தேனீ வளர்க்கலாம் வாங்க!

ஒரு சொட்டுத் தேனுக்கு இருக்கும் கிராக்கி சமுத்திரத்தில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இருக்கும் உப்புத் தண்ணீருக்கு இல்லை. இன்றைக்கு திரும்பும் இடமெல்லாம் மலைத்தேன், கொம்புத்தேன், அடுக்குத்தேனீ, கொசுத்தேனீ வியாபாரிகள் தேனை விற்பனை செய்து வருகிறார்கள். இவ்வுலகில் எந்தவொரு உயிரினமும் மற்றொரு உயிரினத்தைச் சார்ந்துதான் இருக்கும். அதுபோலதான் தாவரத்திற்கும் தேனீக்களுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஆம், தேனீக்களின் மூலம்தான் தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. இதன்மூலமே தாவரத்தின் பெருக்கம் அதிகரிக்கிறது. மனிதர்கள் போல் தேனீக்கள் தனித்துச் செயல்படாமல் கூட்டாகவே இயங்குகின்றன. ஒரு தேனீக்கூட்டுக்குள் ஒரு ராணித்தேனீதான் இருக்கும். இதற்கு கீழ்தான் ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீக்கள் எல்லாம் இயங்கும். ஒரு கூட்டில் ஆண் தேனீ நூறுக்கும் மேல் இருக்கும். வேலைகாரத் தேனீக்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும். பெரிய தேன்கூடாக இருந்தாலும் ஒரே ஒரு ராணி தேனீதான் இருக்கும். ஆனால் வேலைக்காரத் தேனீக்கள் லட்சக்கணக்கில் இருக்கும்.

தற்போது பல விவசாயிகள் வீடுகள் மற்றும் தோட்டங்களில் தேன் கூடுகளை வைத்து வளர்த்து வருகிறார்கள். இதன்மூலம் அந்த விவசாயிகள் நல்ல லாபம் பார்த்து வருகிறார்கள். தேனீ வளர்ப்பு குறித்து பல பகுதிகளில் அரசு சார்பில் வகுப்புகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தேனீ வளர்ப்பு என்பது நிச்சயமாக லாபம் தரும் தொழில்தான். அதைப் பராமரிக்கவும், தேனை விற்பனை செய்யவும் தெரிந்து கொண்டால் யார் வேண்டுமானாலும் இந்தத் தொழிலில் வெற்றி பெறலாம்.அடுக்குத்தேனீ, கொசுத்தேனீ என இரண்டு வகை தேனீக்களை விவசாயிகள் பெட்டிகள் அல்லது பானைகளில் வைத்து வளர்க்கலாம். மலைத்தேனீ, கொம்புத்தேனீ உள்ளிட்டவை பெட்டிகளில் வைத்து வளர்ப்பதற்கு ஏற்றவை அல்ல. அடுக்குத் தேனீ இந்திய தேனீ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வகை தேனீ இனம் மலைத் தேனீக்களை விட அளவில் சிறியதாகவும், கொம்புத் தேனீக்களை விட அளவில் பெரியதாகவும் இருக்கும். இதுவும் கொட்டும் தன்மையை உடையதுதான். கிட்டத்தட்ட 3.5 கிலோ மீட்டர் தூரம் சென்று கூட பூக்களில் இருந்து தேனை எடுத்து வரும் தன்மை கொண்டது. கொசுத்தேனீக்கள் கொசுக்களை விட அளவில் கொஞ்சம் பெரிதாக இருக்கும். வாயினால் கடிக்கும் தன்மை உடையவை. சிறிதளவு தேன்தான் கிடைக்கும். ஆனால் மருத்துவக் குணமுடையது. வீட்டு இடுக்குகள், கல் இடுக்குகள், மரப் பொந்துக்களில் மரப் பிசின்களைக் கொண்டு கூடு கட்டி வாழும் இயல்பை உடையவை. கொசுத்தேனீக்கள் பானைகளில் வைத்து வளர்ப்பதற்கு மிகவும் ஏற்றவை. இத்தகைய தேனீக்களை வளர்த்து நம் வருமானத்தைப் பெருக்கி, விவசாயத்தையும் செழிக்கச் செய்யலாம்!

 

Related posts

தெலுங்கானா மாநிலம் மேடக் நகரில் பாஜக பேரணியில் இருதரப்பு மோதல்

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு

நீட் தேர்வு முறைகேடு: மேலும் 9 மாணவர்களுக்கு நோட்டீஸ்