ஒடிசா ரயில் விபத்தில் பலி சடலங்களை அடையாளம் காண உதவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

புவனேஸ்வர்: ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களின் 91 சடலங்கள் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. சடலங்களை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ரயில்வே நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 288 பேர் பலியாகி விட்டனர். இதில் அடையாளம் தெரிந்த சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. ஆனால் அடையாளம் காணப்படாத 91 சடலங்கள் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அங்கு முறைப்படி டிஎன்ஏ சோதனை செய்து உறுதிப்படுத்திய பிறகு உறவினர்களிடம் சடலங்கள் ஒப்படைக்கப்படும் என்று ஒடிசா தலைமை செயலாளர் பி.கே. ஜனா அறிவித்தார்.

இதற்கிடையே, விபத்தில் பலியானவர்களை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது. இதற்காக அண்மையில் தொலைதொடர்பு துறையால் தொடங்கப்பட்ட சஞ்சார் சாத்தி இணையதளத்தை ரயில்வே பயன்படுத்தி உள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த இணைய தளம் மூலம் தொலைந்து போன ஸ்மார்ட்போன் , சிம்கார்டு விவரங்களை பதிவு செய்ய தொடங்கப்பட்ட இந்த இணையதளம் தற்போது பல சடலங்களை அடையாளம் காண உதவி இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

அதே நேரத்தில், பலியானவர்களின் விரல் ரேகைகளை பயன்படுத்தி, ஆதார் உதவியுடன் அடையாளம் காண எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. பெரும்பாலான சடலங்களின் கைகளில் காயம் ஏற்பட்டிருந்ததால் ரேகைகளை பதிவு செய்ய முடியவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னைக்கு புறப்பட்டது கோரமண்டல் எக்ஸ்பிரஸ்
மேற்குவங்க மாநிலம் ஷாலிமாரில் இருந்து ஜூன் 2ம் தேதி சென்னை நோக்கி வந்த போது தான் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே விபத்து ஏற்பட்டது. அதன்பிறகு 5 நாட்கள் கழித்து நேற்று மாலை 3.25 மணிக்கு ஷாலிமாரில் இருந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சென்னை நோக்கி புறப்பட்டது.

Related posts

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு

அமெரிக்காவின் புகழ்பெற்ற தானியங்கி தொழில்நுட்ப நிறுவனம் ராக்வெல் ஆட்டோமேஷன் சென்னையில் புதிய தொழிற்சாலையை தொடங்குகிறது

முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது: போக்குவரத்துத்துறை