வெளிநாட்டவர்கள் உள்பட 100 பேருக்கு விற்பனை சென்னையில் போலி பாஸ்போர்ட் விசா தயாரித்த 3 பேர் அதிரடி கைது: இலங்கையில் இருந்து பேப்பர் வரவழைத்தது அம்பலம்; கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி பரபரப்பு தகவல்

சென்னை: வெளிநாட்டைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோருக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து விற்பனை செய்து வந்த மோசடி கும்பலை சேர்ந்த 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்கள், இலங்கையில் இருந்து பாஸ்போர்ட் புத்தகம் தயாரிக்க பயன்படுத்தும் பேப்பர் வரவழைத்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இலங்கை, வங்கதேசம் போன்ற வெளிநாட்டு நபர்கள் போலியான இந்திய பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல முயன்றனர். அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு பிடித்து சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அதன்படி மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி உத்தரவுப்படி துணை கமிஷனர் நாகஜோதி, கூடுதல் துணை கமிஷனர் பிரபாகரன், உதவி கமிஷனர் சரஸ்வதி, இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது. அதில், கைது செய்யப்பட்ட வெளிநாட்டினர் அளித்த தகவலின்படி, சென்னை ராயபுரத்தை சேர்ந்த முகமது ஷேக் இலியாஸ் (54) என்பவர் மூலம் போலி பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. இதற்காக பல லட்சம் ரூபாய் கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளிநாட்டினருக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து விற்பனை செய்த முகமது ஷேக் இலியாசை கடந்த 20ம் தேதி அதிரடியாக கைது செய்தனர்.

அவரை காவலில் எடுத்து நடத்திய விசாரணையில், போலி பாஸ்போர்ட் மற்றும் போலி விசா தயார் செய்ய திருவொற்றியூரை சேர்ந்த சிவகுமார் (43), ராயபுரத்தை சேர்ந்த முகமது புகாரி (42) ஆகியோருடன் இணைந்து, இலங்கை, வங்கதேசம், பிரிட்டன் போன்ற நாடுகளின் போலி பாஸ்போர்ட்கள், போலியான விசா தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதன்படி 100க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட் மற்றும் போலி விசா தயாரித்து வெளிநாட்டு நபர்கள் மற்றும் உள்நாட்டு நபர்களுக்கு விற்பனை செய்து இருந்ததும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் முகமது ஷேக் இலியாஸ் அளித்த தகவலின்படி, போலி பாஸ்போர்ட் தயாரித்து விற்பனை செய்த சிவகுமார், முகமது புகாரி ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி பாஸ்போர்ட், விசா தயாரிக்க பயன்படுத்திய போலியான பாஸ்போர்ட்கள், பாஸ்போர்ட் பேப்பர்கள், இந்திய அரசு மற்றும் வெளிநாடுகளின் போலியான ரப்பர் ஸ்டாம்புகள், அதை தயாரிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர், ஸ்டாம்ப் இயந்திரம், 2 செல்போன் என மொத்தம் 160 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரித்து விற்பனை செய்து வந்த 3 பேரை கைது செய்துள்ளோம். இந்த மோசடி நபர்கள் போலியான பாஸ்போர்ட்கள் தயாரிக்க ஒரிஜினல் பாஸ்போர்ட்டின் வெளிபக்கம் மட்டும் அவர்கள் எடுத்து, அதனுடன் இலங்கையில் இருந்து ஏஜென்ட்கள் மூலம் வரவழைக்கப்பட்ட பாஸ்போர்ட் தாள்கள் சேர்த்து தயாரித்துள்ளனர். வழக்கமாக பாஸ்போர்ட்களில் உள்ள பெயர் மற்றும் எண்கள் சிறு துளைகள் வடிவில் இருக்கும். அதை அவர்கள் ஊசி மூலம் வடிவமைத்துள்ளனர். பொதுவாக ஒரிஜினல் பாஸ்போர்ட்டில் உள்ள எண்களின் துளைகள் பின்பக்கத்தில் போட்டபடி தெரியாது.

ஆனால் இவர்கள் தயாரித்து கொடுத்த பாஸ்போர்ட்களில் கையால் ஊசி மூலம் துளைபோட்டு தயாரித்துள்ளனர். எனவே பின்புறம் பார்த்தாலே அது கைகளால் துளை போட்டது தெரிகிறது. அதை வைத்தே ஒரிஜினல் எது, போலி எது என்று தெரிந்துவிடும். இவர்கள் வெளிநாடுகளுக்கு போலி பாஸ்போர்ட்கள் தயாரித்து கொடுத்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் ராயபுரத்தை சேர்ந்த முகமது புகாரி வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் இவர்கள் போலி விசாவும் தயாரித்து கொடுத்துள்ளனர். இந்த மோசடி தொடர்பாக தற்போது விசாரணை நடந்து வருகிறது என்றார்.

Related posts

மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

ரூ4.75 கோடி தங்கம் கடத்தியவர் கைது

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை: மகன்கள், நண்பர்களிடம் விடிய விடிய விசாரணை