கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் சிலைகள் வாங்கிய விவகாரம் அமெரிக்காவில் உள்ள பெண் தொழிலதிபர் ஷோபா நேரில் ஆஜராக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சம்மன்

சென்னை: சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள தொழிலதிபர் ஷோபா துரைராஜன் என்பவர் வீட்டில் மிகவும் பழமையான சிலைகள் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் 7 பழங்கால சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிலைகள் குறித்து பெண் தொழிலதிபரிடம் விசாரணை நடத்தியபோது கடந்த 2008 மற்றும் 2015ம் ஆண்டுகளில் பிரபல சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் நடத்திவரும் அபர்ணா ஆர்ட் கேலரியில் இருந்து வாங்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதற்கிடையே சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பெண் தொழிலதிபரிடம் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறியிருந்தனர். அதற்கு அவரும் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் நேரில் ஆஜராவதாக உறுதியளித்து இருந்தார். அதைதொடர்ந்து கடந்த ஏப்ரல் 3வது வாரத்தில் மீண்டும் ரகசிய தகவலின் படி பெண் தொழிலதிபர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 200 ஆண்டுகள் பழமையான 55 கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிலைகள் அனைத்து தீனதயாளனிடம் சட்டவிரோதமாக வாங்கிய தெரியவந்துள்ளது. ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட 55 கற்சிலைகளுக்கு பெண் தொழிலதிபர் ஷோபா துரைராஜனிடம் எந்த ஆவணங்களும் இல்லை என்று தெரியவந்துள்ளது.

இதனால் இவர் தமிழகத்தில் இருந்து சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்தி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் உள்ள பெண் தொழிலதிபர் ஷோபா துரைராஜன், உறுதி அளித்தப்படி விசாரணைக்கு சென்னை திரும்பவில்லை. பலமுறை அவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்பு கொண்டு அழைத்தும் அவர் நேரில் வர தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. எனவே, அமெரிக்காவில் உள்ள பெண் தொழிலதிபர் ஷோபா துரைராஜன் நேரில் வந்து வீட்டில் இருந்து மீட்கப்பட்ட 55 கற்சிலைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பி உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

Auto Draft

மே-15: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

போரெல், ஸ்டப்ஸ் அதிரடி அரை சதம் லக்னோவை வீழ்த்தியது டெல்லி