தமிழ்நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டதா?.. ஒடிசா புரி ஜெகந்நாதர் கோயில் சாவியை கண்டுபிடிச்சு கொடுங்க: மோடிக்கு வி.கே.பாண்டியன் பதிலடி


புவனேஸ்வர்: ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்கிறது. ஒடிசாவில் 25 ஆண்டுகளாக பிஜூ ஜனதா தளம்தான் ஆட்சியில் இருந்து வருகிறது. முதல்வர் நவீன் பட்நாயக்கின் அரசில் பணியாற்றிய தமிழ்நாட்டை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி, தற்போது பிஜூ ஜனதா தளத்தின் முக்கிய தலைவராகவும் உருவெடுத்துள்ளார். இதனால் ஒடிசாவில் பிரசாரம் செய்யும் பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் வி.கே.பாண்டியனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பிரதமர் மோடி பேசுகையில், புரி ஜெகந்நாதர் கோயில் கருவூலத்தின் சாவி எங்கே என்பதில் ஆளும் அரசு மீது ஒடிசா மக்கள் கோபமாக உள்ளனர்.

அந்த கருவூல அறையின் சாவி தமிழ்நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டதா? தமிழ்நாட்டுக்கு அனுப்பியவர்கள் யார்? அவர்களை மன்னிப்பார்களா மக்கள்? என பேசியிருந்தார். இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அதாவது, ஜெகந்நாதர் மீது அளவற்ற பக்தி கொண்ட ஒடிசா மக்களை தமிழக மக்களுக்கு எதிராக தூண்டும் பேச்சல்லவா இது? ஆலயத்தின் பொக்கிஷத்தை களவாடும் திருடர்கள் என்ற பழியை தமிழக மக்கள் மீது பிரதமர் மோடி சுமத்தலாமா? தமிழக மக்களை நேர்மையற்றவர்கள் என்று கூறுவது, தமிழ்நாட்டை அவமதிப்பது அல்லவா? என்று சாடியிருந்தார்.

மேலும் தமிழக தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மோடியின் குற்றச்சாட்டுக்கு வி.கே.பாண்டியன் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, ‘புரி ஜெகந்நாதர் கோயில் கருவூலத்தின் சாவி எங்கே என்பதை தமக்கு கீழே உள்ள அதிகாரிகளை வைத்து மோடி கண்டுபிடித்து ஒடிசா மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்றார்.

Related posts

விவசாயிகளுக்கு தேவையான இயந்திரங்கள் இருப்பில் உள்ளன: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து

குமரியில் கடல் அலைகள் சுமார் 10 அடி உயரத்துக்கு எழுவதால் எச்சரிக்கை