விவசாய நிலத்தில் வேலைபார்த்த பெண்களுக்கு சிரட்டையில் டீ: வீடியோ வைரலால் மாமியார், மருமகள் கைது

அரூர்: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த போளையம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் மனைவி செல்வி (50). இவர் கம்பைநல்லூர் போலீசில் கடந்த 9ம் தேதி புகாரளித்தார். அதில், கடந்த 8ம் தேதி செல்வி மற்றும் அதே பகுதியை சேர்ந்த பிரியா, வீரம்மாள், மாரியம்மள் ஆகியோர் அரூர் அடுத்த ஆர்.கோபிநாதம்பட்டியை சேர்ந்த சிவன் மனைவி சின்னதாய் (55) என்பவரின் நிலத்திற்கு கொள்ளு செடி பிடுங்கும் பணிக்கு சென்றோம். சின்னதாயின் மருமகள் தரணி (36) டீ கொண்டு வந்தார். அப்போது எங்கள் அனைவருக்கும் தேங்காய் சிரட்டையில் (கொட்டாங்குச்சியில்) டீ ஊற்றி கொடுத்தார்.

பின்னர், அங்கிருந்த அவரது மாமியார் சின்னத்தாயிக்கு சில்வர் டம்ளரில் டீ கொடுத்தார். சாதி வேறுபாடு காரணமாக எங்களுக்கு சிரட்டையில் டீ கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் புகார் மனுவில் தெரிவித்திருந்தார். இதுதொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து செல்வி கொடுத்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சின்னத்தாயி, தரணி ஆகியோரை நேற்று காலை கைது செய்தனர். தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

 

Related posts

நடிகர் ரஜினிகாந்துக்கு ‘கோல்டன் விசா’ வழங்கியது ஐக்கிய அரபு அமீரகம்!

நாளை மறுநாள் வாக்குப்பதிவு: 6-ம் கட்ட மக்களவை தேர்தல் பிரச்சாரம் நிறைவு

கோயிலில் விலை உயர்ந்த ஆபரணங்கள் மாயமாகி 9 வருடங்கள் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி