கம்முனு கிடக்கும் சின்ன மம்மி மேல் ஆத்திரத்தில் இருக்கும் ஆதரவாளர்கள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘இலை கட்சியில் வேட்பாளர் தேர்வு களேபரமாகியிருக்காமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் நாடாளுமன்ற தொகுதியில் இலை கட்சியில் யார்தான் வேட்பாளர் என்பது தெரியாமல் அந்த கட்சியின் ரத்தங்கள் கொதிக்க, வீரமானவரின் சிபாரிசில் தோல் தொழிலதிபர் ஒருவரை களத்தில் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியானது. காரணம், அவர் மைனாரிட்டி என்பதால் அந்த சமூக வாக்குகள் மூலம் ஜெயித்துவிடலாம் என்பது வீரமானவரின் கணக்காம்.

ஆனால், அந்த கணக்குகள் தற்போது மாறி, குட்டி சிவகாசி நகரை சேர்ந்த மூன்று தொழிலதிபர்களின் பெயர் பட்டியல் அக்கட்சியின் தலைமையால் தயாரிக்கப்பட்டுள்ளதாம். அதில் புலி தலைவரின் பெயரை கொண்டவரின் பெயரும், விசைத்தறி உரிமையாளர் ஒருவரின் பெயரும், பெண் ஊராட்சி மன்ற தலைவரும், அவரது கணவருமான மிமிக்ரி செய்பவரின் பெயரும் இடம்பெற்றுள்ளதாம். இந்த மூவருமே தங்களால் ‘ப’ விட்டமினை எவ்வளவு வேண்டுமானாலும் செலவிட முடியும் என்று மேலிடத்தை மலைக்க வைத்துள்ளார்களாம்.

கடைசியாக மிமிக்ரி செய்பவரின் பெயர் முதலிடத்தில் வைத்திருக்கிறதாம் மேலிடம். அப்படி அவரது பெயரை இறுதி செய்தால், பல இலை கட்சியின் முக்கிய தலைகள் கட்சி மாறவும் தயாராக உள்ளார்களாம். இப்போது இதுதான் வெயிலூர் மாவட்ட ரத்தங்கள் மத்தியில் பரபரப்பான பேச்சாக உள்ளது..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘எடப்பாடியின் இடமும் வலமும் மோதிக்குதாமே..’’ என சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘தமிழகத்தில் கடந்த 2014ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் காமராஜ் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் எடப்பாடியின் வலது கரமான இளங்கோவனும், இடது கரமான குமரகுருவும் சீட் கேட்டு அதிமுக தலைமையிடம் கடும் நெருக்கடி கொடுத்து வருவதாக தெரிகிறது. குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளரான குமரகுரு தேர்தல் ஆலோசனை கூட்டங்களில் நானே போட்டியிட வாய்ப்பு உள்ளது என்று கூறி வருவதாக தெரிகிறது.

அதைப்போல எடப்பாடியின் வலதுகரமான இளங்கோவனும் ரகசியமாக தேர்தல் வேலையில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. இதையும்மீறி முன்னாள் எம்பி காமராஜ் உள்ளிட்ட பெண் வேட்பாளர்களும் சீட் கேட்டு தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். ஆனால் இதற்கிடையே இந்த தொகுதியை தேமுதிகவும் அதிமுக தலைமையிடம் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. கடைசியில் ஜெயிக்கப்போவது எடப்பாடியின் வலது கரமா அல்லது இடது கரமா அல்லது மூன்றாவது நபரா என்ற குழப்பத்தில் தொண்டர்கள் உள்ளனர்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சிபாரிசுக்கு தான் சீட் கொடுக்க வேண்டும் என்று 2 மாஜி அமைச்சர்கள் பிரஷர் கொடுக்கிறதா சேதி வருதே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘நாடாளுமன்ற தேர்தலில் கடலோர மாவட்டம் (தனி) தொகுதியில் இலை கட்சி சார்பில் வேட்பாளரை களம் இறக்க தலைமை முடிவு செய்துள்ளது. கடலோர மாவட்டத்தில் 3 சட்டசபை, மனுநீதி சோழன் மாவட்டத்தில் 3 சட்டசபை என மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. கடலோர மாவட்ட மாஜி அமைச்சர் மணியானவர், மனுநீதி சோழன் மாவட்ட மாஜி அமைச்சர் கர்மவீரர் ஆகியோர் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே தங்களது ஆதரவாளர்களுக்கு தான் சீட் கொடுக்க வேண்டும் என தலைமையிடத்தில் போட்டி போட்டு சிபாரிசு செய்து வருகிறார்களாம்…

சிபாரிசு செய்யக்கூடியவர்கள் மாஜி அமைச்சர்கள் மட்டுமல்லாமல் , 2 பேரும் மாவட்ட செயலாளர்களாகவும் இருந்து வருவதால் தலைமை என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருந்து வருகிறது. 2 மாஜி அமைச்சர்களுக்குள் இருந்து வரும் ஈகோ பிரச்னையில் ‘மணியானவர்’ தனது ஆதரவாளர் தொழில் அதிபரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் எனவும், ‘கர்மவீரர்’ தனது ஆதரவாளரான மருத்துவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என தலைமையிடத்தில் தற்போது வரை முட்டி மோதுவதால் யாருக்கு சீட்டு கொடுப்பது என தெரியாமல் சேலத்துக்காரர் உச்சகட்ட டென்சனில் இருந்து வருகிறார்.

2 மாஜி அமைச்சர்களின் சிபாரிசுகளில் யாராவது ஒருவருக்கு சீட் வழங்கினால் தேர்தலில் உள்ளடி வேலை வலுவாக இருக்கும் என சொந்த கட்சிக்குள்ளே பேசிகிட்டாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சின்னமம்மியின் ஆதரவாளர்கள் விரக்தியின் உச்சத்தில் இருப்பதற்கு காரணம் என்ன..’’ ‘‘இலைகட்சியில் ஒரே டீமாக பயணித்த சேலத்துக்காரரு, தேனிக்காரரு, குக்கர்காரரு என்று எல்லோரும் ஆளுக்கொரு கிளையாக இருந்து பொலிடிக்கல் பண்றாங்க. பரபரக்கும் பார்லிமென்ட் களத்தில் தங்களின் இருப்பை ஏதாவது ஒரு விதத்தில் காட்டிக்கிட்டே இருக்காங்க.

ஆனால் மம்மியை இழந்த நேரத்தில் இவர்களுக்கு எல்லாம் அஸ்திவாரமாக இருந்து வழி நடத்தினவங்க எங்க சின்னம்மம்மி. ஒட்டுமொத்த கட்சியும் அவங்க கையிலதான் இருந்தது. ஆனால் இவங்க எல்லாரும் இப்ப தனித்தனியா நின்னு ஒரு கூட்டத்தை வழிநடத்திக்கிட்டு இருக்காங்க. இவங்க எல்லாத்தையும் விட பெரிய கூட்டம் சின்னமம்மி கிட்ட இருக்கு.

ஆனா அவங்க ஏன் பொறுமையாக இருக்காங்கன்னுதான் தெரியல. எலக்‌ஷன் டைமில் நாமளும் ஆக்டிவா இருக்கோமுன்னு காட்டினால் தானே, நம்மையும் நாலுபேரு மதிப்பாங்க. நாங்க எப்ப கேட்டாலும் பொறுத்திருந்து பாருங்கன்னு மட்டும்தான் சொல்றாங்க. நாங்க எத்தனை நாளைக்கு தான் பொறுத்தே இருக்கிறது என்ற குரல்கள் இப்போது கேட்க ஆரம்பிச்சிருக்காம். அதிலும் சேலத்துக்காரரின் சொந்த ஊரில் இருந்து இந்த குரல் அதிகம் கேட்குதாம்…’’ என்றார் விக்கியானந்தா.

 

Related posts

பெண் எம்.பி தாக்கப்பட்ட விவகாரம் கெஜ்ரிவாலின் உதவியாளர் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும்: டெல்லி மகளிர் ஆணையம் உத்தரவு

கேரளாவில் 4 நாட்களுக்கு பலத்த மழை

10ம் வகுப்பு தேர்வில் தோல்வி காரணமாக மகன் மாயம்: காவல் நிலையத்தில் தந்தை புகார்