வீரர்கள் சிங்கிள்ஸ் எடுக்ககூட தடுமாறினால் என்ன செய்வது? டெல்லி கேப்டன் வார்னர் புலம்பல்

சென்னை: ஐபிஎல் டி20 தொடரில் நேற்றிரவு சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற 55வது லீக் போட்டியில் சென்னை-டெல்லி அணிகள் மோதின. முதலில் ஆடிய சென்னை 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்தது. ஷிவம் துபே 25, ருதுராஜ் 24 ரன், அம்பதி ராயுடு 23 ரன், ரகானே 21 ரன், ஜடேஜா 21 ரன் அடித்தனர். கேப்டன் டோனி, அதிரடியாக ஆடி 9 பந்துகளில் 20 ரன்கள் விளாசினார். டெல்லி சார்பில் மிட்செல் மார்ஷ் 3 விக்கெட், அக்சர் படேல் 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி களமிறங்கியது. அந்த அணியின் ரூசோவ் 35 ரன், மனீஷ் பாண்டே 27 ரன், அக்சர் படேல் 21 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் சோபிக்கவில்லை. இறுதியில், டெல்லி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 140 ரன் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் சென்னை 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை அணியில் பதீரனா 3 விக்கெட், தீபக் சாகர் 2, ஜடேஜா ஒரு விக்கெட் வீழ்த்தினர். பேட்டிங்கில் 21 ரன்கள் எடுத்ததுடன் 4 ஓவரில் 19 ரன் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்திய ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் 19வது ஓவரில் டோனியும் ஜடேஜாவும் இணைந்து 21 ரன்கள் சேர்த்தனர். இதுதான் ஆட்டத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தோல்வியின் மூலம் டெல்லி அணி 11 போட்டிகளில் ஆடி 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.

வெற்றி குறித்து கேப்டன் டோனி கூறுகையில், “நாங்கள் பந்து வீசும்போது ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் திரும்பியது. பந்தில் சீமை பயன்படுத்தி எங்களுடைய சுழற் பந்துவீச்சாளர்கள் வீசினார்கள். நான் இன்றைய போட்டியில் பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை எதிர்பார்க்காமல் உங்களது திறமையான பந்துவீச்சை மட்டும் வெளிப்படுத்துங்கள். சிறந்த பந்தை மட்டும் வீசுங்கள் என்று கூறியிருந்தேன். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. எனினும் எங்கள் பேட்டிங் வரிசை இன்னும் கூடுதல் சிறப்பாக விளையாடி இருக்கலாம். இந்த ஆடுகளத்தில் சில ஷாட்டுகளை நீங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இன்றைய போட்டியில் எங்கள் வீரர்கள் ஆடிய இரண்டு ஷாட் முறை தவறானது. அதிலும் கொஞ்சம் மாற்றம் தேவைப்படுகிறது. மொயின் அலியும் ஜடேஜாவும் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது நல்லது என நினைக்கிறேன். ஐபிஎல் 2023 ஏனென்றால் இறுதி கட்டத்தை எட்டும்போது அணியில் இருக்கும் பலரும் கொஞ்சமாவது பந்துகளை எதிர்கொண்டு இருக்க வேண்டும். எனது பணி சில பந்துகளை எதிர் கொண்டாலும் அதில் ரன்களை குவிக்க வேண்டும். என்னை தயவு செய்து அதிகமாக ஓட வைக்காதீர்கள். எவ்வளவு பந்துகளை சந்திக்கிறேனோ அதில் அணியின் வெற்றிக்காக எனது பங்களிப்பை கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இதைத்தான் நான் பயிற்சியிலும் செய்து வந்தேன்’’ என்றார். டெல்லி அணி கேப்டன் வார்னர் கூறுகையில், “பவர் பிளேவில் நாங்கள் மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்துவிட்டோம். அப்போதே எங்களுக்கு ஆட்டம் முடிந்து விட்டது. முதல் ஓவரிலே விக்கெட்டை இழக்கும் தவறை நாங்கள் நடப்பு சீசனில் ஐந்து அல்லது ஆறு முறை செய்து விட்டோம். அதுவும் டி20 கிரிக்கெட்டில் ரன் அவுட் ஆவது என்பது நமது விக்கெட்டை நாமே எதிரணிக்கு கொடுப்பது போல் ஆகும். 168 ரன்கள் என்பது எடுக்க கூடிய இலக்கு தான். நாங்கள் சிறப்பான தொடக்கத்தை அளித்து இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பேட்ஸ்மேன் கடைசி வரை நின்று விளையாடி இருந்தால் நிச்சயம் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றிருக்கலாம். நடுவரிசை ஓவரில் நாங்கள் சிங்கிள்ஸ் கூட எடுக்க தடுமாறினோம். பொறுமையாக ஆடுவது தவறு அல்ல. ஆனால் ஒயிடாக அடிக்க வேண்டிய பந்தை கூட கவரில் பீல்டரிடம் அடிப்பது பற்றியெல்லாம் என்ன சொல்வது? நல்ல பந்தில் நாம் ஆட்டம் இழந்து விட்டால் அது வேறு விஷயம். ஆனால் சில பந்துகளை எல்லாம் அடித்து ஆடினால் மட்டுமே ரன்கள் கிடைக்கும். ஆனால் இன்று அதனை எங்கள் அணி வீரர்கள் செய்ய தவறிவிட்டனர்’’ என்றார்.

Related posts

இந்தியா நோக்கி வந்த ரஷ்ய எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்

பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5 மசோதாக்களுக்கு கேரள கவர்னர் ஒப்புதல்

கோடையை கொண்டாட குவிந்தனர்: கொடைக்கானலில் கடும் டிராபிக் ஜாம்