ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகள் இடித்து அகற்றம்; ரூ16 கோடியில் நவீனமயமாகும் ஜோலார்பேட்டை ரயில் நிலையம்: கட்டுமான பணிகள் தீவிரம்


ஜோலார்பேட்டை: ரூ16 கோடியில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் நவீனமயமாகும் பணி தீவரமாக நடைபெற்று வருகிறது. ஜோலார்பேட்டை ரயில் நிலையம் தமிழகத்தின் மிகப்பெரிய ரயில் நிலையத்தில் ஒன்றாக விளங்கி வருகிறது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை இணைக்கும் முக்கிய ரயில் நிலையமாகவும் உள்ளது. இதனால் இந்த மார்க்கத்தில் சரக்கு ரயில் மற்றும் பயணிகள் ரயில் என நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனர். இத்தகைய ரயில் நிலையத்தின் அடிப்படை வசதி, மற்ற ரயில் நிலையங்களை காட்டிலும் பின் தங்கிய நிலையில் இருந்து வந்தது.

இதனால் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோர் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் பரிந்துரை செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். அதனடிப்படையில், பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ரயில் நிலையத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணியை கடந்த ஆண்டு துவக்கி வைத்தார். இதில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை நவீன வசதியுடன் மேம்படுத்த ரூ16 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணி துவங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ரயில் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ரயில்வே குடியிருப்புகளை இடித்து அகற்றி அப்புறப்படுத்தினர். மேலும் டூவீலர் பார்க்கிங், கார் பார்க்கிங், ரயில்வே நிர்வாகத்தில் துறை சார்ந்த பிரிவு அலுவலகங்கள் ரிசர்வேஷன் கவுண்டர், டிக்கெட் கவுண்டர் உள்ளிட்டவர்கள் அடங்கிய கட்டிடம் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மேலும் லிப்ட் வசதி, எஸ்கலேட்டர் வசதி, கோச் டிஸ்பிலே உள்ளிட்டவைகளும் ரயில் பயணிகளுக்கு ஓய்வு அறை, தங்கும் அறை, குடிநீர் வசதி, கேண்டீன் வசதி உள்ளிட்டவைகள் அடங்கிய நவீன ரயில் நிலையமாக மேம்படுத்தும் பணியினை ரயில்வே நிர்வாகம் தீவிரப்படுத்தி வருகின்றனர். இதற்காக ராட்சத இயந்திரங்கள் மூலம் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனால் விரைவில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் மேம்படுத்தப்பட்ட நவீன ரயில் நிலையமாக காட்சியளிக்க உள்ளது.

Related posts

நாட்டு வெடி குடோனில் தீ ஒருவர் பலி

10 ஆண்டுகளாக கடும் பின்னடைவு தமிழகத்திலிருந்து 4 சதவீதம் ஜவுளிகள் மட்டுமே ஏற்றுமதி

வெறுப்பு, மோதல் நீங்கி சகோதரத்துவம், அமைதி நிலவட்டும்: தலைவர்கள் பக்ரீத் வாழ்த்து