சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்த விவகாரம் தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான மேலும் ரூ.457 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

சென்னை: வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்த விவகாரத்தில், தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையை தொடர்ந்து ரூ.457 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டன. கோவையை சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின். இவர் லாட்டரி சீட்டு விற்பனை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்து வருகிறார். மார்ட்டின் சிக்கிம் மாநில அரசின் லாட்டரி சீட்டுகள் அச்சடித்து விற்பனை செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதைதொடர்ந்து சிபிஐ விசாரணை நடத்தியதில் கடந்த 2009ம் முதல் 2010ம் ஆண்டு காலக்கட்டத்தில் லாட்டரி விற்பனையில் முறைகேடாக ரூ.910 கோடி சம்பாதித்ததாகவும், அந்த பணத்தை தனது 40 நிறுவனங்கள் மீது அசையா சொத்துக்களில் முதலீடு செய்து இருந்தது தெரியவந்தது.

மேலும், இந்த மோசடி தொடர்பாக நடந்து சோதனையில், சட்டவிரோதமாக பல கோடி ரூபாய் வெளிநாடுகளில் முதலீடு செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து அமலாக்கப்பிரிவு தொழிலதிபர் மார்ட்டின் மீது சட்டவிரோத பணம்பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கடந்த ஆண்டு ஜூலை 2ம் தேதி ரூ.173 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கியது. இந்நிலையில், தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் அவரது மகன், மருமகனுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் என 5 இடங்களில் கடந்த 11 மற்றும் 12ம் தேதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள மார்ட்டின் மருகனுக்கு சொந்தமான வீடு, அலுவலகம், கோவையில் உள்ள மகன், மார்ட்டினுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் இருந்து பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் சோதனையில் கிடைத்த ஆவணங்களை வைத்து அதிகாரிகள் கணக்காய்வு செய்த போது, சட்டவிரோதமாக வெளிநாடுகளில் முதலீடு செய்தது மற்றும் வருமானத்தை மறைத்து ரூ.457 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வாங்கி குவித்து இருந்தது உறுதியானது. அதைதொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.457 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் ஆசையா சொத்துக்களை நேற்று முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் இதுவரை தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான சட்டவிரோத பணம் பரிமாற்றம் சட்டத்தின் கீழ் ரூ.630 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்கு தண்டனை விவரம் நாளை அறிவிப்பு..!!

மதுரை வாலாந்தூர் கோயில் விழாவில் கிடாமுட்டு விளையாட்டுக்கு அனுமதி தர உத்தரவு

17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கார் டிரைவர் எஸ்கேப்