ஊட்டியில் நடைபாதையில் கழிவு நீர் சூழ்ந்தது: பொதுமக்கள், பயணிகள் பாதிப்பு

ஊட்டி: ஊட்டியில் சேரிங்கிராஸ் உழவர் சந்தை பகுதியில் இருந்து தாவரவியல் பூங்கா சாலையை இணைக்கும் நடைபாதையை கழிவு நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். நீலகிரி மாவட்டம், ஊட்டியில் தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளது. இப்பகுதியில் இருந்து கோடப்பமந்து கால்வாயை இணைக்கும் ஒரு கழிவு நீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயை ஒட்டியே உழவர் சந்தை பகுதியில் இருந்து பூங்கா சாலையை இணைக்கும் ஒரு நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையை உள்ளூர் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது கோடை சீசன் என்பதால், ஏராளமான சுற்றுலா பயணிகளும் இந்த நடைபாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஊட்டியில் நாள் தோறும் மழை கொட்டி வருகிறது. இதனால், கோடப்பமந்து கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனுடன் கழிவு நீரும் கலந்து செல்கிறது. நேற்று பெய்த மழையின் போது, மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து இந்த நடைபாதையை சூழ்ந்துள்ளது. இதனால், இந்த நடைபாதையை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நடைபாதையை சூழ்ந்துள்ள மழை நீர் மற்றும் சேற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

Related posts

வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்யும் முன் தாயின் ஆசியை பெற முடியவில்லை: பிரதமர் மோடி வருத்தம்

கொடைக்கானல்: மழையால் குறிஞ்சி ஆண்டவர் கோயில் செல்லும் முதன்மை சாலையில் ராட்சத மரம் முறிந்து போக்குவரத்து பாதிப்பு 

வாணியம்பாடி அதிமுக நகர துணை செயலாளர் கோவிந்தனுக்கு பிடிவாரண்ட்