தமிழ்நாட்டில் முதன்முறையாக தமிழ்நாடு மருத்துவ சுற்றுலா மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ்நாட்டில் முதல் முறையாக மருத்துவ மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு மருத்துவ சுற்றுலா மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். மேலும், தமிழ்நாட்டில், தேசிய மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சேவைகள் அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகள் குறித்த புத்தகத்தையும் முதல்வர் வெளியிட்டார். மாநாட்டில் பல்வேறு மருத்துவமனைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார். 2023-24ம் ஆண்டிற்கான சுற்றுலாத்துறை மானிய கோரிக்கையில், “மருத்துவ சுற்றுலாவிற்கான சிறந்த தலமாக தமிழ்நாட்டினை அடையாளப்படுத்த மருத்துவ துறையில் தொழில் முனைவோர்களுடன் இணைந்து சர்வதேச மருத்துவ சுற்றுலா மாநாடு சென்னையில் நடத்தப்படும்.

இந்த மாநாடு உடல்நலம் பேணும் வல்லுநர்களை ஒருங்கிணைக்கும் வகையில் கண்காட்சி அரங்கங்கள், கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம் நடத்தவும் ஒரு சிறந்த தளமாக அமையும்” என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு சுற்றுலா துறையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையும் இணைந்து தமிழ்நாட்டில் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்திடவும், தமிழ்நாட்டை முன்னணி மருத்துவ சுற்றுலா தலமாக மாற்றும் வகையில், “தமிழ்நாடு மருத்துவ சுற்றுலா மாநாடு” சென்னையில் நேற்று நடந்தது. மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மேலும், “Tamil Nadu – Where the world comes to heal” என்ற தமிழ்நாட்டில், தேசிய மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சேவைகள் அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகள் குறித்த புத்தகத்தையும் முதல்வர் வெளியிட்டார். மாநாட்டில் வங்கதேசம், நேபாளம், சவுதி அரேபியா, ஓமன், மியான்மர், ஸ்ரீலங்கா, மொரீசியஸ், மாலத்தீவுகள், வியட்நாம் மற்றும் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகள் என 21 வெளிநாடுகளை சேர்ந்த 75க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மேலும், மாநாட்டில் தமிழ்நாட்டின் 120 தனியார் மருத்துமனைகளில் இருந்து பல்வேறு பிரிவுகளில் பிரபலமான மருத்துவர்கள், அயல்நாட்டு தூதரக அதிகாரிகள், பயண ஏற்பாட்டாளர்கள், ஓட்டல் நிர்வாகத்தினர், காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், சித்தா, யோகா, ஆயுஷ் துறைகளின் மருத்துவர்கள், ஆரோக்கிய சுற்றுலா மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் என 350 பேர் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன், மனோ தங்கராஜ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் செந்தில்குமார், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் சந்தரமோகன், சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் உமா, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் எஸ்.கணேஷ், இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்கூட்டமைப்பின் தலைவர், நிர்வாகிகள், பல்வேறு உயர் சிறப்பு மருத்துவமனைகளின் நிர்வாகிகள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

காஷ்மீர், மகாராஷ்டிரா உட்பட 4 மாநில தேர்தல்களுக்கான பாஜ பொறுப்பாளர் நியமனம்

ஆர்எஸ்எஸ்சின் துணை அமைப்பு என்சிஇஆர்டி: காங்.பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

ஐஐடி மாணவி தற்கொலை