தேசிய வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.7.5 கோடி மோசடி: மேலாளர் உட்பட 3 பேர் கைது

சிவகாசி: சிவகாசி வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.7.5 கோடி மோசடி செய்த வங்கி மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி பஸ் நிலையம் அருகே காந்தி ரோட்டில் தேசிய வங்கி கிளை உள்ளது. இங்கு வங்கியின் நெல்லை மண்டல மேலாளர் ரஞ்சித், கடந்த பிப்ரவரி இறுதியில் தணிக்கை செய்தார். அப்போது, பல நகைகள் நீண்ட காலமாக திருப்பப்படாமல், வட்டி மட்டும் செலுத்தப்பட்டு வருவது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த கணக்குகளில் உள்ள நகைகளை ஆய்வு செய்தபோது போலி நகைகள் என்பது உறுதியானது. இதுகுறித்து ரஞ்சித் நடத்திய விசாரணையில், நகை மதிப்பீட்டாளர் முத்துமணி உதவியுடன், சிவகாசியில் நகைக்கடை நடத்தி வரும் தூத்துக்குடியை சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் போலி நகைகளை அடகு வைத்து ரூ.7.5 கோடி வரை மோசடி செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து ரஞ்சித் அளித்த புகாரின்பேரில், சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கை கடந்த மார்ச் 21ம் தேதி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம், சிவகாசி டவுன் போலீசார் ஒப்படைத்தனர். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், கடந்த மார்ச் மாதம் நகைக்கடை உரிமையாளர் பாலசுந்தரம், நகை மதிப்பீட்டாளர் முத்துமணி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில், வங்கி மேலாளரான பீகார் மாநிலத்தை சேர்ந்த குமார் அமரேஷ் (37), துணை மேலாளரான திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த் (28), உதவி மேலாளரான தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த முகேஷ்குமார் (29) ஆகியோர் மோசடிக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் சிவகாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மூவரும் நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related posts

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி அருகே அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதல்

3வது முறையாக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக பிரதமர் மோடி 20ம் தேதி சென்னை வருகை: 2 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான தேர்தல் ஆணைய அறிவிப்பு தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடு