மதுரை நகர மேம்பாட்டிற்காக பாடுபட்ட மாமனிதர்: கருமுத்து கண்ணன் மறைவுக்கு ஓ.பன்னிர்செல்வம் இரங்கல்..!!

சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் மறைவுக்கு ஓ.பன்னிர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; மதுரை, தியாகராசர் கலைக் கல்லூரி, தியாகராசர் பொறியியல் கல்லூரி, தியாகராசர் மேலாண்மைக் கல்லூரி என பல கல்லூரிகளின் தலைவராகவும், நூற்பாலைகளின் தலைவராகவும் திறம்பட செயல்பட்டவர். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அறங்காவலராக நீண்ட காலம் பணியாற்றிய பெருமைக்குரியவர் கருமுத்து கண்ணன்.

இவரது காலத்தில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்றதும், கோயில் நிலங்கள் மீட்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மதுரை நகர மேம்பாட்டிற்காக பாடுபட்ட மாமனிதர். தமிழ்நாடு மாநில திட்டக் குழு உறுப்பினராகவும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் திட்டக் குழு உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. மத்திய அரசின் ஜவுளிக் குழு தலைவராகவும் சிறப்புடன் பணியாற்றிய பெருமைக்குரியவர். மனித குலத்திற்கு சேவை செய்வதை தொண்டாகக் கருதியவர்.

தமிழுக்கு இவர் ஆற்றிய பணி அளப்பரியது. இவரது பொதுச் சேவையையும், தன்னலமற்ற தன்மையையும் பாராட்டும் விதம், 2015ம் ஆண்டு, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கருமுத்து கண்ணன் அவர்களுக்கு காமராசர் விருது வழங்கப்பட்டது. இதற்கான அறிவிப்பினை செய்யும் வாய்ப்பினை ஜெயலலிதாவிடம் எனக்கு அளித்தார்கள் என்பதை இத்தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது லியோ கிளப் செயலாளராக நான் பணியாற்றிய காலத்தில், தமிழ்நாடு-இலங்கை லியோ கிளப் செயலாளராக பணியாற்றியவர் திரு. கருமுத்து கண்ணன் அவர்கள். ஒரு சகோதரர் போல் 50 ஆண்டு காலம் என்னிடம் நெருங்கிப் பழகியவர். நானும் அவரை சகோதரர் போல்தான் பாவித்தேன். தொலைநோக்குப் பார்வை கொண்ட கருமுத்து கண்ணன் அவரின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. என்னுடைய அன்புச் சகோதரை நான் இழந்துவிட்டேன்.

அவருடைய இழப்பு தனிப்பட்ட முறையில் எனக்கு மிகப் பெரிய இழப்பு. இவருடைய இடத்தினை இனி யாராலும் நிரப்ப முடியாது. கருமுத்து கண்ணன் அவர்களை இழந்து வருந்தும் அவர்தம் குடும்பத்தினருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், குறிப்பாக தென் தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7-ம் தேதி முதல் இ-பாஸ் வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

மேட்டுப்பாளையம் அருகே காரமடை திருமா நகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 52 வீடுகள் எரிந்து சேதம்

ஷப்பா… வெயில் தாங்க முடியல… நீர்நிலை சார்ந்த இடங்களை நாடும் சுற்றுலா பயணிகள்: திற்பரப்பு அருவி, கடலில் உற்சாக குளியல்