நடிகை பலாத்கார வழக்கு விசாரணையை ஜூலை 31ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு: உச்ச நீதிமன்றம் அதிரடி

திருவனந்தபுரம்: மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை ஜூலை 31ம் தேதிக்குள் முடிக்க எர்ணாகுளம் தனி நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கேரளாவில் கடந்த 2017ம் ஆண்டு பிரபல மலையாள நடிகை திருச்சூரில் இருந்து கொச்சிக்கு இரவில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பலால் கடத்தி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக நடிகையின் முன்னாள் கார் டிரைவரான சுனில் குமார் என்பவர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்திற்கு பிரபல முன்னணி மலையாள நடிகர் திலீப் சதித் திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் முக்கிய நபராக கருதப்படும் சுனில்குமார் தவிர நடிகர் திலீப் உள்பட அனைவருக்கும் ஜாமீன் கிடைத்து விட்டது. பாதிக்கப்பட்ட நடிகையின் வேண்டுகோளுக்கு ஏற்ப இந்த வழக்கு விசாரணை தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பலாத்கார சம்பவம் நடந்து 6 வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை இந்த வழக்கில் விசாரணை முடியவில்லை. விசாரணையை முடிப்பதற்கு பலமுறை உச்சநீதிமன்றம் கெடு விதித்தபோதிலும், பல்வேறு காரணங்களால் விசாரணை நீண்டு கொண்டே செல்கிறது.

விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றத்திடம் பலமுறை தனி நீதிமன்றம் கால அவகாசம் கேட்டது. உச்சநீதிமன்றம் அதற்கு அனுமதி அளித்தது. இந்தநிலையில் இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிடக் கோரி நடிகர் திலீப் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி தனி நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து தாக்கல் செய்த அறிக்கையில், நடிகர் திலீப் தரப்பில் தான் விசாரணையை தாமதப்படுத்துவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. தொடர்ந்து ஜூலை 31ம் தேதிக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும், ஆகஸ்ட் 4ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தனி நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Related posts

லிஃப்டில் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது

உலகின் முதன்முறையாக ரோபோக்கள் மூலம் தலைமாற்று அறுவை சிகிச்சை: அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட அனிமேஷன் வீடியோவால் பொதுமக்கள் வியப்பு

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகள் இடித்து அகற்றம்; ரூ16 கோடியில் நவீனமயமாகும் ஜோலார்பேட்டை ரயில் நிலையம்: கட்டுமான பணிகள் தீவிரம்