ஆவடி அடுத்து திருநின்றவூர் பகுதியில் கேட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்தவர் கைது: 18.5 சவரன் நகை பறிமுதல்

ஆவடி: வீட்டின் கிரில் கேட்டின் பூட்டை உடைத்து, தங்க நகையை கொள்ளையடித்தவர் கைது செய்யப்பட்டார். ஆவடி அடுத்து திருநின்றவூர் கோமதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி(42). இவரது கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், லட்சுமி கடந்த மாதம் 20ம் தேதி, திருநின்றவூர் லட்சுமிபுரம் பகுதியில் உள்ள மாமனார், மாமியாரை பார்க்க, முன் கதவை பூட்டாமல் கிரில் கேட்டை மட்டும் பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில், அன்று மதியம் 1.30 மணி அளவில் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன் பக்க கிரில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த சுமார் 17 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து லட்சுமி திருநின்றவூர் போலீசாருக்கு புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.

மேலும், மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், திருட்டில் ஈடுபட்டது திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த மாரியப்பன்(40) என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, திருவண்ணாமலைக்கு சென்ற போலீசார் அவரை சுற்றி வளைத்து நேற்று கைது செய்தனர். பின்னர், நடத்திய விசாரணையில் இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு உள்ளதும் தெரிய வந்தது. மேலும், லட்சுமி வீட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 17 சரவன் நகை உட்பட 18.5 சவரன் நகைகள் மாரியப்பனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related posts

கருவின் பாலினத்தை அறிவித்தால் கடும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் குறைவான ATM மையங்கள்; சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் விளக்கம்!

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தமிழ்நாடு வீரர் சாதனை!