பெங்களூருவில் திறந்த காரில் பயணம் பிரதமர் மோடி 26 கி.மீ. பிரமாண்ட ரோட் ஷோ: வழி நெடுகிலும் பூக்கள் தூவி வரவேற்பு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பெங்களூருவில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, 26 கி.மீட்டர் தூரத்துக்கு பிரமாண்ட ரோட் ஷோ நடத்தினார். வழி நெடுகிலும் பூக்கள் தூவி மக்கள் வரவேற்பு அளித்தனர். கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து மூன்று கட்டங்களாக பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை நடத்தி வருகிறார். கடந்த 29ம் தேதி பீதர், விஜயபுரா, பெலகாவி மாவட்டங்களில் நடந்த பொதுக்கூட்டத்திலும் அன்று மாலை பெங்களூருவில் சாலை பேரணி நடத்தினார். மறுநாள் 30ம் தேதி கோலார், ராம்நகரம், ஹாசன் மாவட்டங்களில் பொதுக்கூட்டத்தில் பேசிய பின், மைசூருவில் சாலை பேரணி நடத்தினார்.

அதை தொடர்ந்து கடந்த 2ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரை தொடங்கிய பிரதமர் சித்ரதுர்கா, விஜயநகர், ரெய்ச்சூர் மாவட்டங்களில் பொதுக்கூட்டத்தில் பேசினார். கலபுர்கி மாநகரில் பிரமாண்ட சாலை பேரணி நடத்தினார். மறுநாள் 3ம் தேதி தென்கனரா, வடகனரா மற்றும் பெலகாவி மாவட்டங்களில் நடந்த மூன்று தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டங்களில் பேசினார். மூன்றாவது கட்டமாக நேற்று முன்தினம் முதல் தேர்தல் பரப்புரை தொடங்கியுள்ள பிரதமர் மோடி, துமகூரு, பல்லாரி மாவட்டங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் பங்கேற்றபின், இரவு பெங்களூரு திரும்பி, ஆளுநர் மாளிகையில் தங்கினார். நேற்று காலை 9.15 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டு மல்லேஸ்வரம் எச்க்யூடிசி ஹெலிபெட்டில் இருந்து ஜே.பி.நகர் லோயோலோ கல்லூரி மைதானத்தில் உள்ள ஹெலிபேட் வந்து இறங்கினார்.

காலை 10 மணிக்கு சோமேஸ்வர சபா பவன் அருகில் இருந்து பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த திறந்த வாகனத்தில் சாலை பேரணி தொடங்கினார். பிரதமருடன் பெங்களூரு மத்திய தொகுதி மக்களவை உறுப்பினர் பி.சி.மோகன், பெங்களூரு தெற்கு மக்களவை தொகுதி உறுப்பினர் தேஜேஷ்வி சூர்யா ஆகியோர் உடனிருந்தனர். ஜே.பி.நகர் 5வது ஸ்டேஜ், ஜெயநகர் 4வது பிளாக், ஜெயநகர் 5வது பிளாக், சவுத் எண்ட் சர்க்கிள், மாதவராவ் சர்க்கிள், ராமகிருஷ்ண ஆஷ்ரம், உமா திரையரங்க சிக்னல், மைசூரு சிக்னல், டோல்கேட் சிக்னல், கோவிந்தராஜ்நகர், சங்கரமடம் சவுக், மல்லேஸ்வரம் சர்க்கிள் வழியாக மல்லேஸ்வரம் 18வது குறுக்கு சாலையில் உள்ள சம்பிகே சாலையில் நிறைவுசெய்தார்.

மாநகரில் 13 சட்டப்பேரவை தொகுதியில் 26 கி.மீட்டர் மோடியின் சாலை பேரணி நடந்தது. மோடி பயணம் செய்த சாலையில் இரு புறமும் பாஜ தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் கூடி வரவேற்றனர். அவர் மீது பூக்கள் தூவி வாழ்த்தினர். தொண்டர்களை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தப்படி சென்றார். 50க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடத்தப்பட்டது. சிறுமிகள் பங்கேற்ற பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது. மோடியின் சாலை பேரணி காரணமாக மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. 26 கி.மீட்டர் சாலை பேரணி நடத்தியதால், 34 முக்கிய சாலைகள் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

* ஆம்புலன்ஸ் சிக்கியது
பிரதமர் நடத்திய சாலை பேரணியின் போது, ஜெயநகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் திடீரென இரண்டு ஆம்புலன்ஸ் வந்து கூட்டத்தில் சிக்கியது. டிரைவர்கள் ஹாரன் அடித்தும் வழி விடாமல் 10 நிமிடங்கள் காத்திருந்த நிலையில், பேரணி கடந்தபின் ஆம்புலன்ஸ் சென்றது. இது அப்பகுதியில் பரபரப்பு எற்படுத்தியது.

* மோடி வருகையால் 5,000 மரங்கள் கட்
பெங்களூருவில் பிரதமர் நேற்றும், இன்றும் பங்கேற்கும் சாலை பேரணிக்கு இடையூறாக இருப்பதாக கூறி அவர் பயணம் செய்யும் சாலையில் இருந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும், இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும். முன் அனுமதி பெறாமல் சாலையோரங்களில் இருந்த மரங்கள் வெட்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரமேஷ்பாபு, மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ்குமார் மீனாவிடம் புகார் கொடுத்துள்ளார்.

Related posts

ஆந்திராவில் 81.86% வாக்குப்பதிவு: மாநில தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

மத அடிப்படையிலான பட்ஜெட், கல்வி, வேலைவாய்ப்பை பாஜ அனுமதிக்காது: பிரதமர் மோடி உறுதி

தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் அமைதியாக சிறப்பாக நடத்திய அதிகாரிகளுக்கு விருந்து வைத்த கலெக்டர்: வீடியோ வைரல்