கட்சி மாறிய அம்மணி சொந்த ஊருக்கு போக முடியாத அவஸ்தையை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘பசி உசிரே போகுது.. மாநில தலைவருக்காக காத்திருக்க முடியாது என டென்சனில் புறப்பட்டு சென்ற தொண்டர்கள் பற்றி சொல்லுங்களேன்’’ என்று ஆரம்பித்தார் பீட்டர் மாமா.
‘‘தாமரை கட்சி சார்பில் டெக்ஸ்டைல்ஸ் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் கூட்டம் டெக்ஸ்டைல்ஸ் மைய பகுதியில் நேற்று முன்தினம் நடந்தது. மாநில தலைவர் பிற்பகல் 2 மணியளவில் தேர்தல் பிரசாரத்திற்கு வரக்கூடும் என்பதால் அதிக அளவில் கூட்டம் இருக்க வேண்டும் என முதல்நாளே மாவட்ட முக்கிய பொறுப்பாளர்களுக்கு மேலிடத்தில் இருந்து அதிரடி உத்தரவு வந்ததாம். இதனையடுத்து வேடசந்தூர், கடவூர், கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட டெக்ஸ்டைல்ஸ் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து தொண்டர்கள் வேன், ஆட்டோக்களில் அழைத்து வரப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே உட்கார வைக்கப்பட்டிருந்தனர். ஆனா, 4 மணியாகியும் மாநில தலைவர் வரவில்லை. இதனால் கூட்டத்திற்காக அழைத்து வரப்பட்டு இருந்தவர்கள் எவ்வளவு நேரம் மாநில தலைவருக்காக காத்து இருப்பது. அவருக்கு எப்போதும் இதே வேலைதான். சொன்ன நேரத்துக்கு வருவது கிடையாது என மாநில தலைவரை வாய்க்கு வந்தபடி திட்டியவாறு வேன், ஆட்டோவை தேடி அலைந்தனர். அப்போது நிர்வாகிகள் போகாதீங்க… போகாதீங்க, மாநில தலைவர் வர்ர நேரம்தான் என அவர்களை தடுத்திருக்காங்க. ஆனா, ‘பசி உசிரே போகுது’ மாநில தலைவருக்காகல்லாம் காத்திருக்க முடியாது என வந்தவங்கள்ளாம் டென்சனில் அங்கிருந்து நடையை கட்டிட்டாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கடைசி நேரத்தில் கூட்டணி அமைந்ததால் துட்டுக்கு தவிக்கிறாங்களாமே வேட்பாளர்கள்..”
என்றார் பீட்டர் மாமா.
‘‘தமிழ்நாட்டில் திமுக கூட்டணியை தவிர்த்து அதிமுக, பாஜ ஆகிய கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணியை தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்த பிறகு தான் இறுதி செய்தது. அதிலும் பாஜவுடன், பாமக கூட்டணி திடீரென நள்ளிரவில் முடிவானது. பாமக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டனர். ஆனால் தேர்தல் செலவுகளுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கின்றனர். கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் பாஜ கூட்டணியில் பாமக போட்டியிடுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ததோடு தேர்தல் பணி முடிந்துள்ளது. அடுத்தக்கட்டமாக முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு, மாவட்ட, நகர, ஒன்றிய அளவில் செயல்வீரர்கள் கூட்டம் எதுவும் நடத்த முடியவில்லை. காரணம் துட்டு வரவில்லையாம். ஒவ்வொரு வேட்பாளரும், கையில் இருந்த காசை வைத்து வேட்புமனு தாக்கலுக்கு வந்த கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு செலவு செய்தது, கையை கடித்துவிட்டதாம். ஒவ்வொரு கிளை வாரியாக தேர்தல் செலவுக்காக வேட்பாளரை நெருங்கினால், தலைமையை எதிர்பார்த்து காத்து இருக்கிறோம். தலைமையில் இருந்து நிற்க சொன்னார்கள். நாங்கள் நின்றுள்ளோம் என கூறி வருகின்றனராம். தேர்தல் பணிகளை செய்து வாருங்கள். தலைமையில் இருந்து பணம் வந்தவுடன் கிளை வாரியாக அனுப்பி விடுகிறோம் என தவணை சொல்லி அனுப்புறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கட்சி மாறிய அம்மணி சொந்த மாவட்டத்துக்கு போக முடியாம அல்லாடறாங்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கதர் கட்சியில் இருந்து விலகி தாமரை கட்சியில் இணைந்ததால் ச.ம.உ. பதவியை இழந்த அம்மணி, சொந்த மாவட்டத்துக்கே வர முடியாத நிலையில் இருக்கிறாராம். தாமரை கட்சியில இணைந்த அவங்களுக்கு, இதுவரை அந்த கட்சியில் எந்த பொறுப்பும் வழங்கப்படலை. இடைத்தேர்தலில் அந்த தொகுதியில் போட்டியிட மீண்டும் சீட் கொடுக்கல. எம்.பி. வேட்பாளர் வாய்ப்பும் கிடைக்கல. உள்ளதும் போச்சு என்ற நிலையில் தாமரை கட்சியில் ஐக்கியமானவரை மேலும் நொந்து போக செய்யும்படியா அம்மணியை கலாய்ச்சு சமூக வலைதளங்களில் போட்டோ போட்டு வராங்களாம். நீங்க 3 முறை ஜெயிச்ச தொகுதி தானே. நீங்க வந்து பிரசாரம் பண்ணி, தாமரை கட்சிய ஜெயிக்க வைக்கணும். அப்போதான் தாமரை கட்சியில உங்க பவரு தெரியும் என அம்மணிக்கு ஆறுதல் சொல்வது போல் கிண்டலாகவும் பேசி வருகிறார்களாம். இதனால் அம்மணி பிரசாரத்துக்கும் வர மாட்டாங்கனு பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாம்பழ கட்சி மேல தேனீக்கார ஆட்கள் காண்டுல இருக்கிறதா சொல்றாங்களே..உண்மைதானா..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஆமா..சேலம் தொகுதியில மாம்பழ கட்சி போட்டியிடுது. முன்னதாக ஒரு தொகையை முன்பணமாக கட்டுங்கன்னு மேலிடம் சொல்லியிருக்கு. அதுக்கு யாரும் முன்வராத நிலையில், தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர், ஓடிப்போய் பெரும் தொகையை கட்டியிருக்காரு. இதனால அவருக்கு சீட் கொடுத்திருக்காங்க. இதனால ரெண்டாங்கட்ட நிர்வாகிகள் ரொம்பவே ஷாக்காயிட்டாங்களாம். அதே போல, வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்திருக்கு. இதுல தேனீக்காரர் கட்சிக்காரங்களை முறையா கூப்பிடலையாம். வேட்புமனுவுக்கு வந்த மாஜி எம்எல்ஏ, அறிமுக கூட்டத்துக்கு போகலயாம். கூட்டத்திற்கு போன நிர்வாகிகளை கூட பேசறதுக்கு அனுமதி கொடுக்கலையாம். இதனால நிர்வாகிங்க அப்செட் ஆயிட்டாங்க. தேனீக்காரருக்கு போகப்போக மரியாதை குறைஞ்சிக்கிட்டே வருது. எங்கு போனாலும் யாரும் மதிக்கிறதில்லை. இப்படியே போனால், தேர்தலில் மாம்பழ வேட்பாளருக்கு தகுந்த பாடத்தை புகட்டுவோமுன்னு முஷ்டியை உயர்த்துறாங்களாம் தேனீக்காரரின் ஆதரவாளர்கள்’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் பலி: ஜனாதிபதி இரங்கல்

வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் சிசிடிவிக்கள்: தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு..!!