மணிப்பூர் போல மேற்கு வங்கத்தில் இனகலவரம் தூண்ட முயற்சிக்கிறது பாஜ: மம்தா பரபரப்பு குற்றச்சாட்டு

சல்போனி: மணிப்பூரைப் போல மேற்குவங்கத்தில் இனக்கலவரத்தை தூணட பாஜ முயற்சிப்பதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மேற்குவங்கத்தில் அதிகளவில் வசிக்கும் குர்மி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மேற்குவங்கம் ஜார்கிராம் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு திரும்பிய திரிணாமுல் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி, அமைச்சர் பிர்பாஹா ஹன்ஸ்தாவின் வாகனங்கள் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை குர்மி இனத்தை சேர்ந்தவர்கள் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் குர்மி சமூகத்தினர் போன்ற வேடத்தில் பாஜ இந்த தாக்குதலை நடத்தியதாக திரிணாமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து மேற்குவங்கம் பாசிம் மெதினிபூர் மாவட்டம் சல்போனியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, “மணிப்பூரில் இருசமூகத்தினருக்கு இடையே நடந்த மோதலின் பின்னணியில் பாஜ இருந்தது. தற்போது மேற்குவங்கத்திலும் பழங்குடியினருக்கும், குர்மி சமூகத்துக்கும் இடையே கலவரங்களை ஏற்படுத்த பாஜ முயற்சி செய்கிறது. மேற்குவங்கத்தில் இனக்கலவரத்தை தூண்ட நினைப்பவர்கள் தப்ப முடியாது” என்று ஆவேசமாக தெரிவித்தார். இதனிடையே ஜார்கிராம் மாவட்டத்தில் அபிஷேக் பானர்ஜியின் பாதுகாப்பு வாகனம் மீது கல்வீசி தாக்கியதாக அஜீத் மஹதோ, அனித் மஹதோ, மன்மோஹித் மஹதோ மற்றும் அனுப் மஹதோ ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் 4 பேரும் குர்மி இனத்தை சேர்ந்தவர்கள் போல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 4 பேரையும் 3 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Related posts

திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

7 நாளுக்குப்பின் தொட்டபெட்டா சிகரத்தை ரசித்த சுற்றுலா பயணிகள்

தேசிய வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.7.5 கோடி மோசடி: மேலாளர் உட்பட 3 பேர் கைது