பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பாஜ எம்பி பிரிஜ் பூஷண் சிங்கை ஒன்றிய அரசு பாதுகாப்பது ஏன்?.மல்யுத்த வீராங்கனைகளை சந்தித்த பிரியங்கா ஆவேசம்

புதுடெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பாஜ எம்பி பிரிஜ் பூஷண் சரண்சிங்கை ஒன்றிய அரசு பாதுகாப்பது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜ எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டம் தொடங்கி உள்ளது. இப்போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். நெருக்கடி முற்றிய நிலையில், பிரிஜ் பூஷண் மீது டெல்லி போலீசார் போக்சோ உள்ளிட்ட 2 எப்ஐஆர்களை பதிவு செய்தனர்.

பிரிஜ் பூஷண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டாலும் அவரை கைது செய்ய வேண்டும், அனைத்து பதவியிலிருந்தும் அவரை நீக்க வேண்டுமென மல்யுத்த வீராங்கனைகள் தங்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று காலை ஜந்தர் மந்தருக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சி மாலிக் மற்றும் வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோரை சந்தித்து பேசி ஆதரவு தெரிவித்தார். பின்னர் பிரியங்கா காந்தி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:இங்கு போராட்டம் நடத்தும் வீராங்கனைகள் பதக்கம் வென்ற போது அவர்கள் நம் நாட்டின் பெருமை என்று ட்வீட் செய்தார்கள். பிரதமர் மோடி தேநீர் விருந்து கொடுத்தார். ஆனால் இப்போது அவர்கள் சாலையில் அமர்ந்து, தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கூறும்போது, அவர்களின் பேச்சை கேட்க யாரும் தயாராக இல்லை.

குற்றம்சாட்டப்பட்ட பிரிஜ் பூஷணை அனைத்து பதவியிலிருந்தும் நீக்க வேண்டும். அதிகாரத்தை பறிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை அழிக்கவும், அவர்களை துன்புறுத்தவும், அழுத்தம் கொடுக்கவும் செய்வார். கடுமையான குற்றச்சாட்டுகள் இருந்தும் அவரை ஏன் ஒன்றிய அரசு பாதுகாக்க துடிக்கிறது. பிரதமர் மோடியிடம் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை, ஏனென்றால் அவர் மல்யுத்த வீரர்களைப் பற்றி அக்கறை கொண்டிருந்தால், குறைந்தபட்சம் அவர்களை அழைத்து பேசியிருப்பார். பெண்கள் சுரண்டப்படும் போதெல்லாம், பாஜ அரசு ஊமையாக செல்கிறது. இந்த மல்யுத்த வீராங்கனைகளைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன், நாம் அனைவரும் அவர்களுடன் நிற்க வேண்டும். இவ்வாறு பிரியங்கா காந்தி கூறினார். இதே போல டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும் நேற்று மாலை வீராங்கனைகளை போராட்ட களத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

Related posts

பிரதமர் நரேந்திர மோடியின் ‘முஜ்ரா’ பேச்சு: தலைவர்கள் கடும் கண்டனம்

9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம்

மே-27: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை