செங்குன்றம் அருகே ரசாயன கிடங்கில் இருந்து வெளியேறும் நச்சுபுகை: கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்படுவதாக மக்கள் புகார்..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே ரசாயன கிடங்கில் இருந்து வெளியேறும் புகையால் மக்கள் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். செங்குன்றம் அடுத்த பாயசம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான ரசாயன கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் கழிவறைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் பிளிச்சிங் பவுடர், கேஸ்டிக் சோடா ஆகியவை சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு இந்த கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு, தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த நிலையில் அந்த கிடங்கில் இருந்து அதிகாலை முதல் வெள்ளை நிறத்தில் புகை வெளியேறி வருகிறது.

அந்த பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சி அளிப்பதால் கண் எரிச்சல், மூச்சு திணறல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். தீ விபத்தால் சேதமடைந்த பொருட்களை குழி தோண்டி புதைக்காமல் மேலோட்டமாக புதைத்ததே இந்த புகை வெளியேறுவதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். லாரிகளில் மணல் கொண்டுவரப்பட்டு கிடங்கில் இருந்து வெளியேறும் புகையை கட்டுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கிடங்கில் ஆபத்தான முறையில் பொருட்கள் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related posts

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது!

மே 15ம் தேதி தொடங்கவிருந்த அண்ணா பல்கலை. பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கர்நாடக பாஜக நிர்வாகி தேவராஜே கவுடா மீது வழக்குப்பதிவு