
வேலூர் : வேலூர் மத்திய சிறை எதிரே நன்னடத்தை கைதிகள் நடத்தும் சிறை உணவகம் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் 650க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள கைதிகளுக்கு பல்வேறு தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இதுமட்டுமின்றி சிறை வளாகத்திலேயே விவசாயம், தோல் பொருள் தயாரிப்பு, மீன் வளர்ப்பு ஆகிய பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சிறைக்குள் உற்பத்தி செய்யப்படும் காய்கறி, மீன்களை பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வழங்க சிறைத்துறை நிர்வாகம் முடிவு செய்தது. இதையொட்டி, கடந்த சில 2015ம் ஆண்டு மத்திய சிறை வளாகத்தின் எதிரே ‘சிறை பஜார்’ தொடங்கப்பட்டது.
இதில், சிறை வளாகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட காய்கறி மற்றும் மீன்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. இதையடுத்து, கைதிகளால் நடத்தப்படும் உணவகம், துரித உணவகம் ஆகியவையும் தொடங்கப்பட்டன. குறைந்த விலையில், தரமான உணவுப் பொருட்களை தயாரித்து வழங்கியதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றன. இருப்பினும், நிர்வாகக் குளறுபடி, ஆட்கள் பற்றாக்குறை, பணம் கையாடல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கைதிகளால் நடத்தப்பட்டு வந்த நவீன முடி திருத்தகம் (சலூன்), காய்கறி மார்க்கெட், உணவகம், துரித உணவகம் ஆகியவை கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் மூடப்பட்டன. இதையடுத்து கடந்த 2017ம் ஆண்டு அக்டோர் மாதம் மீண்டும் சிறை உணவகம் திறக்கப்பட்டது.
இதற்கிடையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு சிறை உணவகம் மூடப்பட்டது. உணவகம் மூடப்பட்டு 3 ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாத உணவகம் பாழடைந்த நிலையில் காணப்பட்டது. தற்போது, சிறை உணவகம் புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகள் அடுத்த வாரத்திற்குள் முடிக்கப்பட்டு வருகிற 14ம் தேதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.