ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் காந்தி சிலையை திறந்து வைக்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் : பிரதமர் மோடி

புதுடெல்லி: பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஃபியுமியோ கிஷிடாவை ஹிரோஷிமாவில் சந்தித்து பேசியுள்ளார். பிரதமர் மோடி ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை நேற்று தொடங்கினார். முதற்கட்டமாக ஜப்பான் சென்றடைந்த அவர், ஹிரோஷிமாவில் இன்று ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். கனடா, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ஜி7 அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமாவில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு ஜப்பான் பிரதமர் கிஷிடா அழைப்பு விடுத்துள்ளார். இதை ஏற்று ஜி7 மாநாட்டில் பங்கேற்கவும், அதைத் தொடர்ந்து பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு செல்லவும் 6 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று புறப்பட்டுச் சென்றார்.

முதற்கட்டமாக ஜப்பானின் ஹிரோஷிமாவுக்கு சென்றடைந்த அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், ஹிரோஷிமா நகரில் காந்தி சிலையை திறந்து வைக்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஹிரோஷிமா மாநகர மேயர், கவுன்சில் உறுப்பினர்கள் , ஜப்பான் அரசுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.உலக அமைதிக்காக காந்தியின் அகிம்சா கொள்கையை நாம் கடைபிடிக்க வேண்டும் இது தான் காந்திக்கு நாம் செலுத்தும் மரியாதை ஆகும்,”என்றார். தொடர்ந்து பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஃபியுமியோ கிஷிடாவை ஹிரோஷிமாவில் சந்தித்தார். பல்வேறு துறைகளிலும் இந்தியா – ஜப்பான் உறவுகளை மேம்படுத்தும் வழிகள் குறித்து உரையாடியதாகவும் வர்த்தகம், பொருளாதாரம், கலாச்சார பரிவர்த்தனைகள் குறித்தும் ஆலோசித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

கன்னியாகுமரியில் பெய்து வரும் தொடர் கனமழையால் மாவட்டத்தின் முக்கிய ஆறான பழையாற்றில் வெள்ளப்பெருக்கு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே 50 கிலோ குட்கா பறிமுதல்: 2 பேர் கைது

வில்வித்தை உலக கோப்பை போட்டி; இந்திய பெண்கள் அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை