கலைஞர் நினைவு நூலகம் மே 30ல் தயாராகி விடும்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

மதுரை: மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் மே 30ல் தயாராகி விடும். திறப்பு விழா தேதியை முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.மதுரையில் ரூ.114 கோடியில் கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி, மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கட்டுமான பணிகள் குறித்து, அதிகாரிகளிடம் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். இதனைத்தொடர்ந்து, அமைச்சர் எ.வ.வேலு அளித்த பேட்டி:

நூலக கட்டுமான பணிகள் முடிந்து, தற்போது நூல்கள் அடுக்கும் பணி நடந்து வருகிறது. வரும் 15ம் தேதிக்குள் இப்பணி முழுமை அடைந்துவிடும். அதனைத்தொடர்ந்து, 30ம் தேதிக்குள், கலைஞர் சிலை நிறுவுதல் மற்றும் அனைத்து பணிகளும் முழுமை பெற்று திறப்பு விழாவிற்கு தயாராகி விடும். நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், தேதியை அறிவித்து திறந்து வைக்க உள்ளார்.தமிழக இளைஞர்களின் நலனுக்காக, வேலைவாய்ப்பை உருவாக்க மட்டுமே முதல்வர் வெளிநாடு செல்கிறார். அரசு செம்மையாக நடைபெற உந்துசக்தியாக உதவுகிற மனம் ஆளுநர் படைத்திருக்க வேண்டும்.

ஆனால் ஆளுநர் மனம்போன போக்கில் ஏதேதோ சொல்லிக்கொண்டிருக்கிறார். அதனை பெரிதுபடுத்த தேவையில்லை.அதை நாங்கள் கண்டுகொள்ளவும் இல்லை. அண்ணா காலத்தில் இருந்தே தமிழகம் இருமொழிக்கொள்கை உடைய மாநிலம். தமிழ், ஆங்கிலம் தான் இங்கு இருக்கும். தமிழுக்குத்தான் இங்கு முதலிடம். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

சத்தியமங்கலம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

கொடைக்கானல் வனச்சரகத்திற்கு உட்பட்ட பூம்பாறை, மன்னவனூர் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் வாகனத்திற்கு தடை

சென்னையில் தென்னிந்திய திரைப்பட, தொலைக்காட்சி கலை இயக்குநர் சங்க நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்