தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்குவது உலகின் மிகப்பெரிய ஊழல்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் கருத்து

டெல்லி: தேர்தல் பத்திரம் மூலம் நடந்திருப்பது இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் அல்ல; உலகின் மிகப்பெரிய ஊழல் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பிரபல பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் தெரிவித்துள்ளார். தேர்தல் நிதி வழங்க அறிமுகம் செய்யப்பட்ட தேர்தல் பத்திரத் திட்டதில் வெளிப்படை தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்தனர். அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து தகவல்களையும் தேர்தல் ஆணையத்திடம் அளிக்குமாறு ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டது.

ஆனால், அதனை உடனே நிறைவேற்றாமல் ஸ்டேட் வங்கி காலம் தாழ்த்திய நிலையில் பல்வேறு கண்டனங்களுக்கு பிறகு தேர்தல் பத்திர வரிசை எண்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டன. அதில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகளவில் நன்கொடை பெற்ற கட்சியாக பாஜக முதலிடத்தில் உள்ளது. மேலும், தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற பாஜக மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றனர். இந்நிலையில், நிர்மலா சீதாராமனின் கணவரும், பிரபல அரசியல் பொருளாதார அறிஞருமான பரகலா பிரபாகன் தேர்தல் பத்திரங்கள் குறித்து தனியார் செய்து நிறுவனத்துக்கு பேட்டியளித்தார்.

அப்போது தேர்தல் பத்திர மோசடி விவகாரம் பாரதிய ஜனதாவுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்று கூறிய அவர்; இது விரைவில் பூதாகரமாக உருவெடுக்கும் என்று தெரிவித்தார். தேர்தல் பத்திர விவகாரம் பாஜகவையும், ஒன்றிய அரசையும் கடந்து பொதுமக்களிடம் செல்ல தொடங்கிவிட்டதாக கூறியுள்ள பிரபாகர், உண்மையில் செல்ல வேண்டுமென்றால் தேர்தல் பத்திர ஊழல் என்பது இந்தியாவில் நடந்த மிகப் பெரிய ஊழல் அல்ல, உலகிலேயே மிகப் பெரிய ஊழல் என்று விமர்சித்துள்ளார். தேர்தல் பத்திரம் ஊழல் பற்றி மக்கள் புரிந்துகொள்ள தொடங்கி இருப்பதால் தேர்தலில் பாஜக கடுமையாக தண்டிக்கப்படும் என்று பரகலா பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

Related posts

வடசென்னை அனல் மின்நிலையத்தில் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நாளை வெளியீடு: மாணவர்கள் செல்போனுக்கு உடனடி தகவல்