போகிறது, நாய் போகிறது, நரி போகிறது என்று சொல்லிக் கொண்டே இருப்பார். மனிதன் குணங் களினால் ஏதோ ஒரு விலங்கின் தன்மையில் இணைத்து இருக்கின்றான் என்பது அவருடைய கூற்று. வடலூர் வள்ளல் பெருமான் திருவொற்றியூருக்கு செல்லும் போதெல்லாம் நேரடியாக சன்னதித் தெரு வழியாகச் செல்வதில்லை.

தெற்கு மாட வீதியில் உள்ள நெல்லிக்காய் பண்டார சந்தின் வழியாகவே கோயிலை அடைவார். ஒருநாள் அவர் தேரடி வழியாகச் செல்லுகின்ற பொழுது நிர்வாணத் துறவியார் வள்ளலாரைப் பார்த்தார். ‘‘இதோ ஒரு உத்தம மனிதர் போகின்றார்” என்று கூறியவாறு தனது கைகளால் மெய்யை பொத்திக் கொண்டாராம். வள்ளலார் அவரிடம் சென்று சிறிது நேரம் உரையாடினார். அதற்குப் பிறகு அந்தத் துறவி அந்த இடத்தில் இல்லை. வள்ளல் பெருமான் வரவுக்காகவே காத்திருந்து அந்த இடத்தை விட்டு அகன்று எங்கோ சென்றுவிட்டார்.

* பசியாற்றிய இறைவன்

ஒருநாள் வள்ளல் பெருமான் திருவொற்றியூர் கோயிலின் மண்டபத்தில் பசியோடு படுத்து உறங்கினார். நண்பர்கள் சிலரும் அவரோடு இருந்தனர். அக்காலத்தில் கோயிலுக்குள் தங்குகின்ற வழக்கமிருந்தது. திடீரென்று கோயில் பூசகர் ஒருவர் பிரசாதம் கொண்டு வந்து கொடுத்துச் சென்றார். இரண்டு நாள் கழித்து கோயில் பூசகரிடம் விசாரித்தபோது அவர் சொன்னார். ‘‘நான் இரண்டு நாளாக ஊரிலேயே இல்லையே. நான் இல்லாத போது வேறு யார் உங்களுக்கு உணவு கொண்டுவந்து கொடுத்திருக்க முடியும்?” அப்பொழுது தான், இறைவனே கோயில் பூசகர் வடிவில் வந்து வள்ளல் பெருமான் பசியாற்றி சென்றார் என்று அவர்களுக்குத் தெரிந்தது,

* மரணமிலாப் பெருவாழ்வு

வள்ளல் பெருமான் அடிக்கடி உபதேசிப்பார். இதனை அடைய சாகாக்கலை அல்லது சாகாக்கல்வி தேவை என்பார். சன்மார்க்கத்தின் முடிந்த முடிவு என்பது இந்த மரண மிலாப் பெருவாழ்வு பெறுவதே. இதை அனுபவத்தில் பெற்றவன் எவனோ அவனே சன்மார்க்கி என்றார் வள்ளலார். “என் மார்க்கம் சன்மார்க்கம்” என்பது அவர் கொள்கை. அவருடைய திருமுறையில், தான் அடைந்த அந்த மரணமிலா பெருநிலையை அனைவரும் அடைய வேண்டும் என்பதற்காக அனைவரையும் அறைகூவி அழைத்த பாடல் இந்தப் பாடல்.

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருள் அமுதே
நன்னிதியே ஞான
நடத்து அரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்துதும் நாம் வம்மின் உலகியலீர்

மரணம் இல்லாப் பெருவாழ்வில்
வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன்
சத்தியஞ் சொல்கின்றேன்
பொற் சபையில் சிற் சபையில் புகும்
தருணம் இதுவே

‘‘மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர், புனைந்துரையேன், பொய்புகலேன், சத்தியஞ் சொல்கின்றேன் என்று நம்மை நேசத்துடன் அழைக்கும் பாடல் இது. இந்தப் பாடலை உருக்கமுடன் பாடினாலே ஒருவன் உன்னத நிலையைப் பெறலாம்.

* வள்ளலாரின் கொள்கைகள்

வள்ளலாரின் கொள்கைகளை சுருக்கி பட்டியலிட்டால் சில விஷயங்கள் புலப்படும். அவைகளில் சில.

1. இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்

2. எதிலும் பொது நோக்கம் வேண்டும்

3. எந்த உயிரையும் கொல்லக்கூடாது

4. எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக் கூடாது

5. சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது

6. பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்

7. புலால் உணவு உண்ணக்கூடாது

8. கடவுள் ஒருவரே. அவர் அருட் பெருஞ்சோதி ஆண்டவர்

9. சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது

10. மத வெறி கூடாது.

நிறைவுரை

வள்ளலாரின் வாழ்வு அற்புதமானது. வாழ்வியலோடு இணைந்தது. எப்படி எல்லாம் வாழ வேண்டும்? எதை உண்ண வேண்டும் என்பது குறித்தெல்லாம் ஏராளமான விஷயங்களைச் சொல்லிச் சென்றி ருக்கிறார். அவர் சொல்லாத வைத்தியமில்லை ஆன்மிகச் செய்திகள் இல்லை. அதை இந்த மானுட உலகம் பின்பற்றினாலே மகத்தான வாழ்வைப் பெறலாம்.

தொகுப்பு: அனந்தபத்மநாபன்

You may also like

Leave a Comment

3 + four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi