ஷப்பா… வெயில் தாங்க முடியல… நீர்நிலை சார்ந்த இடங்களை நாடும் சுற்றுலா பயணிகள்: திற்பரப்பு அருவி, கடலில் உற்சாக குளியல்

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது கடும் வெயில் வாட்டி வதைத்துவரும் நிலையில் மக்கள் நீர்நிலைகள் சார்ந்த சுற்றுலா தலங்களை தேடி சென்று வருகின்றனர். கடும் வெயிலுக்கு இடையே குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் வற்றாமல் தண்ணீர் கொட்டுகிறது.

எனவே உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என பலரையும் தன்வசம் ஈர்த்துள்ளது. தற்போது அருவியில் மிதமான அளவில் தண்ணீர் விழுகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பலரும் திற்பரப்பு அருவிக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.தினமும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளு குளு குளியல் போட்டு வருகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்று வாரவிடுமுறை என்பதாலும் காலையிலேயே சுற்றுலா பயணிகள் அதிகளவில் வர தொடங்கினர்.

அருவியில் குளித்து மகிழ்ந்ததோடு, அருகில் உள்ள சிறுவர் நீச்சல் குளத்திலும் நீச்சலடித்தபடியே உற்சாக குளியல் போட்டனர். கோடை வெயிலுக்கு மத்தியிலும் திற்பரப்பு பகுதியில் குளிர்ச்சியான காலநிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் அதனை அனுபவித்து மகிழ்ந்தனர். இதேபோல் திற்பரப்பு அருவியின் மேல் தடாகத்தில் உள்ள தடுப்பணையில் படகு சவாரியும் களைகட்டியது. நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்தனர். சுற்றுலா பயணிகள் படகில் அமர்ந்தவாறு கோதையாறு மற்றும் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியை கண்டு ரசித்தனர்.

என்னதான் தண்ணீரில் படகு சவாரி செய்தாலும் வாட்டும் வெயிலை சமாளிக்க குடைபிடித்தவாறும், தொப்பி அணிந்துகொண்டும் படகில் சென்றதை பார்க்க முடிந்தது. இதேபோல் கன்னியாகுமரி கடற்கரையிலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் திரண்டனர். காலையில் சூரிய உதயத்தை பார்த்து ரசித்ததோடு, படகில் சவாரி செய்து கடல்நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்குக்கு சென்று பார்வையிட்டனர்.

ஆன்மிகம் துளிர்த்த சுற்றுலா பயணிகள் பகவதியம்மன் கோயிலுக்கு சென்று அம்மனை தரிசித்துவிட்டு சென்றதை பார்க்க முடிந்தது. காலையில் வெயில் வருவதற்கு முன்பாகவே பலரும் வந்துவிட்டனர். இதனால் கடைகளிலும் வியாபாரம் அள்ளியது. இதேபோல் குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களான மாத்தூர் தொட்டிப்பாலம், வட்டகோட்டை மற்றும் நீர்நிலை சார்ந்த இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.

Related posts

தனியார் பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

போதைப்பொருளை தடுக்க தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!