நெல்லை மாநகர பகுதியில் கனமழையால் சேதமடைந்த பாளையங்கால்வாய் கரைகள் சீரமைப்பு பணி துவக்கம்

நெல்லை : நெல்லை மாநகர பகுதியில் கனமழை வெள்ளத்தால் சேதமான பாளையங்கால்வாய் கரைகள் சீரமைப்பு பணி துவங்கி நடந்து வருகிறது.நெல்லை மாவட்டம் மேலச்செவல் அருகில் உள்ள பழவூர் அணைக்கட்டு தாமிரபரணி ஆற்றில் இருந்து பாளையங்கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் கோபாலசமுத்திரம், தருவை, முன்னீர்பள்ளம், மேலப்பாளையம் உள்பட 43 கிமீ தூரம் பயணித்து அரியகுளம் பகுதியில் உள்ள கடைமடை குளமான சானான்குளத்தில் முடிவடைகிறது.

நெல்லை மாநகரம் மேலப்பாளையம் மண்டலம் சந்தனம்மாள்புரம் பாளையங்கால்வாய் நுழைவு பகுதியாகும். இப்பகுதியில் இருந்து பாளை அரியகுளம் கால்வாய் முடிவடையும் பகுதி வரை சாக்கடை கழிவுநீர், மேலகுலவணிகர்புரத்தில் பாதாள சாக்கடை பம்பிங் கழிவுநீர் பாளையங்கால்வாய் கலந்து விடுகிறது. இதனால் பாளையங்கால்வாய் தண்ணீர் தற்போது மாசுபட்டு பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.

கோடைகாலம் என்பதால் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் தற்போது கால்வாயில் சாக்கடை கழிவு நீர், குப்பைகள், அமலை செடிகள் ேதங்கி காணப்படுகிறது. இக்கால்வாய் மூலம் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகின்றன. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழை வெள்ளத்தால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் ஆற்றில் இருந்து உபரி தண்ணீர் பாளையங்கால்வாயில் திறக்கப்பட்டது.

எனவே பாளையங்கால்வாய் நிரம்பி தண்ணீர் சென்றது. இதன்காரணமாக சந்தனம்மாள்புரம், குறிச்சி, கோட்டூர், முருகன்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாளையங்கால்வாயின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இந்த வெள்ளத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலப்பாளையம், மேலநத்தம் பகுதியில் பாளையங்கால்வாய் உடைப்பால் விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பெரிய சேதம் ஏற்பட்டது.

தற்போது பாளையங்கால்வாய் பாசன பரப்பில் அறுவடை பணிகள் முடிந்துள்ளது. இதனால் கால்வாயில் தண்ணீர் அடைக்கப்பட்டுள்ளது. தண்ணீரின்றி காணப்படும் கால்வாயில் சாக்கடை கழிவுகள், குப்பைகள், அமலை ெசடிகள் அடர்ந்து காணப்படுகின்றன. இதனை அகற்றி, கனமழையால் சேதமடைந்த கரைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து பொதுப்பணித்துறை மூலம் பாளையங்கால்வாயில் சேதமடைந்த கரைகளை சீரமைக்கும் பணி துவங்கி உள்ளது. கோட்டூர், முருகன்குறிச்சி சந்தனம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் 30க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சேதமடைந்த கரைகளை சீரமைத்து வருகின்றனர். மேலும் கால்வாயில் காணப்படும் குப்பைகள், அமலை ெசடிகள் அகற்றியும் தூர்வாரும் பணி நடந்து வருகிறது.

Related posts

நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க மேலும் ஒரு தனிப்படை விசாரணை

சென்னையில் இருந்து நெல்லை வந்த அரசு விரைவுப் பேருந்தில் துப்பாக்கி பறிமுதல்

ஐகோர்ட் தீர்ப்பின்படி நிலுவையில் உள்ள கோரிக்கைகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பரிசீலிக்க உத்தரவு