கர்நாடகாவின் 8 அமைச்சர்களின் பட்டியல் வெளியீடு : மல்லிகார்ஜுனா கார்கேவின் மகன் அமைச்சராகிறார்!!

பெங்களூரு : கர்நாடகாவின் புதிய அமைச்சரவையில் இடம்பெறும் 8 பேர் கொண்ட முதற்கட்ட பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது. கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 135, பாரதிய ஜனதா கட்சி 66, மஜத 19 தொகுதிகளிலும் 4 பேர் சுயேட்சைகளாக வெற்றி பெற்றனர்.காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றதை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற கட்சி தலைவராக சித்தராமையா நேற்று முன்தினம் தேர்வு செய்யப்பட்டார்.

அதை தொடர்ந்து தங்கள் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கும்படி ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் நேரில் சந்தித்து கடிதம் கொடுத்தனர். அதையேற்று கொண்ட ஆளுநர் மே 20ம் தேதி (இன்று) பகல் 12.30 மணிக்கு பதவியேற்பு விழா பெங்களூரு கண்டீரவா விளையாட்டு அரங்கில் நடத்தப்படும் என்று தெரிவித்தார். அதன்படி இன்று பகல் பதவியேற்பு விழா நடக்கிறது. இதில் முதல்வராக சித்தராமையா, துணைமுதல்வராக டி.கே.சிவகுமார் உள்பட சில அமைச்சர்கள் பதவியேற்கிறார்கள். அவர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

இந்த நிலையில்,கர்நாடகாவில் முதல்வர், துணை முதல்வருடன் இன்று பதவியேற்க உள்ள 8 அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பரமேஸ்வரா, கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், பாட்டீல் உள்ளிட்ட 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.சதீஷ் ஜர்கிஹோலி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஷமீர் அகமதுகான் ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்கின்றனர். காங்கிரஸ் தலைவர் கார்கேவின் ஒப்புதலை அடுத்து 8 அமைச்சர்களின் பட்டியலை கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

இந்தியா – கம்போடியா இடையே முதல் நேரடி விமானசேவை

மெக்கா: வெப்ப அலையால் ஹஜ் பயணிகள் 19 பேர் பலி