தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் 60 இடங்களில் ஐடி ரெய்டு: ஜவுளி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், ஓட்டல்களில் நடந்தன

சென்னை: தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் உள்ள ஜவுளி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், ஓட்டல்களில் மொத்தம் 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் அட்சய திருதியை மற்றும் கோடை விடுமுறை ஆரம்பம் ஆகியுள்ளதால், நகை மற்றும் ஜவுளிக் கடைகளில் விற்பனை அதிகரித்து வருகிறது. பல கடைகளில் வருமானத்தை முறையாக கணக்கு காட்டவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் விற்பனையை குறைத்து காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, சென்னை, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய இடங்களில் உள்ள ரியல் எஸ்டேட், பீடி தொழில் செய்யும் நிறுவனங்கள், ஜவுளி கடைகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

அதேபோல, கடலூர், விழுப்புரம், கரூர், குளித்தலை, திருப்பூர், நாமக்கல், நெய்வேலி உள்ளிட்ட நகரங்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நிறுவனங்களிலும் இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், கோவை, புதுவை ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தைப்போல, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பகுதியில் உள்ள 60க்கும் மேற்பட்ட கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகே உள்ள பட்டு சேலை கடைகளில் வருமான வரி துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்கின்றனர். மேலும், அதே நிறுவனத்துக்குச் சொந்தமான சென்னை தியாகராய நகரில் உள்ள பட்டு புடவை கடையில் வருமான வரி சோதனை. இன்று காலை 9மணி முதல் வருமான வரித்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது. இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இகா முன்னேற்றம்

சில்லி பாயின்ட்…

ராஜஸ்தான் ராயல்ஸ் ராஜநடை: லக்னோவை வீழ்த்தி 8வது வெற்றி