உச்ச நீதிமன்றத்தில் நெகிழ்ச்சி பிரிவு உபசார விழாவில் கண்ணீர் சிந்திய நீதிபதி

புதுடெல்லி: ‘எனக்கு ஓய்வே கிடையாது. இனி வாழ்க்கையில் புதிய இன்னிங்சை தொடங்குவேன்’ என உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா தனது பிரியாவிடை நிகழ்ச்சியில் கண்ணீர் சிந்தியபடி உருக்கமாக பேசினார். உச்ச நீதிமன்றத்தில் தற்போதைய 4வது மூத்த நீதிபதியான எம்.ஆர்.ஷா நேற்றுடன் ஓய்வு பெற்றார். அவரது கடைசி பணிநாளில், தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான சம்பிரதாய அமர்வில் பிரியாவிடை நிகழ்ச்சி நடந்தது. இதில், நீதிபதி ஷா உடனான பணிக்காலம் குறித்து சந்திரசூட் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

பின்னர், ஓய்வு பெற்ற நீதிபதி ஷா பேசுகையில், ‘‘நான் ஓய்வு பெறும் நபர் அல்ல. எனது வாழ்க்கையில் புதிய இன்னிங்சை தொடங்கப் போகிறேன். புதிய இன்னிங்சை விளையாட எனக்கு வலிமையையும் தைரியத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் தர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். எனது பணிக்காலத்தில் யாரையாவது காயப்படுத்தும் வகையில் பேசிய இருந்தால் அதற்காக மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’’ என தழுதழுத்த குரலில் கண்ணீர் சிந்தியபடி உருக்கமாக பேசினார். இதனால் அங்கிருந்த அனைவரும் உணர்ச்சிவசப்பட்டனர். கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் எம்.ஆர்.ஷா. இவர் ஓய்வு பெறுவதால் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆகக் குறைந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 34 ஆகும்.

Related posts

விமான நிறுவன ஊழியர்கள் போராட்டத்தால் 8 விமானங்கள் ரத்து; 25 ஊழியர்கள் பணிநீக்கம்.! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அதிரடி

தென் சென்னை மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 2 கண்காணிப்பு கேமராக்கள் பழுது

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு