திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 36 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று 36 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் ஏழுமலையான் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் புதன்கிழமையான நேற்று 79,207 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 41,427 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.

கோயில் உண்டியலில் ரூ3.19 கோடி காணிக்கை செலுத்தினர். இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 32 அறைகள் நிரம்பியுள்ளது. அறைகள் அனைத்தும் நிரம்பியதால் பக்தர்கள் திருமலையில் உள்ள வெளிப்புற சுற்றுச்சாலையில் கங்கம்மா கோயில் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 36 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டி இருக்கும். அதே நேரத்தில் ரூ300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு அன்னதானம், மோர் ஆகியவை தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. கோயிலில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. அறைகள் கிடைக்காத பக்தர்கள் இரவு நேரங்களில் தேவஸ்தானம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் தங்கியுள்ளனர்.

Related posts

அநீதிக்கு எதிரான வெற்றி நம் நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும்: கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

பட்டாசு ஆலைகளின் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தல்..!!

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையருடன் இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்திப்பு..!!