வேட்பாளரா நிக்க வச்சி கடன்காரனா ஆக்கிட்டீங்களே என புலம்பும் இலை பிரமுகரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தேர்தல் செலவுக்கு கொடுத்த தொகையை அமுக்கியது தொடர்பா ரிசல்ட்டுக்கு முன்னாடியே விசாரிக்க சொன்னது தாமரைக்கட்சி நிர்வாகிகளுக்கு கிலிய ஏற்படுத்தியிருக்கிறதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஆமா.. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தூங்கா நகரில் தாமரைக் கட்சிக்கென வாக்குச்சாவடி முகவர்களை தேற்றுவது சவாலான விஷயமாக இருந்துச்சாம்.. தூங்கா நகரத்து எல்லைக்குள் மட்டும் 966 பூத்களுக்கு ஒவ்வொரு பூத்திற்கும் ஒருவரை நியமித்திடவே பெரும் போராட்டம் நடத்த வேண்டி இருந்ததாம்.. ஏற்கனவே சிலரை சந்தித்ததில் பெரும் தொகை கிடைக்கும் ஆர்வத்தில் அந்த சிலர் முன்வந்து இரு வாரங்களுக்கும் மேலாக பிரசார பணியிலும் உதவி இருக்காங்க.. கடைசி நேரத்தில் தாமரை நிர்வாகிகள் ஆளுக்கு ரூ.3 ஆயிரத்தை தந்து, இந்த தொகையையே வாக்குச்சாவடி முகவர் பணிக்கும் வைச்சிக்கிடுங்கன்னு சொன்னாங்களாம்.. இதை கேட்டு, நொந்து போன அந்த சிலரும் கடைசி நேரத்தில் கல்தா கொடுத்துட்டாங்களாம்.. இதனால முகவர் இல்லாமலேயே பல பூத்கள் கிடந்ததாம்.. கடைசி நேரத்தில் சில பூத்களுக்கு கூடுதல் தொகை தருவதாகக் கூறி ஆட்களை பிடிச்சிருக்காங்க.. சேவை அமைப்பின் மூலம் அத்தனை வாக்குச்சாவடிகளுக்கும் முகவர்களை நியமித்திருப்பதாக கட்சி நிர்வாகிகள், தலைமைக்கு தகவல் தெரிவித்தாலும் பணம் விநியோகமின்றி முகவர்கள் வர முன்வராததுடன், வந்தவர்களுக்கும் உரிய பணம் விநியோகிக்கப்படவில்லையாம்.. தேர்தல் செலவிற்கென நகருக்கே ரூ.5 கோடிக்கு மேல் வந்தும், ஒரு கோடியை கூட செலவழிக்காமல் மீதித்தொகையை அமுக்கி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டும் கட்சி வட்டாரங்களில் ஓங்கி ஒலிக்கிறது. இதுகுறித்த புகார்களின் பேரில் கட்சித்தலைமை தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பித்திருக்கிறதாம்.. இது, தூங்கா நகரத்து தாமரைக் கட்சி நிர்வாகிகளை கிலி பிடிக்க வைத்திருக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘டெல்டா மாவட்டத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக தாமரை நிர்வாகிகள் உள்ளடி வேலை பார்த்ததா ஆதாரத்தோடு புகார் பறந்திருக்கிறதா சொல்றாங்களே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தாமரை கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இதில் டெல்டா மாவட்டத்தில் உள்ள 6 எம்பி தொகுதிகளில் மலைக்கோட்டை தொகுதியில் தாமரை கட்சி கூட்டணி வேட்பாளர்களாக குக்கர் கட்சி வேட்பாளரும், மாயூரம் தொகுதியில் மாம்பழம் கட்சி வேட்பாளரும் போட்டிப்போட்டாங்க.. மற்ற தொகுதிகளான டெக்ஸ்டைல்ஸ், கடலோரம், நெற்களஞ்சியம், சின்ன வெங்காயம் தொகுதிகளில் தாமரை கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதில் மாயூரம் தொகுதி, மலைக்கோட்டை தொகுதி கூட்டணி கட்சிக்கு கொடுக்கப்பட்டதால் இந்த 2 மாவட்ட தாமரை கட்சி நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் முறையாக தேர்தல் வேலை பார்க்க வில்லையாம்.. இறுதி கட்ட பிரசாரத்தில் கூட கூட்டணி கட்சி வேட்பாளர்களுடன் வாக்கு சேகரிக்க செல்ல வில்லையாம்.. இதற்கு பதிலாக உள்ளடி வேலையில் தான் இறங்கினாங்களாம்.. இந்த தகவல் தெரிஞ்ச ரெண்டு வேட்பாளர்களும் வெளியே எதுவும் காட்டிக்கொள்ளாமல் பிரசாரம் செய்தாங்களாம்… தேர்தல் முடிந்ததும் தங்களுக்கு எதிராக உள்ளடி வேலையில் இறங்கிய தாமரை கட்சி நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் குறித்து அவர்களது கட்சி தலைமையிடத்தில் தங்களது ஆதங்கத்தை கொட்டினார்களாம்… அதிர்ச்சிக்குள்ளான வேட்பாளர்களின் தலைமையிடம் தங்களது வேட்பாளர்களுக்கு எதிராக தாமரை கட்சி நிர்வாகிகள் வேலை பார்த்த விவகாரம் தொடர்பா அவர்களது மாநில தலைவரிடம் ஆதாரத்துடன் புகாராக தெரிவிச்சிருக்காங்க.. இதுதொடர்பா டெல்டா மாவட்டத்தில் ரகசிய விசாரணையும் நடத்தப்பட்டு இருக்காம்.. இதனால், தேர்தல் முடிவு வெளியான பிறகு தாமரை கட்சி மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை இருக்கும்னு டெல்டா மாவட்ட தாமரை கட்சிக்குள்ளே பரவலாக பேசப்பட்டு வருகிறது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வேட்பாளரா நிற்க வெச்சி, என்னை கடன்காரனா ஆக்கிட்டாங்களே என்று புலம்புகிறாராமே ஒருத்தர்..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கிரிவல தொகுதியில் போட்டியிட்ட திருப்பதி சாமி பேரு கொண்ட இலை கட்சிக்காரரு, தேர்தல் முடிந்ததில் இருந்து ஆளையே காணலையாம். கடன் பிரச்சனை இப்பவே கழுத்தை பிடிக்கிறதால, செல்போனை சுவிட்ச் ஆப் பண்ணிட்டாராம். எங்க இருக்காருன்னே தெரியலையாம். கட்சி தலைமை எல்லாத்தையும் கவனிச்சுக்கும்னு ஆசை வார்த்தைகூறி, ஒன்றிய செயலாளரா இருந்தவரை தேர்தல் களத்தில் இறக்கிவிட்டாங்களாம் இரண்டு மாஜி மந்திரிகளும். ஆனால், கடைசி வரைக்கும் கட்சி தலைமையிடம் இருந்து எந்த கவனிப்பும் இல்லையாம். சேலத்துக்காரரு பிரசாரத்துக்கு வந்துபோனா நிலைமை சரியாகும்னு கனவு கண்டாராம் வேட்பாளர். ஆனால், பிரசாரத்துக்கு வந்தவரு, வெறுங்கையை வீசிட்டு போயிட்டாராம். அதனால், இருக்கிற சொத்துக்களை எல்லாம் அடமானம் வச்சி, அங்க இங்கனு கடனை வாங்கி செலவழித்த வேட்பாளரு, இப்ப விழி பிதுங்கியிருக்கிறாராம். மாவட்ட பொறுப்புல இருக்கிற விவசாய பேர் கொண்ட மாஜியும், மீசைக்கார மாஜியும், திட்டமிட்டு தன்னை களத்தில் இறக்கிவிட்டு, கடைசியில கையை விரிச்சிட்டாங்களேனு இலை வேட்பாளரு புலம்புறாராம். ஒன்றிய கவுன்சிலருக்கு நின்னு செலவழிச்சேன், மனைவியை மாவட்ட கவுன்சிலருக்கு நிக்க வக்சி செலவழிச்சேன். ரெண்டுலயும் தோத்து இப்பத்தான் கொஞ்ச கொஞ்சமா எழுந்து வந்தேன். மீண்டும் இந்த தேர்தலில் நிக்க வச்சி கடன் காரனாக்கிட்டாங்களேனு நெருங்கிய வட்டாரங்களில் வேதனைப்படுறாராம் இலை கட்சி வேட்பாளர்..’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

தனியார் பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

போதைப்பொருளை தடுக்க தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!