சோலார் பேனல் மோசடி வழக்கை விசாரித்த கேரள மாஜி டிஎஸ்பி ரயில் முன் பாய்ந்து தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது

திருவனந்தபுரம்: கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கை விசாரித்த ஓய்வு பெற்ற டிஎஸ்பி நேற்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள ஹரிப்பாடு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (60). இவர் எர்ணாகுளம் அருகே உள்ள பெரும்பாவூரில் டிஎஸ்பியாக பணிபுரிந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார். இவர் இங்கு டிஎஸ்பியாக இருந்தபோது சரிதா நாயர் மீதான சோலார் பேனல் மோசடி வழக்கை விசாரித்து வந்தார். இந்த நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து இவர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனையும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ேநற்று காலை ஹரிப்பாடு ஏலூர் பகுதியிலுள்ள ரயில்வே தண்டவாளத்தில் ஹரிகிருஷ்ணன் ரயில் மோதி இறந்த நிலையில் காணப்பட்டார். அவரது சட்டை பாக்கெட்டில் இருந்து தற்கொலைக்கு முன்பு எழுதப்பட்டிருந்த கடிதம் கிடைத்தது. அதில் உருக்கமான தகவல்களை ஹரிகிருஷ்ணன் குறிப்பிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் அதிக விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

தேஜஸ்வி யாதவா? தேஜஸ்வி சூர்யாவா?.. பெயர் குழப்பத்தால் சொந்த கட்சி வேட்பாளரை தாக்கிய கங்கனா: லாலு மகன் கிண்டல்

தமிழ்நாடு அரசின் 108 கட்டுப்பாட்டு மையம் சார்பில் +2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை

அரைகுறை ஆடைகளுடன் ‘ப(ம)ப்’பில் விடிய விடிய ஆபாச நடனம் ஐதராபாத்தில் 75 இளம்பெண்கள் சிக்கினர்