தமிழ்நாட்டில் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு: முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கார் நிறுவனம் ரூ.20,000 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழில்துறை வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடரும் என உறுதி அளித்தார். சென்னை அடுத்த இருங்காட்டு கோட்டையில் உள்ள கார் நிறுவனம் ரூ.20,000 கோடி செலவில் தொழிற்சாலையை நவீனமயமாக்கல் மற்றும் நவீன வகை கார்கள் உருவாக்குதல், மின் வாகன மின்கலன் ஒன்று கூட்டப்பட்ட தொகுப்பு மின் வாகன மின்னேற்று நிலையங்கள் அமைத்தல் போன்ற திட்டங்களை மேற்கொள்ள உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், சென்னையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 1996ம் ஆண்டு டிசம்பர் மாதம், கலைஞர் ஹூண்டாய் நிறுவனத்தினுடைய முதல் அலகிற்கு அடிக்கல் நாட்டினார். இந்நிறுவனத்தின் ஒரு கோடியாவது காரை 2021ம் ஆண்டு ஜூன் மாதம் நான் அறிமுகம் செய்து வைத்தேன். தமிழ்நாட்டிற்கும், ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்திற்கும் இடையே உள்ள நம்பிக்கை மற்றும் கூட்டு முயற்சியின் காரணமாக இந்த நிறுவனத்தினுடைய மொத்த முதலீடு சுமார் ரூ.23 ஆயிரத்து 900 கோடி அளவிற்கு உயர்ந்துள்ளது. தற்போது ஹூண்டாய் நிறுவனம், இந்தியாவிலேயே 2வது பெரிய கார் உற்பத்தி நிறுவனமாகவும், கார் ஏற்றுமதியில், 2வது இடத்தில் இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஆட்டோமொபைல் மற்றும் அதன் பாகங்கள் தயாரிப்பில், தமிழ்நாடு, இந்தியாவிலேயே முதலிடத்தை வகிக்கிறது. அதன் அடுத்த பரிணாம வளர்ச்சியாக, மின்னூர்திகள் தயாரிப்பில் தற்போது தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உருவாகியுள்ளது. 2023ம் ஆண்டு பிப்ரவரியில் ‘தமிழ்நாடு மின்வாகன கொள்கை 2023’ வெளியிடப்பட்டது. இதன் காரணமாக, ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் இந்தியாவிற்கும், பிற உலக நாடுகளுக்கும், மின்னூர்தி தயாரித்தலுக்கான தனது நெடுங்கால முதலீட்டு திட்டத்திற்கு, முதன்மை தளமாக தமிழ்நாட்டை தேர்வு செய்துள்ளது நமக்கெல்லாம் பெருமை அளிக்கக்கூடியது. அதற்காக, தமிழ்நாடு அரசின் சார்பாக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஹுண்டாய் நிறுவனம், இருங்காட்டுக்கோட்டையில் தற்போதுள்ள தொழிற்சாலையினை, உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைக்கான மின்னூர்தி மையமாக மேம்படுத்தும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. இந்நிறுவனம், 15 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இன்றைய தினம், தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.ஆர்.பி.ராஜா, மிகவும் முனைப்புடன் செயல்பட்டு, அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நிர்வாக காரணங்களுக்காக அமைச்சர்களின் இலாக்காக்கள் மாறினாலும் தமிழ்நாடு அரசு, தொழில் துறையினருக்கு அளித்துவரக்கூடிய ஆதரவும், தொழில்துறை வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளும் என்றும் தொடரும்.
தலைவர் கலைஞருடைய ஆட்சியில் தொடங்கப்பட்டு, தமிழ்நாட்டில் பல விரிவாக்கங்களையும், வளர்ச்சி திட்டங்களையும் மேற்கொண்டு வரும் ஹூண்டாய் நிறுவனம், தற்போது 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய முன்வந்திருப்பது சாட்சியாக அமைந்திருக்கிறது. இந்த முதலீடு, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030ம் ஆண்டிற்குள், ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்திட வேண்டும் என்ற நமது லட்சிய இலக்கினை அடைவதற்கு ஒரு பாய்ச்சலாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

தொழில் துறை நிச்சயமாக ஏற்கனவே முன்னேறி வந்திருக்கிறது. இன்னும் முன்னேறப் போகிறது. காரணம், நான் தொழில்துறை நிகழ்ச்சியில் தான் அதிகம் கலந்து கொண்டிருக்கிறேன். அதுவே அதற்கு சாட்சியாக அமைந்திருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விஷ்ணு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

7 நாளுக்குப்பின் தொட்டபெட்டா சிகரத்தை ரசித்த சுற்றுலா பயணிகள்

தேசிய வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.7.5 கோடி மோசடி: மேலாளர் உட்பட 3 பேர் கைது