சிவகங்கை, பிப். 13: சிவகங்கை அருகே இலுப்பக்குடி இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை இணை அமைச்சர் ஷோபாகரண்ட்லஜே கலந்துகொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘’பிரதமர் மோடி 73வயதிலும் 18மணி நேரம் உழைக்கிறார். தேர்தலின் போது சொல்லப்பட்ட 10லட்சம் பேருக்கு பணி வாய்ப்பு வாக்குறுதி என்பது இப்போது சாத்தியமாகி இருக்கிறது.
இந்த பனிரெண்டாவது ரோஸ்கார் மேளாவில் இந்தியா முழுவதும் ஒரு லட்சம் பேர் இன்று பணி நியமனத்தை பெறுகின்றனர். பணி நியமனம் பெறும் அனைவரும் அவரவர் துறையில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மிகச் சிறப்பாக பணியாற்ற வேண்டும். நாம் இன்றைய தொழில்நுட்பங்களை சரியாக பயன்படுத்தும் போது உலகில் முதல் இடத்திற்கு இந்தியாவை கொண்டு செல்ல முடியும். உங்களை நீங்கள் உயர்த்திக் கொண்டால் அனைத்து துறைகளும் முதன்மை நிலை அடையக்கூடியதாக அமையும். வேளாண் துறையில் 30ஆயிரம் பெண்களுக்கு டிரோன் மூலம் விதை தூவல் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது’’ என்றார்.
தொடர்ந்து ஆயுத தளவாடம் மற்றும் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். அஞ்சலக, இந்திய தொழில் நுட்ப கழகம், வன பாதுகாப்பு மற்றும் தேசிய வங்கி என பல்வேறு துறைகளில் பணிபுரிய 138 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்தோ திபெத் துணை காவல் துறை தலைவர் அக்சல் சர்மா, கண்காணிப்பாளர் சுரேஷ் யாதவ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.