வெட்கமே இல்லாமல் டிடிவியுடன் கைக்கோர்த்து உள்ளார் வாழ்நாள் முழுவதும் இனி ஓபிஎஸ்சுக்கு தர்மயுத்தம்தான்: எடப்பாடி காட்டம்

திருச்சி: ‘வெட்கமே இல்லாமல் டிடிவியுடன் கைக்கோர்த்து உள்ளார். வாழ்நாள் முழுவதும் இனி ஓபிஎஸ்சுக்கு தர்மயுத்தம்தான்’ என்று ஒரத்தநாட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பேருந்து நிலையம் பகுதியில் நேற்றிரவு அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அதிமுக தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்கியது ஓபிஎஸ் தான். அதிமுகவின் அழிவுக்கு ஓபிஎஸ் தான் காரணம். துரோகியும், துரோகியும் ஒன்றாக சேர்ந்துள்ளனர். ஜெயலலிதாவால் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் சேர்ந்திருக்கிறார். கடந்த காலங்களில் டிடிவி தினகரன் தான் என்னுடன் பிரச்னை செய்து, முதல்வர் பதவியில் இருந்து என்னை நீக்கினார் என ஓபிஎஸ் பேசினார். ஆனால், தற்போது வெட்கம் இல்லாமல் டிடிவி தினகரனுடன் கை கோர்த்துள்ளார். ஓபிஎஸ் இனி வாழ்நாள் முழுவதும் ‘தர்மயுத்தம்’ தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டியது தான். அமமுக என்ற கட்சியை தொடங்கி, ஆசை வார்த்தைகளை கொட்டி அதிமுக நிர்வாகிகளை தங்கள் பக்கம் டிடிவி தினகரன் இணைத்துக் கொண்டார்.

நான் உயிருடன் இருக்கும் வரை டிடிவி தினகரன் என் வீட்டின் பக்கம் கூட வர முடியாது என்று ஓபிஎஸ் சொன்னார். ஆனால், இன்று அவருடன் சேர்ந்துள்ளார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று ஓபிஎஸ் சொன்னார். இதை விசாரித்து ஆக வேண்டும் என என்னிடம் கண்டிஷன் போட்டார். இதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. ஓபிஎஸ்சுடன் இருந்த நிர்வாகிகள், விசாரணை கமிஷன் நீங்கள் அமையுங்கள் என்று என்னிடம் சொன்னார்கள். மனமில்லாமல் நான் விசாரணை கமிஷன் அமைத்தேன். அப்படிபட்ட மனிதர் தான் ஓபிஎஸ். டிடிவி தினகரனுக்கு கடந்த காலங்களில் பன்னீர்செல்வம் துரோகியாக தெரிந்தார். இன்று நண்பராகி விட்டார்.

துரோக சிந்தனை கொண்டவர்கள், இன்றைக்கு கை கோர்த்து பகிரங்கமாக பேசுகிறார்கள். முக்கியமாக, எந்த காலத்திலும் அதிமுகவை ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனால் கைப்பற்ற முடியாது. நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் அதிமுக நம்முடையது தான் என்று சொல்லி விட்டன. இவர்கள் ஒன்று சேர்ந்தாலும் அதிமுகவில் ஒரு செங்கலை கூட பிடுங்க முடியாது. ஓபிஎஸ் தூண்டுதலின்பேரில் தான் தலைமை கழக அலுவலகத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்து ஜெயலலிதா படத்தை உடைத்து, அங்கு பொருட்களை எடுத்துச் சென்றனர். எடுத்துச் சென்ற பொருட்களை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் போராடி வெற்றி பெற்றோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

தீவிர மழைக்கான ஆரஞ்சு அலர்ட்; பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி ஐகோர்ட் கிளை ஆணை

மழையின்போது அசம்பாவிதம் நேரிட்டால் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் : மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்!!