அந்தமான் சிறையில் வாஜ்பாய் காலத்தில் தொடங்கிய அரசியல்; புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை 28ம் தேதி திறப்பது ஏன்?.. பாஜகவின் பின்னணி திட்டம் குறித்து பரபரப்பு தகவல்

டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வரும் 28ம் தேதி திறப்பது ஏன் என்பது குறித்த பாஜகவின் திட்டமும், அதன் பின்னணி குறித்த பரபரப்பு தகவல்களும் வெளியாகி உள்ளன. ஆங்கிலேயர் ஆட்சியில் ‘கவுன்சில் ஹவுஸ்’என்று அழைக்கப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடம், வைஸ்ராய் லார்ட் இர்வினால் கட்டப்பட்டது. இது, சுமார் 96 ஆண்டுகளுக்கு முன் ஜனவரி 18ம் தேதி திறக்கப்பட்ட இந்த நாடாளுமன்றம் இன்று வரை செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு மற்றும் கூடுதல் வசதிகளுக்காக புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கான ஒப்புதலை ஒன்றிய அரசு வழங்கியது. பிரதமர் மோடி கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டினார்.

4 மாடிகள் கொண்ட இந்த புதிய நாடாளுமன்றம் ரூ.970 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதில் 1,224 எம்.பி.க்கள் அமர முடியும். புதிய கட்டிடம் சுமார் 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் முக்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மக்களவையில் இந்தியாவின் தேசியப் பறவையான மயில் நிறத்தில் இருக்கைகள் அமைகின்றன. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் 1,272 உறுப்பினர்கள் வரை அமரும் அளவில் இது விசாலமாக அமைக்கப்பட்டுள்ளது. மக்களவையில் 888, மாநிலங்களவையில் 384 என இருக்கைகள் அமைகின்றன. இந்த வளாகத்தில் உள்ள அலுவலகங்கள் அதிநவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பத்துடன் கூடியதாக வசதிகள் இடம்பெற்றுள்ளது.

புதிய கட்டிடத்தில், மிக நவீன ஆடியோ-விஷுவல் வசதிகளுடன் கூடிய, பெரிய ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துவதற்கான அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. புதிய பாராளுமன்ற கட்டிடம் மாற்றுத்திறனாளிகள் எளிதாக சென்று வர தேவையான வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ‘அரசியலமைப்பு அரங்கு’ எனும் பெயரில் ஓர் அரங்கு, நூலகம், நாடாளுமன்ற குழுக்களுக்கான அறைகள் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன. பழைய கட்டிடம் முழுவதும் அருங்காட்சியகமாக மாற்றியமைக்கப்பட உள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்காத வகையில் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுடன் இக்கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டிடப் பணிகள் முடிவுற்ற நிலையில், வரும் 28ம் தேதி பிரதமர் மோடி, இக்கட்டிடத்தை திறந்து வைக்கவுள்ளார். அதனால் அதற்கான பணிகள் தீவிரமாகி உள்ளன. ஆனால் வரும் 28ம் தேதி எதற்காக தேர்வு செய்யப்பட்டது? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்துத்துவா சித்தாந்தவாதியான வீர் சாவர்க்கரின் 140வது பிறந்தநாளையொட்டி (மே 28), அன்றைய தினம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது சாவர்க்கர் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்டார். அதனால் அவர் சுதந்திர போராட்ட தியாகியாகவும், இந்துத்துவா சித்தாந்தத்தின் அடையாளமாக ஆளும் பாஜக பார்க்கிறது.

மேலும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது கடந்த 2003 பிப்ரவரி 26ம் தேதி நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில், எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சாவர்க்கரின் உருவப்படம் திறக்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் விழாவை புறக்கணித்தன. கடந்த 2004ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அந்தமான் செல்லுலார் சிறையில் சாவர்க்கர் ஆங்கிலேயர்களால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்படும் காட்சிகளின் பலகைகள் அகற்றப்பட்டன்.

கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் மோடி வெற்றி பெற்ற பிறகு, கடந்த 2015 ஜூலையில் மீண்டும் ெசல்லுலார் சிறையில் சாவர்க்கரின் நினைவுப் பலகை நிறுவப்பட்டது. எனவே தற்போது சாவர்க்கரின் 140வது பிறந்த நாளை நினைவு கூரும் வகையில் அதே நாளில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதன் பின்னணி விவரங்களை அறிந்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆளும் பாஜகவை தற்போது விமர்சிக்க தொடங்கியுள்ளன.

Related posts

இபாஸ் உத்தரவை மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை தேவை! தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை!!

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு இவ்வாரம் வெளியாக வாய்ப்பு!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக 4 பேர் கோயம்புத்தூர் சிபிசிஐடி முன் ஆஜர்